24 ஜூலை 2010

தமிழ் பெண்களை உடன் விடுதலை செய்யவும்.


கடந்த 30 வருட கால யுத்தத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 765 தமிழ்ப் பெண்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கோரிக்கை விடுத்திருக்கின்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இது தொடர்பாக அரியநேத்திரன் அவசரக் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். கடந்த 30 வருட கால யுத்தத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 765 தமிழ்ப் பெண்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். என்று அக்கடிதத்தில் சுட்டிக்காட்டி இருக்கும் அரியநேத்திரன் எம்.பி இப்பெண்களின் பெயர்கள் மற்றும் ஏனைய விபரங்களையும் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார். 'தமிழ் அரசியல் கைதிகளில் பெண்களின் பரிதாப நிலை' என்கிற தலைப்பில் அரியநேத்திரன் எம்.பி. அனுப்பி வைக்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது : "எமது நாட்டில் 30 வருட காலமாக இடம்பெற்று வந்த ஆயுதப் போராட்டம் கடந்த 2009.05.19 ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் போராட்ட காலங்களில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் ஏனைய மாகாணங்களிலுருந்தும் வசித்து வந்த தமிழ் யுவதிகள் சுமார் 765 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைகளினதும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்-விபரங்களையும் இத்துடன் இணைத்துள்ளேன். இந்த 765 பேரில் வெலிக்கடைப் பெண்கள் பிரிவுச் சிறையில் 50 பெண்களும், 5 குழந்தைகளுமாக 55 பேர் உள்ளனர். அவர்களில் 5 தாய்கள் குழந்தைகளுடன் மிகவும் பரிதாபமாக வாழ்க்கையை நடத்துகின்றனர். இவர்கள் கைக் குழந்தைகளுடன் கண்ணீர் மல்க சொல்லொணாத் துயருடன் பரிதாபமாகக் கஷ்டப்படுகின்றனர். குழந்தைகளுக்குப் போஷாக்கான புட்டிப் பால் இல்லாமலும், நோய் தொற்றும் அபாயத்துடனும், அசுத்தமான சூழலிலும் அவர்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர். இப்பெண்களில் சிலர் அங்கவீனர்களாகவும் உள்ளனர். குழந்தைகள் பரிதவிப்பு இவர்களின் குழந்தைகள் தந்தையையும் மற்றும் உறவுகளையும் கேட்டு பரிதவிக்கும் ஏக்கக் காட்சிகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இதனைவிட , இவர்களில் அநேகமானவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டும் , உளரீதியாக தாக்கத்துக்குள்ளாகியும், பல்வேறு நோய்த் தாக்கங்களை அனுபவித்தும் வருகின்றார்கள். இவர்கள், தாம் எப்போது விடுதலை செய்யப்படுவோம் என்று ஏங்கிக் கண்ணீர் சிந்தித் தவிக்கின்றனர். இந்தப் பெண்கள் சிறைச்சாலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி தொடக்கம் தடுத்து வைக்கப்பட்டிருந்த வட்டக்கச்சியை பிறப்பிடமாகக் கொண்ட நடராசா இராஜேஸ்வரி எனும் பெண் (18 வயது)- மனநோயால் பாதிக்கப்பட்டு, தாய் தற்போது இந்த சிறைச்சாலையில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு விட்டாரென அறிகின்றேன். கடந்த காலத்தில் நேரடியாக யுத்தத்தை முன்னின்று நடத்தியவர்களும், யுத்தத்தின்போது பல உதவிகளைச் செய்தவர்களும், யுத்தத்துக்காக சர்வதேச ரீதியாகச் செயற்பட்டவர்களும் அரசியல் தலைவர்களாகவும், சமூக நற்பிரஜைகளாகவும் மாற்றப்பட்டுள்ளமையை நான் மிகவும் பாராட்டுகின்றேன். அது போல் யுத்தத்தில் எந்தவித சம்பந்தமுமில்லாமல் சந்தேகத்தின் பேரில் பல வருடங்களாக சிறை வாழ்வை அனுபவித்து வரும் இப்பெண் சிறைக் கைதிகளை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென தயவுடன் வேண்டுகின்றேன். பொது மன்னிப்பு வழங்குகின்றமையில் தங்களுக்கு சிரமங்கள் உள்ள பட்சத்தில் அவர்களை பிணை அடிப்படையிலாவது விடுதலை செய்து, நீதி விசாரணை செய்யும் வாய்ப்பையாவது வழங்குங்கள் என மன்றாடிக் கேட்கின்றேன். பல்வேறு சிறைகளில், பல வருடக்கணக்காக அவலங்களைச் சந்தித்து நிம்மதியற்று நிர்க்கதியில் தவிக்கும் 765 பெண் கைதிகளுக்கும் ஒரே தடவையில் பொது மன்னிப்பு வழங்கமுடியாது எனத் தாங்கள் கருதும் பட்சத்தில், வெலிக்கடை சிறையின் பெண்கள் பிரிவில் சொல்லொணாத் துன்பத்துடன் சோக வாழ்க்கையுடன் தத்தளிக்கும் 50 பெண் கைதிகளையும், 05 குழந்தைகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்கின்றேன். தாங்கள் இவர்களுக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுப்பீர்களானால் அதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ள நான் தயாராகவுள்ளேன். பெண்களுக்கான உரிமையிலும், சிறுவர் நலனிலும் அதி கூடிய அக்கறை காட்டும் தாங்கள் மனிதாபிமான அடிப்படையில் இவ்விடயத்தில் கட்டாயம் கருணை காட்டுவீர்கள் என்கிற நம்பிக்கையில் இந்த வேண்டுகோளை தங்களிடம் சமர்ப்பிக்கின்றேன்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக