22 ஜூலை 2010

இஸ்ரேல் சார்பான டொனால்ட் பெரேராவின் கருத்துக்கு எதிர்ப்பு.



பலஸ்தீனர்கள் பேச்சுவார்த்தையை நிராகரித்தால் யுத்தத்தை இஸ்ரேல் தீவிரப்படுத்த வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் டொனால்ட் பெரேரா கருத்துத் தெரிவித்தமை தொடர்பாக பலஸ்தீன - இலங்கை நட்புறவுச் சமூகம் கடும்; எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பலஸ்தீன - இலங்கை நட்புறவுச் சமூகத்தின் இணைத் தலைவரான அமைச்சர் அதாவுட செனவிரட்ண, டெய்லிமிரர் இணையத்தளத்திற்குக் கருத்துத் தெரிவிக்கையில், தூதுவர் டொனால்ட் பெரேரா என்ன கூறினாலும் இலங்கை அரசாங்கம் பலஸ்தீன மக்கள் மீது அனுதாபம் கொண்டுள்ளதாகவும் இஸ்ரேல், பலஸ்தீனம் ஆகிய இருதரப்பினரையும் பேச்சுவார்த்தையில் பங்குபற்றுமாறு வலியுறுத்துவதாகவும கூறினார். இதேவேளை, டொனால்ட் பெரேராவின் கூற்று, இலங்கை அரசாங்கத்தின் கருத்தை பிரதிபலிக்கிறதா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்;டும் என பலஸ்தீன - இலங்கை நட்புறவுச் சமூகத்தின் மற்றொரு இணையத்தலைவரான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கூறியுள்ளார்.ஊடகங்களுக்கு இத்தகைய பொறுப்பற்ற வகையில் கருத்துத் தெரிவிப்பதற்காக தூதுவருக்கு எதிராக பலஸ்தீன - இலங்கை நட்புறவுச் சமூகத்தின் ஸ்தாபகத் தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் தெரிவித்துள்ளார்.“இஸ்ரேல் இரட்டை வேடம் பூணுகிறது. இஸ்ரேல் ஒரே சமயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் உதவியளித்ததாக நூலாசிரியர் ஒருவர் எழுதியுள்ளார். எனவே டொனால்ட் பெரேரா போன்ற முன்னாள் படை அதிகாரிகள் இத்தகைய கருத்துக்களை வெளியிடுவது வேடிக்கையானது. பலஸ்தீன மக்கள் சுதந்திரம் கோருகிறார்கள். அவர்களுக்கு இலங்கை ஆதரவளிக்கிறது” எனவும் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் மேலும் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்களும் பயிற்சியும் பெற்றமைக்காக பலஸ்தீனத்திற்கு எதிரான யுத்தத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமென்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக