04 ஜூலை 2010

ஐ.நா.தொண்டர்கள் வன்னிப்பகுதிக்கு செல்ல பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வேண்டும்.


வன்னிப்பிரதேசத்தில் இடம்பெற்று வருகின்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டு வருகின்ற ஐக்கிய நாடுகள் அமைப்புக்களைச் சேர்ந்த தொண்டு நிறுவனப் பணியாளர்கள் ஏ9 வீதிவழியாக வன்னிப்பகுதிக்குச் செல்வதற்கு இப்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
மீளக்குடியேற்றப்படுகின்ற இடம்பெயர்ந்த மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்ற மனிதாபிமான பணிகளை மேற்கொள்வதற்கும், அந்தப் பணிகளை மேற்பார்வை செய்வதற்கும் அந்தப் பகுதிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் அந்தப் பகுதிகளுக்குச் சென்று வர வேண்டியுள்ளது. எனினும், இவ்வாறு செல்பவர்களுக்குக் கடந்த திங்கட்கிழமை முதல் ஓமந்தை சோதனைச்சாவடியில் உள்ள இராணுவத்தினர் அனுமதி மறுத்தி;ருப்பதாகவும், வன்னிப் பிரதேசத்திற்குச் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்று வருமாறும் தெரிவித்துள்ளார்கள் என கூறப்படுகின்றது.
வன்னிப்பிரதேசத்தின் மீள்குடியேற்றப் பகுதிகளில் மனிதாபிமான பணிகளில் ஈடுபடுவதற்கு விரல்விட்டு எண்ணக்கூடிய தொண்டு நிறுவனங்களுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் ஐக்கிய நாடுகள் சபையின் தொண்டு நிறுவனங்களே முக்கியமானவை. இந்த நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் அங்கு சென்று வருவதற்கான அனுமதி ஏற்கனவே அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த திங்கட்கிழமை முதல் இந்த நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்கான மனிதாபிமான பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் போர்க்குற்றச் செயற்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பன் கீ மூனுக்கு ஆலோசனை தெரிவிப்பதற்காக குழு நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து, ஐக்கிய நாடுகள் சபைக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாடுகள் எற்பட்டிருப்பது தெரிந்ததே. இந்த முரண்பாட்டின் காரணமாகவே ஐநா அமைப்புக்கள் வன்னிப்பிரதேசத்திற்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
எனினும் இதற்கான காரணங்களை ஐநா அமைப்புக்களோ அல்லது அரசாங்கமோ இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக