26 ஜூலை 2010

ஜெகத் டயசை தூதராக ஏற்றுக்கொண்டதற்கு எதிராக வழக்குத்தாக்கல்.


சுவிஸ், நோர்வே ஈழத்தமிழர் அவைகள், இன அழிப்புக்கெதிரான அமெரிக்க தமிழர் அமைப்பு ஆகியவை ஒன்றிணைந்து முதலாவது சட்ட நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளன ஜேர்மனி நாட்டுக்கான சிறிலங்காத் தூதுவராக தற்போது பணியில் அமர்த்தப்பட்டுள்ளவரும் போர்க்குற்றம் இழைத்தவர்களில் ஒருவருமான சிறிலங்கா இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜெகத் டயஸ் எதிராக முதல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றமிழைத்து 4 மாதங்களே கழிந்த நிலையில் சிறிலங்கா அரசு ஜெகத் டயசை தூதராக நியமித்ததை ஜேர்மனி ஏற்றுக்கொண்டிருப்பதற்கு எதிராக இந்த வழக்கு தாக்கலாவதாக சுவிஸ் ஈழத்தமிழர் அவையின் சட்ட விவகாரக்குழுவின் இணைப்பாளரான செல்வி அருள்நிதிலா தெய்வேந்திரன் தெரிவிக்கிறார்.
சுவிற்சர்லாந்து, நோர்வே ஆகிய இரண்டு நாடுகளிலும் வதியும் சுமார் 60,000 புலம் பெயர் ஈழத்தமிழர்கள் சார்பாக இவ்விரு நாடுகளிலும் ஜனநாயகரீதியில் ஈழத்தமிழர்களால் தெரிவான நாடு தழுவிய மக்கள் அவைகளான சுவிஸ் ஈழத்தமிழர் அவை (SCET), நோர்வே ஈழத்தமிழர் அவை (NCET) ஆகியவை அமெரிக்காவைச் சேர்ந்த இனவழிப்புக்கெதிரான தமிழர் (TAG) என்ற அமைப்போடு சேர்ந்து ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றில் (European Court ofHuman Rights) இந்த வழக்கைத் தாக்கல் செய்கின்றன.
மனித உரிமை, அடிப்படைச் சுதந்திரங்களுக்கான பாதுகாப்புக்கான சாசனம் (Convention for the Protection of Human Rights and Fundamental Freedoms) என்ற ஐரோப்பிய மனித உரிமைச் சாசனத்தை நோர்வே 1952 இலும் சுவிற்சர்லாந்து 1974 இலும் கைச்சாத்திட்டு அங்கீகரித்திருக்கின்றன. இந்தச் சாசனத்தின் பிரிவு 34 அனுமதிக்கின்ற வழக்குத்தாக்கல் செய்யும் உரிமைக்கு இசைவாகவே குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்படுகிறது.
குறித்த சாசனத்தின் பிரிவுகளான 3, 8, 11(2), 12 ஆகியவை மீறப்படுகின்ற அடிப்படையிலேயே குறித்த வழக்குத் தொடுக்கப்படுகிறது.
வழக்கிற்கான ஆதாரங்களில் ஜனவரி 2009 இல் இருந்து மே 2009 வரை வெளியான 182 வீடியோ பதிவுகளை ஆராய்ந்திருப்பதாகவும் அவற்றோடு சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெகத் டயஸின் வன்னி மீதான படைநகர்வுகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்து தமது ஆதாரங்களை முன்வைப்பதாகவும் குறிப்பிடுகின்ற வழக்காளர்கள் 5 வீடியோ பிரதிகளையும், பதின்மூன்று படங்களையும் நான்கு வரைபடங்களையும் பகிரங்கமாகவும் வெளியிட்டுள்ளனர்.
தம்மிடம் இருக்கக்கூடிய ஆவணங்கள் மாத்திரம் 10,740 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் 12,442 பேர் படுகாயப்படுத்தப்பட்டதையும் ஆதாரப்படுத்துவதாக சுவிஸ் மக்களவையின் பிரதிநிதி தெரிவிக்கின்றார். நாட்டு எல்லைகள் தாண்டிய நிலையில் குடும்ப ரீதியான உறவுகளைப் பேணி வாழுகின்ற ஒரு சமுகமான ஈழத்தமிழர் ஒரு நாட்டில் நடாத்தப்படுகின்ற ஓர் அரசியல் நியமனத்தின் ஊடாக, அதுவும் குறிப்பாகப் போர்க்குற்றம் புரிந்தவராகக் கருதப்படும் ஒருவரால், அச்சுறுத்தலுக்குள்ளாவது தொடர்பான சட்டவியற் கரிசனைகளின் அடிப்படைகளைக் கொண்டதாக குற்றப்பத்திரிகை அமைகிறது.
குறித்த நாடான சிறிலங்கா சட்டரீதியான விசாரணைகளை மறுதலித்து இன ஒடுக்குமுறையைக் கையாளும் நிலையில் விசாரணைக்கான தார்மீக அடிப்படைகள் மேலும் வலுப்படுத்தப்படுவதாக வழக்கைத் தாக்கல் செய்வோர் மேலும் தெரிவிக்கின்றனர். தவிரவும், ஐ.நா. சபையின் விசாரணை நடந்து முடிந்திருக்காத தருவாயில் குறித்த சாசனத்தின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்தாகவேண்டிய நிலையைத் தாம் எதிர்கொண்டிருப்பதாகவும் வழக்குத்தாக்கலை முன்னெடுப்போர் தெரிவிக்கின்றார்கள்.
ஓர் ஐரோப்பிய யூனியன் நாடானது போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இன்னொரு நாட்டின் இராணுவத் தளபதியை தனது நாட்டிற்கான தூதராக ஏற்றுக்கொள்வது எந்த வகையில் ஐரோப்பிய சமூகத்திற்கு ஏற்புடையது என்ற கேள்விக்கான நீதியை ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றிடம் குறித்த வழக்கு கோருகிறது.இன்னொரு நாட்டின் தூதராக ஒரு நாட்டிற்கு அனுப்பப்படுபவருக்கு தூதர் செல்லும் நாட்டின் சட்டங்களிலிருந்து அரசியற் கேள்விக் கோட்பாட்டிற்கிணங்க விலக்கு வழங்கப்படுவதால் உள் நாட்டுச் சட்டத்தைப் பயன்படுத்தி வழக்குத் தொடருவதென்பது இயலாதது.
இந்நிலையில் ஐரோப்பிய மட்டத்தில் குறித்த விவகாரத்தை அணுகுவதாக சுவிஸ், நோர்வே மக்களவைகளின் சட்டக் குழு தெரிவிக்கிறது.குறித்த சட்ட நகர்வை மேற்கொள்ளும் அதேவேளை சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள், ஈழத்தமிழரின் அவலங்கள் தொடர்பான கவன ஈர்ப்பு முன்னெடுப்பாக சுவிஸ் ஈழத்தமிழர் அவை ஆறு அஞ்சல் முத்திரைகளையும் வெளியிட்டுள்ளது. இம் முத்திரைகளைப் பயன்படுத்தி தமது கருத்துக்களை உரிய வட்டாரங்களுக்குத் தெரியப்படுத்துமாறு ஈழத்தமிழரவை சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நோர்வே, சுவிஸ்சர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, கனடா ஆகிய நாடுகளில்ஜனநாயக ரீதியாகத் தெரிவான நாடளாவிய தமிழர் அவைகள் அண்மையில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் இன அழிப்புக்கெதிரான தமிழர் எனும் அமைப்போடு சட்ட ரீதியான முன்னெடுப்புக் குறித்து ஓர் உடன்படிக்கையைச் செய்துகொண்டுள்ளன.
இந்த உடன்படிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களுக்கெதிரான முதலாவது சட்டநடவடிக்கையாக சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களில் நேரடியாகத் தொடர்புபட்டிருக்கும் ஓர் இராணுவத் தளபதியைச் தனது நாட்டில் செயற்பட ஜேர்மனி அனுமதித்திருப்பது தொடர்பாக மேற்கொள்ளப்படுகிறது. இதர நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்களும் இவ் வேலைத்திட்டத்தில் இணைவது தொடர்பாக தம்மோடு கலந்துரையாடி வருகின்றன என்று சுவிஸ் ஈழத்தமிழரவையின் அருள்நிதிலா தெய்வேந்திரன் தெரிவிக்கிறார். அருள்நிதிலா தெய்வேந்திரன் சுவிஸ் ஈழத்தமிழர் அவையின் சட்ட விவகாரக்குழுவின் இணைப்பாளராக இருக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக