05 ஜூலை 2010

மட்டக்குளி பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்,பொது மக்கள் பலர் கைது.



கொழும்பு மட்டக்குளி பொலிஸ் நிலையம் மீது சனிக்கிழமை இரவு கடும் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை முகமூடிகள் முன்பாக நிறுத்தப்பட்டதுடன், அவர்களில் 400 இற்கும் மேற்பட்டோர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்டனர். மட்டக்குளி பொலிஸ் நிலையத்தில் போதைவஸ்து பாவனை தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞனொருவர் படுகாயமடைந்ததையடுத்து ஆத்திரமுற்ற அப்பகுதி மக்கள் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸ் நிலையம் மீதும் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதையடுத்து அந்தப் பகுதிக்கு இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டதுடன், இத்தாக்குதலுடன் தொடர்புடையோரெனக் கூறி பலர் இரவிரவாக படையினராலும் பொலிஸாராலும் கைது செய்யப்பட்டனர்.அத்துடன் மட்டக்குளி பொலிஸ் நிலையத்தை அண்டிய பகுதிகளை நேற்று அதிகாலை சுற்றிவளைத்த படையினரும் பொலிஸாரும் அப்பகுதிகளிலிருந்து சிறுவர்கள், பெண்கள் உட்பட அனைவரையும் எதுவித வேறுபாடுமின்றி அப்பகுதியிலுள்ள ஸ்ரீவிக்கிரமசிங்கபுர மைதானத்துக்கு கொண்டு சென்றனர். வீடுகளில் எவரையும் தங்கவிடாது கர்ப்பிணிகள், வயோதிபர்களும் அந்த மைதானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மிக நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் அங்கு கூட்டிவரப்பட்ட முகமூடியணிந்த மூவர் முன்னிலையில் அனைவரும் ஒன்றின் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டனர்.இதன் போது முகத்தை மூடி ஹெல்மட் அணிந்திருந்த அந்த மூவரும் அடையாளம் காட்டியவர்கள் உடனடியாக பஸ்களில் ஏற்றப்பட்டு பொலிஸாரால் வேறிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இவ்வாறு நான்கிற்கும் மேற்பட்ட பஸ்களில் 400 இற்கும் மேற்பட்டோர் பஸ்களில் கொண்டு செல்லப்பட்டதாகவும் தலையாட்டிகள் காட்டாதவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.நேற்று நண்பகல் வரையும் இந்த நடவடிக்கை இடம்பெற்றதால் மைதானத்துக்கு கொண்டுவரப்பட்ட மக்கள் காலையில் தேநீர் அருந்தவும், உணவு உட்கொள்ளவும் முடியவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக சிறுவர்கள், குழந்தைகள் இதனால் பெரிதும் அவதிப்பட்டதாகவும் தாய்மார்கள் தெரிவிக்கின்றனர். எவரையும் மைதானத்தைவிட்டு வெளியே செல்ல நண்பகல் வரையும் அனுமதிக்கவில்லை. இதனால் கொளுத்தும் வெயிலில் நண்பகல் வரையும் இந்த மக்கள் மைதானத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.இதேவேளை, இப்பகுதிகளில் இருந்து சனிக்கிழமை பகலிலும் மாலையிலும் வெளியிடங்ளுக்கும் தொழிலுக்கும் சென்று இரவு திரும்பியவர்கள் தந்தமது வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படாமல் வீதிகளில் இருத்தி வைக்கப்பட்டனர்.ஞாயிறு விடியும் வரை இவர்கள் அந்த அந்த இடங்களில் வீதியில் இரவு உணவோ, தண்ணீரோ இன்றி இருந்தனர் என உறவினர்கள் தெரிவித்தனர்.இவர்கள் தாம் வந்தது குறித்து வீடுகளுக்கு கையடக்கத் தொலைபேசிகள் மூலம் தகவல் கொடுக்கவும் அனுமதிக்கப்படவில்லை. அதிகாலையில் இவர்களும் மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முகமூடிகள் முன்பு நிறுத்தப்பட்டனர். இதேநேரம் சம்பவ இடத்துக்கு வந்து நிலைமைகளை அவதானித்த பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்காவிடம் கைதான தமது உறவினர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.இதனிடையே சனிக்கிழமை இரவு சம்பவத்துக்கு பின்னர் அப்பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்கள், ஆட்டோக்கள் கடைகள், வீடுகளின் யன்னல்கள் என்பன சிவில் உடையில் வந்தவர்கள் சிலரால் தாக்கி சேதம் விளைவிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை முழுவதும் இப்பகுதியில் பதற்ற நிலைமையே காணப்பட்டது. வீதிகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்பட்டது. இப்பகுதியில் பொலிஸாரும் படையினரும் பாதுகாப்புக் கடமைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர் என அறியப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக