07 ஜூலை 2010

ஐ.நாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அரச ஆதரவுடனேயே இடம்பெற்றது.

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு எதிரில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முழுமையாக அரசாங்கத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என ஜீ.ரீஎன் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்றிருந்த காவற்துறை அதிகாரியொருவரை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ அச்சுறுத்தியதை ஊடகவியலாளர் ஒருவர் பதிவு செய்ததை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு காவற்துறையினர் சென்றமை குறித்து பாதுகாப்புச் செயலாளர் கடுமையாக சாடியுள்ளதாக அந்தச் செய்தியாளர் ஜீ.ரீஎன்னிற்குத் தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து தம்மை காவற்துறை மா அதிபரே ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு அனுப்பியதாக அந்த அதிகாரி தெரிவித்த போது, காவற்துறை மா அதிபரை தான் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்போவதாக கோத்தபாய கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தியாளர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது, விமல் வீரவன்ஸ தனது கையடக்க தொலைபேசியில் பாதுகாப்புச் செயலாளரை தொடர்பு கொண்ட போது, குறித்த காவல்துறை அதிகாரி மற்றுமொரு அழைப்பை மேற்கொண்டிருந்தார்.
"சார் பாதுகாப்பு செயலாளர் பேசுவதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறுகிறார்."
இதன் பின்னர் விமல் வீரவன்ஸ தனது கையடக்க தொலைபேசியை காவற்துறை அதிகாரியிடம் வழங்குகிறார்.
அப்போது அந்த காவற்துறை அதிகாரி‐ சார்.
பாதுகாப்புச் செயலாளர்: அந்த பக்கத்திற்கு காவற்துறையை அனுப்ப வேண்டாம் என ஐ.ஜீயிடம் கூறினேன்.
காவற்துறை அதிகாரி: ஐ.ஜீ. கூறியதால்தான் வந்தோம்.
பாதுகாப்புச் செயலாளர்: உடனடியாக அந்த இடத்தில் இருந்து காவற்துறையினரை அப்புறப்படுத்துங்கள். அனைத்து காவற்துறையினரையும் அப்புறப்படுத்துங்கள்.
காவற்துறை அதிகாரி: சரி சார் சரி.
பாதுகாப்புச் செயலாளர்: தேவையில்லாத வேலைதானே, ஏன் அவர்களை தாக்கினீர்கள்.காவற்துறை அதிகாரி: சரி சார் சரி.
பாதுகாப்புச் செயலாளர் : ஏன் அவர்களை தாக்கனீர்கள். நான் இன்றே ஐ.ஜீ பதவி நீக்கம் செய்கிறேன்.
காவற்துறை அதிகாரி. நல்லது சார்.
பாதுகாப்புச் செயலாளர் அங்கிருந்து காவற்துறையினர் அனைவரையும் அழைத்துச் செல்லுங்கள்.
காவற்துறை அதிகாரி : நல்லது சார்.
பாதுகாப்புச் செயலாளர்: ஒரு காவற்துறை அதிகாரியைக் கூட அந்த பகுதியில் நிறுத்த வேண்டாம்..
இதன் பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அந்த காவற்துறை அதிகாரியை தாக்குகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக