01 ஜூலை 2010

கே.பி.சுகபோக வாழ்வு,சரத் சிறையில் துன்பம்.-திஸ்ஸ அத்தநாயக்க.


விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவரான கே.பி என்ற குமரன் பத்மநாதன் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள விசும்பாய என்ற முக்கிய விருந்தாளிகள் தங்கவைக்கப்படும் உத்தியோபூர்வ இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு, சுகபோகங்கள் வழங்கப்படுகிறது எனவும் ஜெனரல் சரத் பொன்சேக்கா சிறையில் துன்பட்டு வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். விசும்பாயவை முன்னாள் ஜனாதிபதி வெளிநாட்டில் இருந்து வரும் விசேட அதிதிகள் தங்குவதற்காக நிர்மாணித்த போதிலும் தற்போதைய அரசாங்கம் அதனை விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் ஒருவரை தங்க வைப்பதற்காக பயன்படுத்துகிறது. இது கவலைக்குரிய விடயம். கே.பி எதிர்காலத்தில் வட மாகாணத்தின் முதலமைச்சராக அமர்த்தப்படவுள்ளதாக ஊட்கங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. புலிகளின் 22 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் 40க்கும் மேற்பட்ட கப்பல்களை கொண்டு வரப் போவதாக பெருமை பேசிய அரசாங்கத்தின் அமைச்சர் தற்போது என்னக் கூறப் போகிறார்கள் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அண்மையில் வவுனியாவுக்கு விஜயம் செய்த கே.பி விசேட உலங்குவானூர்தி மூலம் அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். எனினும் சரத் பொன்சேக்காவுக்கு பாதுகாப்பான வாகனம் ஒன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. அத்துடன் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 63 வீதமான நிதி ராஜபக்ஷ குடும்பத்தினரின் அமைச்சுக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஏனைய அமைச்சர்கள் என்ன கூற போகின்றனர் எனவும் அத்தநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிலையில் நாட்டின் எதிர்காலம் சம்பந்தமாக பாரதூரமான பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து நிவாரண அடிப்படையிலேயே கடனுதவியை பெற்றது.எனினும் தற்போதைய அரசாங்கம் நிபந்தனைகளின் அடிப்படையில் கடனுதவிகளை பெற்று வருகிறது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை நாட்டை மேலும் மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுவதாகும் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக