இறுதிக்கட்டப் போரின்போது சரணடைந்துள்ள முன்னாள் விடுதலைப் புலிகள் 12,000 பேருள் 3028 பேரைத் தாம் இதுவரைக்கும் விடுவித்து விட்டதாகவும் தற்போது 7980 பேர் மட்டுமே புனர்வாழ்வு முகாமில் உள்ளனர் என்று புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர நேற்று தெரிவித்தார். மேலும் இவ்வாண்டு நடக்கவுள்ள க. பொ. த. சாதாரண தர பரீட்சைக்கு 364 பேர் தோற்றவுள்ளதாகக் கூறிய அவர், அப்பரீட்சை முடிவடைந்ததும் இந்த 364 பேரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவர் எனவும் கூறினார். கொழும்பு, பொரளையிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே இத்தகவல்களை அவர் தெரிவித்தார்.புலிகளின் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட 1300 பேர் உட்பட ஏனையோர் இயக்கத்துடன் எவ்வாறு தொடர்புபட்டிருந்தனரோ அதே அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ் வளிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுள் 98 சத வீதமானோர் பெற்றோருடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்று தெரிவித்த டி.யூ குணசேகர சரணடைந்த புலிப்போராளிகளில் 2000 பெண்களும் அடங்குவர், இவர்களில் 600 பேருக்குத் தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.மேலும், பிரபல நடிகை அனோஜா வீரசிங்க இவர்களுக்கு நடனப் பயிற்சியளித்து வருகிறார் என்றும், நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக