31 டிசம்பர் 2010

வதிரியில் குடும்பப்பெண் கடத்தப்பட்டுள்ளார்.

வடமராட்சியில் ஒரு குடும்பப் பெண் கடத்தப்பட்டுள்ளார். வதிரியைச் சேர்ந்த 48 வயதுடைய யோகநாதன் புஸ்பாதேவி என்பவரே கடத்தப்பட்டுள்ளார்.
வெள்ளைவானில் சென்ற 6க்கும் அதிகமான ஆயததாரிகள் இவரைக் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தல்காரர்களிடம் இருந்து தமது தாயை மீட்க 6 பிள்ளைகளும் ஊராரும் போரடிய பின்னும் துப்பாக்கியைக் காட்டி பெண்ணைக் கடத்திச் சென்றுள்ளனர். வர்த்தக நிலையம் ஒன்றைக் நடத்தி வந்த இவரின் கணவர் யுத்தத்தில் ஏற்கனவே கொல்லப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.

குடத்தனையில் ஆயுததாரிகள் அட்டூழியம்!

வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தின் குடத்தனை கிழக்கில் வீடு புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:
இன்றிரவு 9 மணியளவில் குடத்தனை கிழக்கில் உள்ள இவரது வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் கணனியை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர்.
அதற்கிணங்க வீட்டினுள் அழைத்துச் சென்றபோது ஆயுததாரிகள் அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இவரது மனைவி ஆயுததாரிகளை கட்டிப்பிடித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆயுததாரிகள் அவரை இழுத்து வெளியில் எறிந்து விட்டு மீளவும் உள்ளே போய் சரமாரியாக சுட்டிருக்கின்றனர். இதில் படுகாயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர் பருத்தித்துறை தபாலக ஊழியரான தவராசா கேதீஸ்வரன் (வயது 27) என்பவரேயாவார்.
தற்போது இவரது நிலமை கவலைக்கிடமாகவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிந்திய தகவல்களின்படி இவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

30 டிசம்பர் 2010

எமது விசாரணைகளை துரிதப்படுத்துங்கள் என அரசியல் கைதிகள் வேண்டுகோள்!

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளிடம் நல்லிணக்க ஆணைக்குழு சாட்சியங்களை பதிவு செய்து கொண்டுள்ளது.
இன்று காலை 10.30 முதல் மாலை 4 மணிவரை சாட்சியங்களை பதியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்தார்.
20 தமிழ் அரசியல் கைதிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. அவர்கள் அந்த ஆணைக்குழுவிற்கு கூறியதாவது, 'எங்கள் மீது உள்ள விசாரணைகளை துரிதப்படுத்துங்கள், எங்களுக்கு அது மிகுந்த நன்மையாக இருக்கும்' என கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
அத்துடன் நலிணக்க ஆணைக்குழு வடக்கில் விஜயம் செய்த வேளையில் தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் அவர்களை சந்தித்து தன்னுடைய பிள்ளைகள் குறித்த நிலவரங்களை அறியுமாறு ஆணைக்குழுவிடம் கூறியிருக்கிறார்கள்.
இந்த விடயங்கள் தொடர்பாக காலி பூசாவிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளிடம் ஆணைக்குழு கூறிய போது தனது பெற்றோர் விசாரித்ததையிட்டு மகிழ்ச்சியடைந்திருப்பதாகவும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர்
கூறியிருக்கிறார்.

பூசா தடுப்பு முகாமிற்குள் பிரவேசிக்க தடை!

பூசா தடுப்பு முகாமிற்குள் பிரவேசிப்பதற்கு சில ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினர் பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் இன்று சாட்சியங்களை திரட்டியிருந்தனர்.
இந்த நடவடிக்கைகள் தொடர்பான செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்காக சென்றிருந்த சில ஊடகவியலாளர்களுக்கு தடுப்பு முகாமிற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பி.பி.சீ ஊடகவியலாளர் மற்றும் உள்நாட்டு ஊடகவிலாளர்கள் சிலருக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் செயலாளர் எஸ்.பி அத்துகொடவின் அழைப்பிற்கு அமைய, தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூலுகல்லவிடம் அனுமதி பெற்றுக் கொண்டு ஊடகவியலாளர்கள் பூசா தடுப்பு முகாமிற்கு சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தடுப்பு முகாமில் கடயைமாற்றி வரும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனுமதி மறுத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதன்போது, ஊடகவிலயாளர்கள் ஆணைக்குழுவின் செயலாளர் எஸ்.பி. அத்துகொடவுடன் தொடர்பை ஏற்படுத்தியதாகவும், பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென அத்துகொட தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர் அல்லது காவல்துறை மா அதிபர் ஆகியோரில் ஒருவரிடம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென பாதுகாப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

29 டிசம்பர் 2010

இனியும் மவுனிகளாக இருக்க முடியாது!-ஜேசுதாஸ் அடிகளார்.

வாய்மூடி இனியும் நாங்கள் எல்லோரும் அமைதியாக இருப்போமானால் எங்களுடைய உயிர்கள் கூட மிஞ்சப்போவதில்லை என தெரிவித்தார் அருட்பணி யேசுதாஸ் அடிகளார். ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரதி கல்விப்பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கத்திற்கு அஞ்சலி செலுத்து முகமாக நடைபெற்ற அஞ்சலிக்கூட்டத்தில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவ்வாறான படுகொலைகள் தொடர்பில் நாங்கள் இனிமேலும் மௌனித்திருக்க முடியாது, எங்களிடம் மாணவர்கள் வளம் உண்டு. அவர்களை உரிய வகையில் வழிநடத்த வேண்டும். அடுத்துவரும் காலங்களில் இவ்வாறான படுகொலைகளை இடம் பெறாது இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அமரர் சிவலிங்கத்திற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எதிரி இருந்திருக்கமுடியாது. அவர் எப்போதும் அமைதியான சுபாவம் கொண்டிருந்தார். தனது குழந்தைகள் தொடர்பில் கனவுகள் இருந்தன. அப்பாவியான அவரது படுகொலை தொடர்பில் அனைவரும் ஒன்று திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்..
யாழ் மாவட்டம் என்றும் இல்லாதவாறு மாகாண ரீதியிலும் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஏழை மாணவர்களது கல்வி தொடர்பில் இறுதிவரை அர்ப்பணிப்புடன் பணியாற்றியமை தொடர்பில் அமரர் சிவலிங்கம் எனக்கு முன் உதாரணமாக இருந்தார்
எனத் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று (28.12.10) அமரர் புகழ் உடல் அவரது வாசஸ்தலத்தில் வைக்கப்பட்ட வேளை கொட்டும் மழையைக்கூடப் பாராது நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு சென்று அஞ்சலி செலுத்தினர்.
அதன்பின்னர் பூதவுடல் மருதனாமடம் பிரதான வீதியூடாக வலிகாமம் வலயகல்வி அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு வலயக் கல்வி பணிப்பாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் அஞ்சலியுரையாற்றியதுடன் மக்களாலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் இணுவில் காரைக்கால் மைதானத்தில பூதவுடல் தீயுடன் சங்கமமானது. அமரர் மார்க்கண்டு சிவலிங்கத்தின் முன்னாள் மாணவனும், தற்போதய உதவிக் கல்விப் பணிப்பாளருமான மணிமாறன் உரையாற்றுகையில் படுகொலை தொடர்பில் அனைத்து மட்டங்களிலும் ஒன்று திரண்டு எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

ஐ.நாவுக்கு ரமேஷின் மனைவியும் நடேசன் அவர்களின் மகனும் சாட்சியம்.

மனித குலத்தையே குலைநடுங்க வைத்த அந்த நாளை யாரும் மறக்க முடியாது. இரத்தம் சொட்டச் சொட்ட, கைகள், கால்கள் தனித்தனியாகத் தொங்கத் தொங்க, ஒருவர் இருவர் அல்ல, ஆயிரக்கணக்கானவர்கள் துடிதுடிக்க, எப்படியாவது அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக,வெள்ளைக் கொடியுடன் சரண் அடையச் சென்ற நடேசன், புலித்தேவன், ரமேஷ்.....
என புலிப் போராளிகளின் தலைவர்களை வரிசையாக சுட்டுத் தள்ளியது சிங்கள இராணுவம். இதுதான் உலகம் முழுவதும் இருக்கும் தமிழீழ மக்களின் பகிரங்கக் குற்றச்சாட்டு!
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கடற்கரை வெளியில் கால் வைக்க முடியாதபடி வெயில் சுட்டெரிக்க, குழந்தைகள் கதறக் கதற... ஆயுதம் எதுவும் இல்லாமல் நிராயுதபாணியாக நின்ற அப்பாவி ஈழ மக்கள் மீது எறிகணைகள், வெடிகணைகள், நச்சுக் குண்டுகளை வீசி சிங்கள இராணுவம் நிகழ்த்திய இனப் படுகொலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன வெளிநாடுகளில் உள்ள ஈழத் தமிழர் அமைப்புகள்.
இலங்கை இராணுவத்தின் போர்க் குற்றங்கள் பற்றி, விசாரிக்க ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் விசாரணைக் குழு ஒன்றை அமைத்தார். இலங்கையில் இருந்து உயிர் தப்பி வந்த ஏராளமானவர்கள், இந்தக் குழுவுக்கு தங்களின் சாட்சியங்களை அனுப்புகிறார்கள். வாக்குமூலங்களை அனுப்பிவைக்க கடைசித் தேதி கடந்த 15-ம் தேதி என அறிவிக்கப்பட்டது. இப்போது அந்தக் கெடு, காலவரையறை இல்லாமல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
சிங்கள அரசின் போர்க் குற்றங்களை நிரூபிப்பது, தமிழீழ மண்ணில் இருக்கும் மக்களுக்கு, புலம்பெயர்ந்தவர்களால் செய்யக்கூடிய ஒரே உதவியாக இருக்கும் எனும் நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசு இதில் தீவிரம் காட்டுகிறது. இதற்கான தனித் துறையை அமைத்து, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சாட்சியங்களைப் பெற்று ஐ.நா. பொதுச் செயலாளர் குழுவுக்கு அனுப்புகிறது, அந்த அமைப்பு.
இதன் ஒரு பகுதியாக, சரண் அடைந்தபோது சுட்டுக் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் நடேசனின் மகன், சிறப்புத் தளபதி ரமேஷின் மனைவி ஆகியோரின் எழுத்து வடிவிலான வாக்குமூலங்கள் ஐ.நா. குழுவிடம் போயிருக்கின்றன. அந்த வாக்குமூலங்கள் நமக்கும் கிடைத்தன.
நடேசனின் மகன் பிரபாத்:
நடேசன் என அழைக்கப்படும் விடுதலைப்புலிகளின் இறுதிக்கால அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த பாலசிங்கம் மகேந்திரனின் மகனான எனது பெயர் பிரபாத் சுரேஷ் மகேந்திரன். வயது 30. இங்கிலாந்தில் வசிக்கிறேன்.
கடைசியாக நான், என் தந்தை மற்றும் குடும்பத்தினருடன், கடந்த ஆண்டு மே 18-ம் தேதி இங்கிலாந்து நேரப்படி அதிகாலை 2 மணி அளவில்... அதாவது, அவர்கள் சரண் அடைவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு பேசினேன்.
அப்பா என்னிடம் கடைசியாகச் சொன்னது,
வெளிநாட்டு இராஜதந்திரிகள் எங்களை சிங்கள இராணுவத்திடம் சரண் அடையச் சொல்கிறார்கள். ஆனால், நானோ என்னுடன் இருப்பவர்களோ, சிங்கள இராணுவத்தின் கையில் பாதுகாப்பாக இருப்போம் என நம்பவில்லை. காயம்பட்ட போராளிகள் 1,000 பேரும், அவர்களின் குடும்பத்தினரும் என்னுடன் இருக்கிறார்கள். அவர்களுக்காகவாவது நான் சரண் அடைந்துதான் தீர வேண்டும். அது குறித்து, மேலதிக அறிவுரைகளைப் பெறுவதற்காக தலைவரைத் ( பிரபாகரனைக் குறிப்பிடுகிறார்!) தொடர்புகொள்ளவும் முடியவில்லை. அம்மாவும் புலித்தேவனும் என்னுடன்தான் இருக்கிறார்கள். இன்னும் அரை மணி நேரத்தில், நான் உன்னுடன் பேசாவிட்டால், நாங்கள் பாதுகாப்பாக இல்லை என்பதைத் தெரிந்துகொள்!’ என்றார்.
அரசியல் பிரிவினரும், பொதுமக்களும் படுகாயம் அடைந்திருக்க, உடனடியாக சிகிச்சைபெற வேண்டிய நிலையில் துன்பகரமான நிலையில் இருந்தார்கள் அவர்கள்.
கடைசி நாட்களில் சுற்றி இருந்தவர்களின் உயிர்களைப் பாதுகாப்பது மட்டுமே என் அப்பாவின் ஒரே நோக்கமாக இருந்தது. அவர்கள் அனைவரும் ஆயுதம் எதுவும் இல்லாத நிராயுதபாணிகளாகவே நின்றனர்.
ஆனாலும், அப்பாவையும் உடன் சென்றவர்களையும் இலங்கை இராணுவம் கொன்றுவிட்டது. நேரில் கண்டவர்களும் என்னிடம் அதுபற்றிக் கூறினார்கள். தேவைப்பட்டால், ஐ.நா. குழுவானது அவர்களுக்கு சாட்சியப் பாதுகாப்பு அளிக்கும் பட்சத்தில், அவர்களின் விவரங்களை அளிக்கத் தயாராக இருக்கிறேன்...'' என்று கூறி உள்ள பிரபாத், ''அந்த சாட்சியங்கள் இன்னும் இலங்கை மண்ணில்தான் இருக்கிறார்கள்!' என்பதையும் கூறி இருப்பது அசாதாரணமானது. அவரின் இந்த வார்த்தைகள், அர்த்தம் பொதிந்தவை.
ரமேஷின் மனைவி வத்சலாதேவி
புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்த நேரத்தில், புலிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக நின்றவர் புலிகளின் கிழக்குத் தளபதி கேணல் ரமேஷ். நடேசனைப் போலவே, எதிரியிடம் எப்படியும் தன் உயிர் போகும் எனத் தெரிந்தும், படுகாயம் அடைந்த ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பை மேற்கொண்டவர் இவர். 'போரில் கொல்லப்பட்டார்’ என இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட இந்த ரமேஷ்தான், கைகள் கட்டப்பட்டு கேவலமாக நடத்தப்பட்ட காட்சியின் வீடியோ பதிவு அண்மையில் வெளியானது. ரமேஷின் மனைவி வத்சலாதேவி தற்போது தென் ஆபிரிக்காவில் வசிக்கிறார். அவரது வாக்குமூலமும் ஐ.நா. குழுவுக்குப் போய் இருக்கிறது.
1964-ம் ஆண்டு பிறந்த என் கணவர் துரைராஜசிங்கம், 84-ல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார். 'ரமேஷ்’ என இயக்கப் பெயர் சூட்டப்பட்ட அவருக்கு, இயக்கத்தில் கேணல் எனும் உயர் நிலை வழங்கப்பட்டது. கடைசி ஒரு மாதத்தில் மோதல் மிகவும் மோசமாக இருந்தது. எங்கள் இடங்களை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டதால், அங்கு இருந்து வெளியேறினோம். ஏப்ரல் 28-ம் தேதி, மட்டக்களப்புக்குச் சென்றோம். மேற்கொண்டு அங்கு தங்கி இருக்க முடியாத நிலையில், தென் ஆபிரிக்காவுக்கு வந்தோம்.
என் கணவர் கடைசியாக மே 15-ம் தேதி என்னிடம் பேசினார்.'எங்களின் கடமையை முடித்துவிட்டு விரைவில் உங்களுடன் சேர்ந்துகொள்வேன்’ என சொன்னார். ஆனால், அதன் பிறகு அவரிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை. போரில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் சொல்கிறது. நான் அங்கு இருந்தபோதே, என் கணவர் கொல்லப்பட்டதாக அறிவித்தார்கள். ஆனால், அவருடைய உடலைக் காட்டவே இல்லை. அதனால், அவர்கள் சொல்வதை நான் நம்பவில்லை.
இப்போது, வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் என் கணவர் சரண் அடைவதாகக் காட்டப்படுகிறது. எனவே, அவர் போரின்போது கொல்லப்படவில்லை, உயிருடன்தான் பிடிக்கப்பட்டு இருக்கிறார். அவர் உயிருடன் இருக்கிறார் என்றே நம்புகிறேன், இருக்க வேண்டும் என்றே பிரார்த்திக்கிறேன். என் கணவர் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் ஆகியும், அவருடைய நிலைமைபற்றி ஒன்றுமே தெரியவில்லை. நானும், என் பிள்ளைகளும் அவருக்கு என்ன ஆனது என்பதைப்பற்றிய கவலையிலேயே இருக்கிறோம்.
அவரைப்பற்றி பலவிதத் தகவல்கள் வருகின்றன. என் கணவரை இலங்கை இராணுவம் கைது செய்துள்ளது என்பதை வீடியோ காட்சி நிரூபிக்கிறது. எனவே, கைது செய்யப்பட்ட போர்க் கைதி ஒருவரின் நிலைமையைப்பற்றி இலங்கை அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். ஐ.நா. குழுவானது விசாரணை நடத்தி, என் கணவரின் கதி என்ன என எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை, அவருக்கு ஏதேனும் நேர்ந்திருந்திருந்தால், என் கணவர் உயிருடன் இல்லை என்றால் இலங்கை இராணுவம்தான் அவரைக் கொன்றிருக்க வேண்டும். அது இலங்கை இராணுவத்தின் அப்பட்டமான போர்க் குற்றம்!'' என்கிறார்.
இந்த வாக்குமூலங்களை அடிப்படையாகவைத்து, நாடு கடந்த தமிழீழ அரசு, நேரடியாக சம்பந்தப்பட்டவர்களை ஐ.நா. குழுவின் முன்பு நிறுத்தி சாட்சியம் அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறது.
பிரபாத், வத்சலாதேவி இருவரையும் தொடர்புகொள்ள முயன்றோம். இருவரின் உயிர்ப் பாதுகாப்பு மட்டும் இன்றி, லட்சம் மக்களின் உயிரைக் குடித்த கொடிய குற்றத்துக்கான வலுவான சாட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால், ஐ.நா. விசாரணைக்கு முன்பு, தங்கள் படமோ பேட்டியோ இடம்பெறுவதை அவர்கள் விரும்பவில்லை என நமக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசின் 'இனப் படுகொலை, போர்க்குற்ற விசாரணை துறை’ அமைச்சர் டிலக்சன் மொரிஸ் நம்மிடம் பேசினார்.
இலங்கைத் தீவில் கடந்த ஆண்டு மே மாதம் ஈழத் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதல்கள் அப்பட்டமான இனப் படுகொலை. அவை நிரூபிக்கப்பட்டால், அங்கு இரு தேசங்கள் உருவாக வழிவகுத்துவிடும். இதனால், இதை சில மேலைநாடுகள் போர்க் குற்றம் என்று மட்டும் கூறுகின்றன. அப்படி சுருக்கிப் பார்ப்பது, மகிந்தா ராஜபக்ஷே அரசாங்கத்தை அகற்றிவிட்டு, மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான ரணில் விக்கிரமசிங்கவை அதிபர் ஆக்குவதற்கு மட்டுமே உதவி செய்வதாக இருக்கும்.
இப்படிப்பட்ட நிலையில், நடேசனுடைய மகன், தளபதி ரமேஷின் துணைவி ஆகியோரின் வாக்குமூலங்களையும், இலங்கை போர்க் குற்றம் தொடர்பான ஐ.நா. பொதுச் செயலரின் குழுவுக்கு அனுப்பி உள்ளோம். ஏற்கெனவே, டப்ளினில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயம் மூலம் இனப் படுகொலை என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்திவிட்டோம். அதைப்போலவே, சட்ட ரீதியாகவும் பல்வேறு துறைசார் வல்லுநர்கள் மூலமும் ஈழ மக்கள் மீதான இனப் படுகொலையை நிரூபிக்காமல் விடமாட்டோம்! என்றார்.
புலம்பெயர்ந்த ஈழ மக்கள் மத்தியில் புல்லுருவிகளை உருவாக்கி, போர்க் குற்றங்களை மறைக்க ராஜபக்‌ஷே முயன்றாலும், இனவெறிப் படுகொலை செய்த குற்றத்துக்காக அவர்கள் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும் என அழுத்தமாக நம்புகிறார்கள் ஈழத் தமிழர்கள்... கூடவே தமிழக ஈழ உணர்வாளர்களும்!
நன்றி: ஜூனியர் விகடன்.

28 டிசம்பர் 2010

யாழில் அதிர்ச்சியூட்டும் கலாச்சார சீரழிவு!

17வயதேயான யுவதி ஒருத்தி தன்னுடன் 76 பேர் பாலியல் ரீதியான தொடர்புகளை மேற்கொண்டிருந்ததாக தெரிவித்த தகவல் யாழ்;ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எச்ஐவி தொற்றலுக்கு உள்ளாகி இருப்பதாக நம்பப்படுகின்ற இந்த பாடசாலை மாணவியின் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
அண்மையில் கொழும்பில் வைத்தியசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த படைச்சிப்பாயின் மீது நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது அவர் எச்ஐவி தொற்றலுக்கு உள்ளாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே குறித்த பாடசாலைச் சிறுமியுடன் தான் தொடர்பு கொண்டிருந்ததை அவர் ஒத்துக் கொண்டிருந்தார்.
இதையடுத்து கொழும்பிலிருந்து வைத்திய நிபுணர்களால் உள்ளுர் வைத்திய அதிகாரிகளுக்கு அவசர அவசரமாக தகவல் வழங்கப்பட்டதனையடுத்து குறித்த சிறுமி விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட வேளையிலேயே 76 பேர்களின் பெயர்ப்பட்டியலை அவர் முதல்கட்டமாக வழங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. 14 வயது முதல் 17 வயது வரையான 3 வருட காலப்பகுதியிலேயே இவ்வாறான பாலியல் ரீரியாக தன்னுடன் தொடர்பு கொண்டிருந்த 76 பேரினது பெயர்களை இவர் விபரித்திருப்பதாக தெரிய வருகின்றது.
இதனிடையே இந்த 76 பேர் தொடர்பாக வைத்திய பரிசோதனைகளை மெற்கொள்ள வைத்திய வட்டாரங்கள் தயாராகி வருகின்றன. இவர்களில் கணிசமானவர்கள் படையினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ்க்குடாநாட்டில் வேகமாகப் பரவி வருகின்ற வரம்பு மீறிய புரள்வுகள் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றது.
குறிப்பாக யாழ் போதனா வைத்தியசாலையில் கருக் கலைப்பதற்காக வருகின்றவர்கள் 18 முதல் 20 வயதிற்கும் குறைவான வயதினை உடைய இளம் பெண்களே அதிகளவில் இருப்பதாக கூறப்படுகின்றது.
முன்னணிப் பாடசாலைகள் பல இலக்கு வைக்கப்பட்டு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக 20 வயதிற்கும் குறைவான பாடசாலை மாணவர்களிடையே ஆபாச பட இறுவட்டுக்கள் தாராளமாக விநியோகிக்கப்பட்டு வருவதாக கூற்படுகின்றது.
குறிப்பாக விளையாட்டு மைதானங்களிலும் பாடசாலைகளிலும் இவை சரளமாகப் புழங்குகின்றன. இவை எவ்வாறு வந்து சேர்கின்றன என்பது தொடர்பான மர்மங்கள் தொடர்கின்றன. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இத்தகைய சம்பவங்களள் கட்டுப்பாட்டுள் இருந்த தாகவும் இப்போது மீண்டும் இந்த பாடசாலை மாணவர்களிடையே ஏற்பட்டிருக்கின்ற இந்தப் புரள்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக இந்த 17 வயதுடைய பாடசாலைச் சிறுமியின் தந்தை ஒரு உள்ளுர் கிராம அதிகாரி எனக் கூறப்படுகின்றது.
ஏற்கனவே சாவக்சசேரிப்பகுதியைச் சேர்ந்த இதேபோன்ற ஒரு சிறுமி பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்கு பாலியல் நோக்கத்திற்காக கொண்டு செல்லப்பட்ட வேளை முன்னரங்கப் பகுதியில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பான விசாரணைகள் சாவகச்சேரி நீதிமன்றில் இடம்பெற்ற வேளை தான் பல தடவைகள் பலாலிக்கு போய் வந்துள்ளதாக அவர் திடுக்கிடும் தகவல்களை வழங்கியிருந்தார். நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் அவர் பெண் சிறார்களுக்கான விசேட தடுப்பு மையம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
எனினும் தற்போது எச்ஐவி தொற்றலுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்ற மாணவி தொடர்பில் வைத்தியர்கள் தமது கண்காணிப்பினை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பூரண விசாரணை ஒன்று மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு சிறுவர் நலன்களுடன் தொடர்புடைய நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக நீதித் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுவரை காவற்துறையினர் தகவல்களை வெளியிடுவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

27 டிசம்பர் 2010

படை முகாமில் படுத்த மகிந்த!

கடந்த செவ்வாய்க்கிழமை (21) சிறீலங்கா இராணுவத்தினரின் பயிற்சி நிறைவுவிழாவில் கலந்துகொள்வதற்காக தியத்தலாவ படை முகாமுக்குச் சென்ற சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா கொழும்பு திரும்பியபோது பாதகமாக காலநிலை காரணமாக உலங்குவானூர்தியை செலுத்த முடியாது என விமானி தெரிவித்ததால் படைமுகாமில் தங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தியத்தலாவை முகாமில் இரகசியமாக தங்கிய மகிந்தா மறுநாள் காலை கொழும்பு திரும்பியதாக அரசதரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச பிரகடனத்தில் கைச்சாத்திட ஐ.நா.கோரிக்கை.

பலவந்தமான காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பிலான சர்வதேச பிரகடனத்தில் கைச்சாத்திடுமாறு இலங்கையிடம் ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
பலவந்தமான காணாமல் போதல் சம்பவங்களிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில், பலவந்தமான காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பான 100 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் அரசாங்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பலவந்தமான காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் இலங்கையில் சட்டவிரோதமான காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்றனவா என்பது குறித்து தகவல் வெளியிட முடியாது எனவும், அடுத்த மாதமளவில் அறிக்கை வெளியிடப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலவந்தமான காணாமல் போதல் சம்பவங்களை கட்டுப்படுத்தும் சர்வதேச பிரகடனத்தில் 21 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளதாகவும், நேற்றைய தினம் முதல் இந்த பிரகடனம் அமுல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைதுகள், தடுத்து வைத்தல்கள், கடத்தல்கள் மற்றும் அதிகார தரப்பினரால் மேற்கொள்ளப்படும் உரிமை மீறல்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் இந்த பிரகடனம் அமுல்படுத்தப்பட உள்ளது.
இந்த பிரகடனத்திற்கு இலங்கை முதலில் ஆதரவளித்த போதிலும், சில பிணக்குகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களை கண்டு பிடித்தல், குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரகடனத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச ரீதியில் நியாயம் கிட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

26 டிசம்பர் 2010

பிரபஞ்ச தமிழருக்கெல்லாம் பிரபாகரன்தான் தலைவன்.

புலிகளின் தாக்குதல் அணி ஊடுருவலாம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் கும்பலொன்று இலங்கைக்குள் ஊடுருவியிருக்கலாம் எனவும் அக்குழு இலங்கையின் பொருளாதார மையங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் எனவும் சந்தேகித்து, இந்திய புலனாய்வுப் பிரிவான றோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக ரிவிர, லக்பிம ஆகிய சிங்கள பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய பிரபுக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த விடுதலைப்புலிகளின் சூழ்ச்சித் திட்டம் அம்பலமானதைத் தொடர்ந்து இந்தக் குழு இலங்கைக்குள் ஊடுருவியிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டு இந்திய புலனாய்வுப் பிரிவான றோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய பிரபுக்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு றோ உளவுப் பிரிவு இலங்கைப் பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இந்தியாவில் மேற்கொள்ளவிருந்த தாக்குதல் சூழ்ச்சித் திட்டம் அம்பலமாகியதனைத் தொடர்ந்து, குறித்த கும்பல் இலங்கைக்குள் பிரவேசித்திருக்கலாம் என றோ உளவுப் பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து பெருமளவிலான இலங்கை அகதிகள் நாடு திரும்பி வரும் சந்தர்ப்பத்தில், அகதிகள் என்ற போர்வையில் இவர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைப் பொருளாதாரத்தின் மீது தாக்குதல் நடாத்த தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சி என லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த புதிய முயற்சியை முறியடிக்கும் நோக்கில் மேற்குலக நாடுகளின் தூதுவராலயங்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்னர்.
இலங்கையின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைச் செய்ய புலிகள் சூழ்ச்சித் திட்டம் தீட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் இழக்கப்படுவதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் சூழ்ச்சித் திட்டமே பிரதான காரணி என புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை போர்க் குற்றச் செயல் தொடர்பான, பான் கீ மூனின் ஆலோசனைக் குழு ஏதேனும் காரணங்களுக்காக சில வேளைகளில் இலங்கைக்கு விஜயம் செய்தால், போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதாக சர்வதேச ரீதியில் பிரச்சாரங்களை மேற்கொள்ள புலிகளின் சர்வதேச வலையமைப்பு ஏற்கனவே திட்டம் தீட்டியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இவை எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தை தமது அரசியல் நலன்களுக்காக பாவித்து, புலிகளைச் சாட்டாக வைத்தே காலத்தை கடத்தப்போகின்றது அரசாங்கம். அதற்கான உத்தியே புலிகளின் மீள் எழுச்சிக்கான கட்டுக்கதைகள் என புலம்பெயர் ஆய்வாளர்கள் வர்ணித்திருக்கின்றனர்.

25 டிசம்பர் 2010

சிங்களத்தில் தேசியகீதம் பாடுவதில் தவறில்லையாம்!

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கலந்து கொள்ளும் தேசிய நிகழ்வுகளின் போது தேசிய கீதம் சிங்களத்திலேயே இசைக்கப்படுவது வழக்கம், அதில் தவறிருப்பதாக கூறமுடியாது என்று டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்துகின்றார்.
அந்த வகையில் நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்வும் கூட பிரதமர் கலந்து கொள்ளும் ஒரு தேசிய நிகழ்வு என்ற வகையில் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுவதில் தவறில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
அதற்கு மேலாக அவ்வாறு சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுவதில் எதுவிதமான உள்நோக்கங்களும் இருப்பதாக கூறமுடியாது என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஆயினும் எதிர்வரும் காலங்களில் தமிழ்ப் பிரதேசங்களில் தேசிய வைபவங்கள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்துமாறு தான் அமைச்சரவையிடம் கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் சிங்களத்தில் தேசியகீதம் பாடும்படி அச்சுறுத்தல்!

தேசிய பாதுகாப்புத் தினத்தையொட்டி யாழ்நகரில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் விழாவில் சிங்களத்திலேயே தேசிய கீதம் பாடவேண்டுமெனக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நாளை ஞாயிறு காலை பிரதமர் டி.எம்.ஜயரட்ண தலைமையில் நடைபெறவுள்ள தேசிய பாதுகாப்புத் தினத்திற்காக யாழ்நகரில் படையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், இந்த நிகழ்வுக்கு முன் குடாநாட்டைச் சேர்ந்த பாடசாலை மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெறவுள்ளது.
இதற்கான ஒத்திகை கடந்த இரு நாட்களாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
27 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்குபற்றும் இந்த அணிவகுப்பு மரியாதைக்காகத் தேசிய கீதத்தைச் சிங்களத்திலேயே பாடவேண்டுமென கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும் குடாநாட்டு மாணவர்கள் இதனைத் தமிழிலேயே பாட முற்பட்டதால் பெரும் குழப்ப நிலையேற்பட்டுள்ளது.
யாழ்ப்பாண அரச அதிகாரிகளும் படைத்தரப்பும் சிங்களத்திலேயே தேசிய கீதத்தைப் பாடுமாறு வற்புறுத்தியதால் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே எதிர்ப்பு நிலை ஏற்பட்டது.
கடும் அழுத்தங்கள் மத்தியில் தங்களுக்குத் தெரியாத மொழியில் அவர்கள் இந்த ஒத்திகையில் தேசிய கீதத்தை பாடவேண்டிய நிர்ப்பந்தமேற்பட்டதாகப் பெற்றோர்கள் தெரிவித்துள்ளதுடன் இது குறித்து தங்கள் விசனத்தையும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதியின் மகனான நாமல் ராஜபக்ச தலைமையில் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் மிகமிக இரகசியமான முறையில் சிங்கள மொழியில் தேசியகீதம் பாடுவதற்கான பயிற்சி ஆரம்பித்து வைக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

24 டிசம்பர் 2010

தப்பியோடிய இலங்கையர் கைது!

சொலமொன் தீவிலிருந்து நாடு கடத்தவென விமான நிலையம் அழைத்து செல்லப்பட்ட வேளையில் தப்பி ஓடிச்சென்ற இலங்கையர் ஒருவரை சொலமொன் பொலிஸார் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த சில நாட்களின் முன்பு நாடுகடத்தவென விமான நிலையம் அழைத்துவரப்பட்ட வேளையில் ஒரு ஆயுதக்குழுவின் உதவியுடன் தப்பிச் சென்றுள்ளதாகவும், மேலும் சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரந்தளவில் விசாரணை நடத்த விரும்புகிறோம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினை விடவும், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு பரந்தளவிலானது என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினைத் தவிர்ந்த ஏனைய தரப்பினருடனும் தொடர்புகளைப் பேண நிபுணர்கள் குழு விரும்புவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதனைத் தவிர வேறும் விடயங்கள் குறித்தும் நிபுணர்கள் குழு கவனம் செலுத்தும் என தெரவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவுடன் மட்டுமா உறவுகளைப் பேணும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பதில் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் பரந்தளவில் விசாரணை நடத்துவதற்கு விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

23 டிசம்பர் 2010

அண்ணன் இருக்கின்றார் நம்பிக்கையுடன் இருங்கள்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது விடுதலைப்புலிகள் இயக்க தேசியத்தலைவர் பிரபாகரன் பற்றிய கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கே- தமிழீழத்துக்காக, தமிழர்களுக்காக எவ்வளவு காலத்திற்கு நீங்கள் போராடுவீர்கள்?
ப- ஒரு மூன்று மணி நேர சினிமாவில் ஆரம்பக் காட்சியில் தந்தையை கொன்ற வில்லனை கடைசியில் கொல்லும்போது கைதட்டுகிறீர்கள். ஒரு இனத்தையே அழித்ததை எப்படி மறந்துவிட முடியும். ஈழ மக்களுக்காக எந்நாளும் போராடுவோம் என நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் இந்திய தமிழ் திரைப்பட இயக்குனருமாகிய சீமான் தெரிவித்துள்ளார்.
கே- தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இறந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்தன. அச்செய்தி உண்மையானதா?
ப- பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்பது உங்களுக்கு எப்படி தெரியும். பிரபாகரன் இறந்துவிட்டார் என்று அதற்கு சிங்களன் 20 கதை சொல்லுகிறான். அதை எல்லாம் நம்பாதீர்கள். ஈழ விடுதலைக்காக இவ்வளவு தூரம் போராடியவர் அவ்வளவு சீக்கிரம் அந்த போராட்டத்தை விட்டு போகமாட்டார் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கையில்தான் நாங்கள் வேகமாக இயங்குகிறோம்.
கே- இறுதி யுத்தத்தின் போது என்ன நடந்தது ? அங்கிருந்த புலிகள் தப்பியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன, அதுபற்றி....!
ப- என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. அதனால் எல்லோரும் அமைதியாகத்தான் இருக்க வேண்டும். இறுத்திக் கட்டப்போரில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. கூட நின்றவர்களுக்குகூட கூட தெரியாது. அப்படியிருக்க யாரும் அது பற்றி சொல்லுவது சரியல்ல. என்னாலும் சொல்லமுடியாது.
கே-தலைவர் பிரபாகரன் இருக்கின்றார் என நீங்கள் நம்புகின்றீர்களா?
ப- என் அண்ணன் இருப்பதாக ஏன் நினைக்கிறேன் என்றால், எனக்கு என் அண்ணன் இறந்துவிட்டார் என்று நம்பகமான இடத்தில் இருந்து தகவல் வரவில்லை. அதனால் நம்புகிறேன் அவர் இன்னமும் உயிருடன் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார் என.
கே- தமிழ் மக்களுக்கு இத்தொலைக்காட்சி பேட்டியூடாக ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா?
ப- இப்போது எது சொன்னாலும் அது வரலாற்றுப்பிழையாகிவிடும். அதனால் பொறுத்திருங்கள். யார் சொல்லுவதையும் நம்பாதீர்கள்.காலம் பதில் சொல்லும்.

18 டிசம்பர் 2010

கண்ணாடி பந்துக்குள் இருக்கும் சிறைக்கைதி தான் என்கிறார் மகிந்த.

யுத்தத்தில் இருந்து நாட்டை விடுவித்த தான் இன்று கண்ணாடி பந்துக்குள் இருக்கும் சிறை கைதியாக மாறியுள்ளதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை வெலிகத்தேயில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.விமானத்தில் செல்ல முடியாது.விரும்பிய உணவை உண்ண முடியாது. உணவை முதலில் எவரேனும் உண்டு பார்த்த பின்னரே தான் உண்ண வேண்டிள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்திற்கு சென்றால், பிடியாணை பிறப்பிக்க முயற்சிக்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையிலேயே தான் வாழ்ந்து வருவதாகவும் பலருக்கு இது குறித்து புரிந்துணர்வு இல்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

புத்தர் யார் என்பதை சிங்களவர்கள் தேடி அறிந்துகொள்ளவேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் தாயகம் அல்ல என்றும் அதற்கான எவ்விதமான சட்டபூர்வ ஆதாரங்களும் இல்லையென்றும் ஜாதிக ஹெலஉறுமய எம்.பி எல்லாவெல மேதானந்ததேரர் நல்லிணக்க ஆணைக்குழுமுன் சாட்சியமளிக்கையில் தெரிவித்திருந்தது தொடர்பாக புளொட் தலைவர் த.சித்தார்த்தன் கருத்துத் தெரிவிக்கையில், விஹாரைகள் அமைக்கப்பட்டிருப்பதற்கான சான்றுகளை வைத்துக் கொண்டு வடக்கு பிரதேசம் சிங்களவர்களுக்கு சொந்தமானது என்று தீர்மானிக்க முடியாது.
அப்படிப் பார்க்கையில் இந்தியா முழுதும் விஹாரைகள் இருக்கின்றன. புத்தர் என்கின்ற சித்தார்த்தன் யார் என்பதை இன்றைய சிங்களவர்கள் தேடியறிந்து கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர். அநாவசியமான கருத்துக்கள் மக்களிடையே அசௌகரியங்களை உண்டு பண்ணுகின்றன. எல்லாவல மோதானந்த தேரர் போன்றோரது இவ்வாறான கருத்துக்கள் நல்லிணக்கத்துக்கு தடையாகவே அமைகின்றன. அதாவது, இந்நாட்டில் சகலரும் ஐக்கியப்பட வேண்டுமென்பதோ இங்கு நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமென்பதோ அவசியமானதொன்றல்ல என்பதையே பெரும்பான்மை சிங்கள சமூகம் கூறிவருகின்றது.
சர்வதேசம் இவ்வாறான உள்நோக்கம் கொண்ட கருத்துக்களை நம்பிவிடப் போவதில்லை. ஏனெனில் இலங்கையின் வரலாற்றினை சர்வதேசம் புரிந்து கொண்டுள்ளது. இவ்வாறான காலப்பகுதியில் தான் அரசாங்கம் தேசிய கீதம் தொடர்பில் குழப்பிக் கொண்டிருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணைக்கு அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 செனட் சபை உறுப்பினர்களும், 30 பாராளுமன்ற உறுப்பினர்களும் அமெரிக்க ராஜாங்கச் செயலளார் ஹிலரி கிளின்ரனுக்கு கடிதம் ஊடாக இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்தும் இலங்கை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டுமென கோரியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒத்துழைப்புடன் குறித்த விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தப்படாது வெளியிடப்படும் அறிக்கைகளின் நம்பகத் தன்மை குறித்து சந்தேகம் நிலவுவதாகத் தெரிவித்துள்ளனர்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்த குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென வட கரோலினா மாநிலத்தின் குடியரசு கட்சி செனட்டர் ரிச்சர்ட் புர் தெரிவித்துள்ளார். இலங்கையில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முனைப்புக்கள் தோல்வியடைவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வரும் அதேவேளை, இலங்கையில் எந்தவிதமான யுத்தக் குற்றச் செயல்களும் இடம்பெறவில்லை என அரசாங்கம் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

17 டிசம்பர் 2010

எசன் மாநகரில் இடம்பெறும் தமிழ் மக்களுக்கான ஒன்று கூடல்.

ஜெர்மன் எசன் நகரில் எசன் வாழ் தமிழ் மக்களுக்கிடையிலான ஒன்றுகூடலுடன் கூடிய கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அனைத்து தமிழ் மக்களும் இதில் கலந்து கொண்டு நாம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஒவ்வொருவரும் தமது கருத்துக்களை முன்வைத்து,கருத்தொருமித்தவர்களாக எமது செயற்பாடுகளை முன்னகர்த்த இச்சந்தர்ப்பத்தில் கைகோர்ப்போம் வாரீர்!
நாள்:19.12.2010 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்:12.30 ல் இருந்து 16.00 வரை.
இடம்:Ohm strasse-32
45143 Essen.
அனைவரையும் தமிழுணர்வுடன்
அழைக்கின்றார்கள்
எசன் வாழ் தமிழ் மக்கள்.

தமிழர் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம்!தோமஸ் சவுந்தரனாயகத்திற்கு சிவாஜிலிங்கம் பதிலடி.

இராணுவத்தினருடன் சேர்ந்து கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சிகளை நடத்துங்கள.; அல்லது இன்னிசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுங்கள.; இவைகள் வேறு விடயம்.
ஆனால், தமிழ் மக்களின் உணர்வுகளை, அவர்களின் இன்றைய நிலைமைகளைப் புறந்தள்ளிவிட்டு ஒரு சாராரைத் திருப்திப்படுத்துவதற்காகக் கருத்துகளைக் தெரிவிக்காதீர்கள் என தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் படையினர் ஏற்பாட்டில் இடம்பெற்ற நத்தார் கரோல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யாழ். மறை மாவட்ட ஆயர் வண தோமஸ் சௌந்தரநாயகம் அடிகளார் வெளியிட்டிருந்த கருத்துகள் தொடர்பிலேயே சிவாஜிலிங்கம் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.
நீண்ட காலப் போருக்கு முடிவை ஏற்படுத்திய படையினருக்கு நன்றி கூற வேண்டுமென யாழ். மறை மாவட்டப் பேராயர் தெரிவித்திருந்தார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம்,
போர் முடிவுக்கு வந்து விட்டது என்பது வேறு விடயம். ஆனால,; அந்தப் போர் எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது? எத்தனை ஆயிரம் தமிழர்கள் தமது உயிரை அநியாயமாகத் தியாகம் செய்தனர்? எத்தனை ஆயிரம் பேர் அகதிகளாயினர்? அவர்களுக்கு ஏற்பட்ட அவலங்கள், இன்று அந்த மக்கள் எதிர்நோக்கும் துன்பங்கள் போன்றனவற்றினையெல்லாம் மறந்த விட்டு, உயர் நிலையில் வைத்து மதிக்கப்படும் ஒரு பேராயர் பொறுப்பற்ற விதத்தில் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருப்பது மன வேதனையை அளிக்கிறது.
அவரின் கூற்றினை தமிழ் உணர்வுமிக்க எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அண்மையில் புனித பாப்பரசரால் கர்தினால் ஆக திருநிலைப்படுத்தப்பட்ட வண. ரஞ்சித் மல்கம் ஆண்டகை அவர்கள், நல்லிணக்க ஆணைக் குழு முன் தோன்றி தமிழ் மகக்ள் தொடர்பில் தனது கருத்துகளை யாருக்கும் அச்சமின்றித் தெரிவித்திருந்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர் தாயகம் என்றும் அங்கு ஏனைய குடியேற்றங்கள் இடம்பெறக் கூடாதெனவும அவர்; வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் யாழ் மறை மாவட்ட பேராயர் இவ்வாறு தெரிவித்திருப்து கண்டனத்துக்குரியது என சிவாஜிலிங்கம் கூறினார்.

சரத் பொன்சேகா வெற்றிபெற வேண்டுமென அமெரிக்கா விரும்பியது.

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா வெற்றி பெற வேண்டுமென அமெரிக்கா விரும்பியதாக விக்கிலீக்ஸ் இணையம் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
சரத் பொன்சேகா தேர்தலில் வெற்றியீட்டினால் இலங்கையின் அரசியல் கட்டமைப்பில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என அமெரிக்கத் தூதுவர் பெட்ரிக்கா புட்டீனாஸ் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 22ம் திகதி அமெரிக்கத் தூதுவர் இதனை அறிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா சில சாதகமான உறுதி மொழிகளை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ஷ அரசாங்கத்தை விடவும் சரத் பொன்சேகாவின் புதிய அரசாங்கத்துடன் கடயைமாற்றுவது சுலபமானதாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஆண்கள் வட இந்தியாவிற்கும்,சிங்கள பெண்கள் எங்களுடனும் வரவேண்டும்.

கம்பராமாயணம் மகாவம்சத்தை தழுவி எழுதப்பட்டது என்றும், திருவள்ளுவர் சிங்கள பௌத்தர் என்றும், கௌதம புத்தர் அம்பாந்தோட்டையில் பிறந்தார் என்றும், தமிழர்களுக்கு வேஷ்டியும், சேலையும் கட்டுவதற்கு கற்றுக்கொடுத்ததே தனது மூதாதையர் என்றும் ஜாதிக ஹெல உருமயவின் பாராளுமன்ற உறுப்பினர் மேதானந்த எல்லாவல தேரர்......
நாளை கருத்து தெரிவித்தாலும்கூட நான் ஆச்சரியப்படப்போவதில்லை. ஏனென்றால் இவரை எனக்கு மிக நன்றாக தெரியும். தன்னைத்தானே “வரலாற்று சக்கரவர்த்தி” என அழைத்துக்கொள்ளும் இந்த தேரருக்கு இன்றைய இனவாத யதார்த்தத்திற்கு ஏற்றவகையில் வரலாற்றை திரிப்பதை தவிர வேறு எதுவும் தெரியாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் அமர்வின்போது மேதானந்த எல்லாவல தேரர் தெரிவித்துள்ள கருத்துகள் தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது:
மேதானந்த தேரரின் கட்டுக்கதைகளுக்கும், மோசடி கருத்துகளுக்கும் பதில்கூறி நாம் எமது நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை. பாராளுமன்றத்தில் நான் இருந்தபோது கடந்த வருடம் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுப்படுத்த விரும்புகின்றேன்.
தமிழர்களின் தாய்நாடு இந்தியா என்றும், முஸ்லிம்களின் தாயகம் பாகிஸ்தான் என்றும் மேதானந்த தேரர் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்தார். மேலும் தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுமானால் தமிழர்கள் இந்தியாவிற்கும், முஸ்லிம்கள் பாகிஸ்தானிற்கும் போய்விட வேண்டும் என்றும் இவர் கூறியிருந்தார்.
அவ்வேளையிலே தமிழர்கள் இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்படவேண்டும் என்றால், சிங்கள ஆண்கள் வடஇந்தியாவிற்கும், சிங்கள பெண்கள் எங்களுடன் தென்னிந்தியாவிற்கும் வரவேண்டியிருக்கும் என்றும், முஸ்லிம் மக்களை பாகிஸ்தானிற்கு அனுப்பிவிட்டு, முழு நாட்டையும் இத்தீவின் பூர்வீக குடிகளான வேடர்களிடம் ஒப்படைப்போம் என்று மேதானந்த தேரருக்கு நான் பதில் கூறியிருந்தேன்.
ஏனென்றால் சிங்கள வரலாற்று நூலான மகாவம்சத்திலே சிங்கள இனத்தை உருவாக்கிய விஜயன் வட இந்தியாவிலிருந்து வந்ததாகவும், பின்னர் அவருக்கும், அவரது எழுநூறு நண்பர்களுக்கும் தென்னிந்தியாவின் பாண்டிய நாட்டில் இருந்து அரசகுமாரியையும், பெண்களையும் கொண்டுவந்து மணம் செய்துகொண்டதாகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
எனவே ஜாதிக ஹெல உருமயவின் வரலாற்று சக்கரவத்தி மேதானந்த எல்லாவல தேரர் தமிழர்களின் வரலாற்றை திருத்தி எழுதுவதற்கு முன்னர் சிங்கள இனத்தின் முதல் வரலாற்று நூலான மகாவம்சத்தை திருத்தி எழுதவேண்டும் என கூறவிரும்புகின்றேன்.

16 டிசம்பர் 2010

கோபம் பொத்துக்கொண்டு வருகிறதாம் இமெல்டாவுக்கு!

புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் இணையங்களை நடத்தி வருகின்றவர்கள் அரசிற்கு விரோதமானவர்கள். அவர்கள் மக்களுக்கும் விரோதமானவர்கள். அவர்கள் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றார்கள். இணையங்களில் அவர்கள் பிழையான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் குற்றம் சாட்டியுள்ளார் என ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த கத்துரசிங்கவிற்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் குஸி வருது கிடைத்தைமை தொடர்பான கௌரவிப்பு நிகழ்வொன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்திலுள்ள பிரதான வீதியிலுள்ள பாதுகாவலன் மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அடையாளம் தெரியாத குழு ஒன்றே இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது என ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்விற்கு யாழ் ஆயர் அதி வணக்கத்திற்கு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை, நல்லை ஆதீன குரு சோமசுந்தர குருக்கள் பரமாச்சாரியார், மற்றும் இந்து கிறிஸ்தவ முஸ்லிம் பெரியார்கள் பலரும் கலந்து கொண்டனர்.
யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். அங்கு கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றுகையிலேயே இமெல்டா சுகுமார் புலம்பெயர் இணைய ஊடகவிலாளர்களை போட்டுத் தாக்கத் தொடங்கினார். குறிப்பாக இணையங்களில் பொய்யான பிரச்சாரங்களே மேற்கொள்ளப்படுகின்றது. இது அந்த இணையங்களினது ஆசிரியர்கள் அல்லது ஊடகவிலாளர்களது இயலாமை மற்றும் அறியாமை கூடக் காரணமாக இருக்கலாம். உண்மையை பொய்யாக்கி எழுதுகிறார்கள்;. பொய்யை உண்மையாக்கி எழுதுகிறார்கள்.
குடாநாட்டில் வெளிவருகின்ற செய்திகளில் மேலால் உள்ளவற்றையும் கீழால் உள்ளவற்றையும் வெட்டி நடுவில் உள்ளவற்றை மட்டும் சிக்கலான வகையில் போட்டு வருகின்றார்கள்.
குடாநாட்டில் 21 ஆயிரத்துக்கும் அதிகமான கணவனை இழந்த பெண்கள் இருக்கின்றார்கள். இவர்கள் இயற்கையாகவோ அல்லது யுத்தத்தாலோ கணவன்மாரை இழந்திருக்கின்றார்கள். அவர்களைப் பற்றி சிந்திப்பவர்களாக கூட இந்த இணைய ஆசிரியர்களோ அல்லது இணைய ஊடகவிலாளர்களோ இல்லை. குடாநாட்டு மக்களுக்காக 60 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் தேவையாக இருக்கின்றது. இவை சேதமடைந்தோ அல்லது அழிந்தோ இருக்கின்றன. ஆனால் இவை தொடர்பில் எத்தனை பேர் சிந்திக்கின்றார்கள்.
ஆனால் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த கத்துருசிங்கவோ எத்தனையோ வீடுகளைக் கட்டி வழங்கி வருகின்றார். இரவு பகலாக வடமராட்சி கிழக்கில் மக்கள் மீளக் குடியமரும் பகுதிகளில் வீடுகளை அமைக்கும் வேலைகளை படைத்தரப்பு மேற்கொண்டு வருகின்றது.
குறிப்பாக எனக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தினை வழங்கியிருந்தவர் மேஜர் ஜெனரல் மகிந்த கத்துருசிங்கவே. நாட்டையும் மக்களையும் காக்கும் தலையாய கடமையில் அவர் நீடூழி வாழ வேண்டும் என இமெல்டா சுகுமார் தெரிவித்திருந்தார்.
அண்மைக் காலமாக லண்டனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக அவர் கருத்து தெரிவித்திருந்ததும் அந்தக் கருத்து தொடர்பில் புலம்பெயர் ஊடகங்கள் பெரும் விமர்சனங்களை தெரிவித்திருந்த நிலையிலேயே இன்று புலம்பெயர் ஊடகங்களினது ஊடக ஆசிரியர்களை அவர் போட்டுத் தாக்கினார்.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சுமார் 100 முதல் 200 வரையிலான பொதுமக்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். எனினும் அழைத்து வரப்பட்ட பலரும் துயரம் தோய்ந்த முகங்களுடன் காணப்பட்டதாகவும் இது தொடர்பில் ஊடகவிலாளர்கள் அவர்களிடம் வினவிய போது காணாமல் போனவர்கள் அல்லது யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் ஆசை வார்த்தை காட்டி அழைத்து வரப்படதாகவும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக கணவன் பிள்ளைகள் தொடர்பான தகவல்களை ராணுவத் தளபதியிடம் பெற்று வழங்கித் தருவதாக சிலர் தம்மிடம் கூறியதை அடுத்தே தாங்கள் அவரைச் சந்திக்கலாம் என வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். தமக்கு இவ்வாறான பாராட்டு விழா நடக்கப் போவது பற்ற எதுவுமே தெரியாதெனவும் சில பெண்கள் குறிப்பிட்டனர் என ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ள போதிலும் ஈபிடிபி அமைப்பின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோ அல்லது முக்கியஸ்தர்களோ கலந்து கொள்ளவில்லை. ஈபிடிபியின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரான உதயன் மட்டும் அங்கு பிரசன்னமாகியிருந்தார். எனினும் கூட்டமைப்போ அல்லது வேறெந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது பொது அமைப்புக்களின் முக்கியஸ்தாகளோ பிரசன்னமாகியிருக்கவில்லை.

புலிகளால் இவர்களுக்கு ஆபத்தில்லை,இவர்களால்தான் தமிழர்களுக்கு ஆபத்து!

பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதலமைச்சர் கருணாநிதி, மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் உள்பட நாட்டின் முக்கிய தலைவர்களுக்கு, விடுதலைப்புலிகளால் ஆபத்து இருப்பதாகவும், தமிழகத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படியும், மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தமிழக போலீஸ் டி.ஜி.பி லத்திகா சரண் தெரிவித்தார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’ஜனவரியில் சென்னைக்கு வருகை தரும் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், தமிழக முதல்வர் கருணாநிதியையும் விடுதலைப்புலிகள் கொலை செய்ய திட்டமிட்டி ருப்பதாக மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையின் அடிப்படையில் தமிழக டி.ஜி.பி. லத்திகாசரண் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இன்றைய நிலையில் இலங்கையின் சூழலும் இந்தியாவின் சூழலும் பதட்டம் நிறைந்ததாக இருக்கிறது.
விடுதலைப்புலிகள் இயக்கமே அழிக்கப்பட்டு விட்டது என்று அறிவித்தவர்கள் இன்று தங்கள் பிழைப்புக்காக அவர்களை வைத்து பூச்சாண்டி காட்டுகின்றனர். விடுதலைப்புலிகளால் இவர்களின் உயிருக்கு ஆபத்து அல்ல. இவர்களால் தான் தமிழ் இனத்திற்கு ஆபத்து’’என்று கூறியுள்ளார்.

இவர்களை தாக்க புலிகள் திட்டமாம்!தமிழரை ஒடுக்க மீண்டுமொரு சதி திட்டம்.

பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோர் மீது தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய உளவுத் துறையிடம் இருந்து இதுதொடர்பான எச்சரிக்கை வந்துள்ளதை தமிழக போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற போரில் விடுதலைப் புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அந்த நாட்டு ராணுவம் அறிவித்தது. ஆனால், அவர்கள் இந்தியாவில் ஒருங்கிணைய முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முதல்வர் கருணாநிதி ஆகியோர் தமிழகத்தில் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது.
மத்திய உளவுத் துறையின் எச்சரிக்கை குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் புதன்கிழமை கூறியதாவது:
உளவுத் துறையிடமிருந்து தமிழக போலீசுக்கு எச்சரிக்கை தகவல் ஒன்று வந்துள்ளது. அந்த தகவலில், பிரதமர் மன்மோகன்சிங், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி, மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் உள்பட நாட்டின் சில முக்கிய தலைவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு, அவர்களின் உயிருக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து இருப்பதாகவும், விடுதலைப்புலிகள் தங்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும், எனவே அந்த அமைப்பின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளோடு, என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்று நான் ஆலோசனை நடத்தி உள்ளேன். உளவுத் துறை அனுப்பியுள்ள இந்த எச்சரிக்கை தகவல் பற்றி ரகசிய விசாரணை நடத்தும்படி தமிழக உளவுப்பிரிவு போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் இந்த எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மிரட்டல் பட்டியலில் இடம் பெற்றுள்ள தலைவர்கள் தமிழகம் வரும் போது, இதுவரை இல்லாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இனிமேல் செய்யப்படும். முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும், அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு செய்யப்படும் பாதுகாப்பு, அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு பலப்படுத்தப்படும்.
இவ்வாறு டி.ஜி.பி. லத்திகா சரண் தெரிவித்தார்.

15 டிசம்பர் 2010

கிறிஸ்மஸ் தீவு அருகே அகதிப் படகு பயங்கர விபத்து ஏராளமானோர் மரணம்!

அடையாளம் காணப்படாத அகதிப்படகொன்று இன்று காலை ஏழு மணியளவில் வடக்கு ஆஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுகளை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதில் பெரும்பலான அகதிகள் கடலில் விழுந்து இறந்து போனதாகத் தெரிகிறது.
சுமார் 100- க்கும் மேற்பட்டவர்கள் பயணப்பட்ட அந்தப் படகு மிகவும் பழுதான நிலையில் இருந்ததாகவும் அது அனர்த்தனமான கடல் அழுத்தத்தை தாக்குப் பிடிக்க முடியாமையாலும் உடைந்து சிதறி கடலில் மூழ்கியதாகத் தெரிகிறது.
இப்படகில் பயணித்த வெகு சிலரே உயிர் பிழைத்திருப்பார்கள் என்றும். ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை, குடியேற்றத் துறை, போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்திருப்பதாகவும் தெரிகிறது.
பொதுவாக ஆப்கான், பங்களாதேஷ்,இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சார்ந்த அகதிகள் அதிக அளவில் ஆஸ்திரேலியாவை நோக்கி தஞ்சக் கோரிக்கையுடன் பயணப்படும் நிலையில் இந்தப் படகில் இருந்தவர்கள் ஈழத் தமிழர்களா? என்று இன்னும் அடையாளம் காணமுடியவில்லை.
இறுதியாக கிடைத்த தகவலின் படி ஐம்பது பேர் வரை கடலில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஈழத்தின் வீழ்ச்சி கருணாநிதியின் இதயத்தை சுட்டிருந்தால்...! - திருப்பி அடிப்பேன்! - சீமான் சிறையில் எழுதிய அதிரடி தொடர் - பாகம் 01

'எங்கள் மீனவனை இனியும் அடித்தால், சிங்கள மாணவர்களை நாங்கள் அடிப்போம்! என கூட்டத்தில் உரையாற்றியிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்து அண்மையில் விடுதலையானார். அவர் சிறையிலிருந்தபோது எழுதிய அதிரடி அனல் கனல் தொடர்.
தொடரின் முதலாவது பாகம்:
''ஏனடா எரிக்கிறாய் என்றோ,
ஏனடா அடிக்கிறாய் என்றோ
எவனடா கேட்டீர் அவனை?
அடியென அவனுக்குச்
சாட்டை கொடுத்தவனும்
சுடுவென தோட்டா கொடுத்தவனும்
தடையென எமக்குத்தானே விதிக்கின்றனர்.
என்ன கொடுமையடா இது!''
- புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதிய வரிகள் என் நித்திரையைக் கிழிக்கின்றன. புரண்டு புரண்டு படுக்கிறேன். கொசுக்கடி இல்லை. குளிர் இல்லை. அட்டைப்பூச்சியோ... அரிப்புத் தொல்லையோ இல்லை. ஆனாலும், நித்திரை வரவில்லை. 'தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் பாய்ச்சுகிற அளவுக்கு அப்படி என்ன செய்தோம்?’ என்கிற கேள்வி மனதுக்குள் குறுகுறுக்கிறது. என் மீனவனின் தொண்டையில் விழுந்த தூண்டிலின் வலியைச் சொன்னது தவறா? அதற்கா தேசியப் பாதுகாப்புக்கு பங்கம் வந்துவிட்டதாகப் பாய்ச்சல் காட்டினார்கள்?
என்னை ஒருவன் அடித்தான். 'ஐயோ வலிக்கிறது’ என்றேன். மீண்டும் அடித்தான். 'ஐயோ வலிக்கிறது’ எனத் துடித்தேன். மறுபடியும் சக்தி திரட்டி அடித்தான். 'ஐயோ வலிக்கிறது’ என அலறினேன். அடுத்தும் அடித்தான். இனிமேல் அடித்தால், ஓங்கித் திருப்பி அடிப்பேன். 'ஐயோ வலிக்கிறது’ என அலறுவான். 'வலிக்கிறதா அய்யா, அப்படித்தான் எனக்கும் வலித்தது அய்யா, இனிமேல் என்னை அடிக்காதே!’ என்பேன்.
இதைத் தவிர உலக மகா குற்றத்தை ஏதும் இந்த சீமான் செய்துவிடவில்லை. 60 ஆண்டுகளாக ஈழத்திலும், 20 ஆண்டுகளாக இங்கேயும் தமிழக மீனவர்களைத் துரத்தித் துரத்தி அடிக்கிறான் சிங்களவன். 'இனியும் அடித்தால்...’ என வலி பொறுக்காமல் அலறியது, இந்த அரசாங்கத்தை ஆத்திரப் படுத்திவிட்டதாம். வலையோடு போனவர்கள் ரணமாகவும் பிணமாகவும் ஒதுங்கியபோது, தமிழினத் தலைவராக இருக்கும் மனிதருக்கு வராத கோபம்... 'எம் இனத்தை ஏனடா அடிக்கிறாய்?’ எனக் கேட்டபோது கிளர்ந்துவிட்டதாம்!
சிங்கள மாணவனை அடிப்பேன் என எப்படிச் சொல்லலாம்? இரு இனங்களுக்கு இடையே பிரிவினையைத் தூண்டும் வாதம் அல்லவா இது?'' - ஆத்திரத்தில் அலறியது அரசுத் தரப்பு. எங்களவனை அடிக்கும்போது பாயாத சட்டம், சிங்களவனை அடிப்பேன் எனச் சொல்லும்போதே பாய்கிறது.
சட்டம் - ஒழுங்கு குலைந்துவிட்டதாக, பேருந்துகள் கொளுத்தப்பட்டதாக, போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டதாக, ரயில்கள் தடம் புரளவைக்கப்பட்டதாக எங்கெங்கு இருந்து தகவல் வந்ததோ... 'இனியும் சீமானை வெளியேவிட்டு வைத் திருந்தால், தமிழகமே சுடுகாடாகிவிடும்!’ எனப் பதறி, தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் பாய்ச்சினார்கள்!
அதன் பிறகுதான் தமிழகம் அமைதியானதாம். சட்டம் - ஒழுங்கு சீரானதாம். பொது மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் அமைதியாக நடமாடினார்களாம். இந்த தனிப்பட்ட சீமானால் தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கைக் கெடுக்க முடியுமானால், இந்த நாட்டைவிட பலம் வாய்ந்தவனா நான்? சிரிப்பாகத்தான் இருக்கிறது!
ஓர் அறையைவிட்டு வெளியே வருவதைப்போலத்தான், சிறையைவிட்டு வெளியே வந்திருக்கிறேன். கம்பிக்குள் தள்ளிக் களி தின்னவைத்தால், 'தம்பி’க்காகப் பேசும் பேச்சைத் தடுத்துவிடலாம் என எண்ணினார்களோ என்னவோ... வேலூர் சிறையில் அடைத்தார்கள். என் குரல்வளையை உடைக்கிற சக்தி அந்தக் கொட்டடிக்கு இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. நஞ்சுக் குப்பி கடிக்கவும் தயங்காதவன், அட்டைப் பூச்சிக் கடிக்கு அரண்டுவிடுவான் என நினைத்ததே கேவலம். அவர்கள் பெரியாரின் கொள்கை வழி வந்தார்களோ இல்லையோ... நான் அந்தப் பழுத்த தாத்தாவின் பழுக்கக் காய்ச்சிய தத்துவங்களின் தடம் வந்தவன். 'சோம்பலும் ஓய்வும் தற்கொலைக்குச் சமம்!’ என 90 வயதில் சொன்ன அந்தப் போராளியின் பேரனை ஒரு அறைக்குள் அடைத்துவைத்து அடக்கி விட முடியுமா?
ஐந்து தடவை சிறைவாசம்... அதில் இரண்டு முறை தேசியப் பாதுகாப்பு சட்டம். சரமாரியாக வழக்குகள்... ஏன் இவை எல்லாம்? அரசாங்கத்தையும் அதன் அதிகாரத்தையும் கையில் வைத்துக்கொண்டு, இந்தத் தேசத்தின் வளத்தை சுரண்டித் தின்றேனா... உறவுக் கூட்டத்தை ஊரெல்லாம் வளர்த்து, அகப்பட்ட இடம் எல்லாம் அள்ளி, உலகம் எங்கும் ஓடி ஓடிப் போய்ப் பதுக்கும் அளவு சொத்து குவித்தேனா? எத்தனை சுழியன் என எண்ண முடியாத அளவுக்கு லட்சம் கோடிகளைப் பதுக்கிவிட்டேனா?
ஈசல் இறந்தால்கூட இழவு கொண்டாடும் இனத்தில் பிறந்துவிட்டு, இனமே இறந்து கிடக்கையில் கை கட்டி, வாய் மூடி, கதறல் அடக்க இந்த மூர்க்கக்காரனால் முடியவில்லை. ஒப்பாரி வைத்ததைத் தவிர, ஒரு தவறும் செய்யாதவனை பயங்கரவாதியாகப் பார்க்கிறீர்களே... இந்த சீமான் சென்னைக்கு எதற்காக வந்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
150 ரூபாய்க்கு மிளகாய் மூட்டையைப் போட்டு விட்டு சென்னைக்கு என்னை பேருந்து ஏற்றி அனுப்பினான் என் அப்பன். வறுமையை ஜெயிக்கவும் - வாழ்ந்து காட்டவும் சென்னைக்கு வந்து, மாதத்துக்கு ஒரு முறை 100 ரூபாயைக்கூட அப்பனுக்கு அனுப்ப முடியாமல், எத்தனையோ வருடங்களை இயலாமையிலேயே கழித்தவன். இன்றைக்கும் சொந்த ஊரில் ஒரு வீடு கட்ட முடியவில்லையே என்கிற ஏக்கம் நீங்காதவன். என்னையா பயங்கரவாதி எனச் சொல்லி பயம் காட்டுகிறீர்கள்?
அறிவாற்றலும், வீரமும் செறிந்துகிடக்கும் இந்த இனத்துக்கு அரசியல் வலிமை சேர்க்கும் பற்றாளர்கள் பற்றாக்குறையாகி விட்டதுதானே எங்கள் பதற்றத்துக்குக் காரணம். கண் முன்னே சொந்த இனம் கருவறுக்கப்பட்டபோது, பட்டம் பதவிகளைத் தூக்கி எறிந்துவிட்டுத் துடிக்கிற தலைவன் எங்களுக்கு இல்லாமல் போய்விட்டானே... இனத்துக்காகக் குடும்பத்தையே வாரிக் கொடுத்த தலைவன் பிரபாகரன் அங்கே களமாடி நிற்க... குடும்பத்துக்காக இனத்தையே காவு கொடுத்து வேடிக்கை பார்த்த கருணாநிதியை எப்படி எங்களின் தலைவனாய் ஏற்க முடியும்?
ஈழத்தின் வீழ்ச்சி கருணாநிதியின் இதயத்தைச் சுட்டிருந்தால்... வல்லூறுகளின் கொடூரங்கள் அவருடைய வாயைத் திறந்திருந்தால்... நாங்கள் ஏனய்யா நரம்பு முறுக்கி சிறைக்குக் கிளம்பப்போகிறோம்? இனத்தைக் காக்க நீங்கள் இருப்பதாக எண்ணி சினத்தை அடக்கி இருப்போமே... 'இனப் பாசம் கிலோ என்ன விலை?’ எனக் கேட்கிற ஆளாக, மொத்தக் கொடூரத்தையும் சத்தமின்றிப் பார்த்துக்கொண்டு இருந்தீர்களே... இப்படிப்பட்ட இதயத்தோடு வாழும் உங்கள் ஊரில் ஒப்பாரிவைப்பதும் உலக மகாக் குற்றம்தான்! கேள்வி கேட்பதும், கேவி அழுவதும் தேசியப் பாதுகாப்பு மீறல்தான்!
கொடூரப் போரில் ஈழமே எரிந்து காடாகிக் கிடந்த வேளையில், எங்களின் கோபம் தமிழகத்தில் வசிக்கும் ஒரு சிங்களவனையாவது சீண்டியதா? ஒரு புத்த துறவியாவது எங்களால் துரத்தப்பட்டாரா? சிங்கள இராணுவத்தின் வெறித் தாண்டவத்துக்கு டெல்லி ஆயுதம் கொடுக்க... அதை சென்னை கை கட்டி வேடிக்கைப் பார்க்க... துடித்துப்போன நாங்கள் எங்கள் உயிர்களைத் தானே தீக்குச்சிக்குத் தின்னக் கொடுத்தோம். எங்களின் இயலாமையும் கோபமும் ஒரு சிங்களவனின் மீதாவது திரும்பியதா? அப்போதும் சிங்கள மாணவர்கள் இங்கே படித்துக்கொண்டு தானே இருந்தார்கள்? சிங்கள வியாபாரிகள் எங்கள் தெருக்களில் திரிந்துகொண்டுதானே இருந்தார்கள்? மாற்று இனத்துக்கு மதிப்புக் கொடுக்கும் எங்களின் மாண்பு அப்போது புரிய வில்லையா இந்த அரசாங்கத்துக்கு? என் இனமே எரிந்து சாய்ந்தபோது... எதிர்த்துக் கேட்கத் திராணியற்றவர்கள், சிங்கள மாணவனை அடிப்பேன் என்றதும் சீறுகிறார்களே... இது எந்த ஊர் நியாயமய்யா?
சிறையில் தள்ளி என் குரல்வளையைச் சிதைத்து விடலாம் எனத் திட்டமிட்ட கருணாநிதிக்குச் சொல்கிறேன்... எத்தனை முறை வேண்டுமானாலும் உங்களின் பயங்கர சட்டங்களைப் பாய்ச்சுங்கள். உங்களைப்போல், 'ஐயோ... கொலை பண்றாங்கப்பா... காப்பாத்துங்கப்பா...’ என அலறித் துடிக்கும் ஆள் நான் இல்லை! என் நாடி நரம்பின் கடைசித் துடிப்பையும் நீங்கள் துண்டித்துப் போட்டாலும், உங்களிடம் மண்டியிட நான் தயார் இல்லை.
எந்த வார்த்தைகளுக்காக என்னை வளைத்தீர்களோ... அதே வார்த்தைகளை கொஞ்சமும் பயமின்றி உரக்கச் சொல்கிறேன்...
''எங்கள் மீனவனை இனியும் அடித்தால், சிங்கள மாணவர்களை நாங்கள் அடிப்போம்!''
ஓயாது அலை..........
நன்றி: ஜூனியர் விகடன்.

14 டிசம்பர் 2010

துரோகிகள் யார்?தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!

எனது உயிரிலும் மேலாக நான் நேசிக்கும் தமிழீழ மக்களுக்கும், அங்கிருந்து புலம்பெயர்ந்து பூமிப்பந்தெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் நாம் எமது விடுதலைப் போராட்டத்தின் ஒரு நெருக்கடி மிகுந்த வேளையில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடான கருத்துக்களையும், பரப்புரைகளையும் தவிர்க்கவும், மக்களுக்கு எமது நிலைப்பாடு பற்றி தெளிவான விளக்கங்களையும் கொடுக்க வேண்டியிருப்பதனால் இப்பத்தி முக்கியம் பெறுகின்றது.
தனிப்பட்ட நபர்களைச் சாடுவதோ அல்லது தனிமைப்படுத்துவதோ எமது விடுதலைப் போராட்டத்தின் நோக்கம் அல்ல. இருந்தபோதும் கூட தற்போது ஏற்பட்டிருக்கும் தவறான பரப்புரைகளை தகர்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முள்ளிவாய்க்காலில் எமக்கு ஏற்பட்ட இராணுவப் பின்னடைவு ஒட்டு மொத்த விடுதலைப் போராட்டத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மைதான். அதற்காக விடுதலைப் போராட்டம் முடக்கப்பட்டு விடுமா என்ன?.
எமது மண் மீட்பிற்கான போராட்டம் ஒரு போதும் தடைப்படப் போவதில்லை. ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கின்ற தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கு சில குறுகிய சுயநல விரும்பிகள் முனைப்புக் காட்டுவது வெளிப்படையாகத் தெரிகின்றது. முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தில் வன்னிக்கும், புலம்பெயர் தமிழர் கட்டமைப்புக்குமான தொடர்புகள் சீரின்மையால் இதனைப் பயன்படுத்தி சில தனி நபர்கள் தன்னிச்சையான செயற்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்து இன்று அது விஸ்பரூபம் எடுத்திருக்கின்றது.
இதன் வெளிப்பாடுதான் ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் துரோகிகள் பட்டம் சூட்டும் நிகழ்வுகள். உண்மையில் துரோகிகள் யார் என்பதை அடையாளம் காணவேண்டிய பொறுப்பு மக்களுடையதே தவிர தனிநபர்களினதும், அவர்களினால் நடத்தப்படும் சில ஊடகங்களினதும் கடமையல்ல.
முள்ளிவாய்க்கால் பேரவல நாட்களில் அந்த மக்களையும், மண்ணையும் மீட்பதற்கு எம்முறவுகள் அள்ளிவழங்கிய பெருந்தொகை நிதி எங்கே போனது?. அந்நிதி தமிழீழத்தை நிச்சயமாகச் சென்றடையவில்லை. அப்படியாயின் அந்த நிதி தனிநபர்களிடம் எங்கோ முடங்கிக் கிடக்கின்றது. அந்தநிதியை வெளியே காட்டாமல் பதுக்கி வைத்துக்கொண்டு இறுதிக்கட்டப் போரில் அநாதரவாக்கப்பட்ட மக்களுக்கோ, போராளிகளுக்கோ எந்தவிதமான உதவிகளையும் செய்யாமல் அவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களுக்கான செயற்திட்டங்களை பேச்சளவில்கூட அறிவிக்காமல் கடந்த ஒன்றரை வருடங்களைக் காலங்கடத்தி. தமிழீழத் தேசிய நிதியைச் சூறையாடுவதையே குறிக்கோளாகக் கொண்டு தம்மை அனைத்துலக தொடர்பாளர்கள் என்று பறைசாற்றிக் கொண்டு. அதேநேரம் எமது தேசத்திற்காக ஏதாவது செய்ய முனைவோரையும், எமது போராட்டத்தின் அடுத்த படிநிலைச் செயற்பாடுகளைச் செய்ய முனையும் தேசாபிமானிகளையும், போராளிகளையும் துரோகிகள் பட்டம் சூட்டுவதிலேயே இவர்கள் குறியாக இருக்கின்றார்கள்.
உருத்திரகுமார் துரோகி. விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்கள் துரோகி. இடைக்கால தன்னாட்சியை உருவாக்கிய மதியுரைஞர் குழு துரோகி. இறுதிக்கட்டப் போரில் வெடிபொருட்கள் தீரும் வரை போராடி ஈற்றில் மக்களோடு மக்களாக வந்த போராளிகள் துரோகி. புலம்பெயர் தேசங்களில் ஒவ்வொரு நாட்டுக் கிளைகளாலும் சேகரிக்கப்பட்ட தமிழீழத் தேசிய நிதி சார்பான கணக்கறிக்கைகளைக் கேட்போர் துரோகி. உருப்படியான செயற்திட்டங்களைக் கொடு;த்து இவர்களைச் செய்யச் சொன்னால் அவர்களும் துரோகி. இவர்கள் எதுவும் செய்யாதவிடத்து தாமே புதிய அமைப்புக்களை உருவாக்கி உருப்படியான தமிழர் நலத்திட்டங்களைச் செய்ய முனைவோரை அச்சுறுத்துவது, தடுப்பது அதுவும் சரிவராதவிடத்து அவர்களுக்குத் துரோகிப்பட்டம் கொடுப்பது. இதுதான் இவர்களது தேசியப்பணி ஆகிவிட்டது.
இப்படியே எல்லாரையும் துரோகி என்றால் உண்மையில் யார் துரோகி. மக்களே சிந்தியுங்கள். இவர்கள் சொல்கின்ற துரோகிப் பட்டியலில் 98வீதான மக்கள் அடங்கிவிடுவர். அப்படியாயின் துரோகிகள் யார்? யார் மற்றவர்களைத் துரோகி என்கின்றானோ அந்த நபர்தான் உண்மையில் துரோகி. தம்முடைய இருப்பைத் தக்கவைக்கவும், தம்மைக் காத்துக் கொள்வதற்குமே இவ்வாறு எடுத்தவுடன் துரோகிகள் ஆக்கப்படுவதைக் காணமுடிகின்றது. மக்களை முட்டாள்கள் ஆக்கியும், ஈழமக்கள் இரத்தம் சிந்தி உழைத்த தழிழீழத் தேசிய நிதியைச் சுருட்டி அதனூடே வாழ்பவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்களே. இவர்களை மக்கள் இனங்காணாது விட்டால் இவர்கள் நினைப்பது போல் மக்களும் முட்டாள்கள் ஆகவே ஆகிவிட நேரிடும்.
யாவரையும் துரோகிகள், சிங்களத்தின் புலனாய்வாளர்களாகச் செயற்படுகின்றனர் என மற்றவர்களுக்கு துரோகிகள் பட்டம் வழங்கி அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கும் புலிகளின் அனைத்துலக தொடர்பகம் என்று தம்மைத் தாமே அழைத்துக் கொண்டு அதனைச் செயற்படுத்திக் கொண்டிருக்கும் நந்தகோபன் என்ற நபர் யார்? கேட்டுக் கொள்ளுங்கள் குறிப்பை.
நந்தகோபன் வன்னியில் மூத்தபோராளி கஸ்ரோவின் உதவியாளர் மாத்திரமே. இறுதிக்கட்ட யுத்தம் வரை இவர் களமுனைகளுக்குச் சென்றதே கிடையாது. இராணுவத்துக்கெதிராக துப்பாக்கி ஏந்தி ஒரு ரவைகூட சுடாதவர். மூத்தபோராளி கஸ்ரோ அவர்களின் உதவியாளனாக மட்டும் நின்ற இவர் புலம்பெயர் தேசத்தில் வந்து எப்படிப் பெரும்புலியானர்?.
மற்றும் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்த நந்தகோபன் எப்படி வெளியே வந்தார்?. மூத்த உறுப்பினர்கள் முதல் இறுதிக்கட்டச் சண்டை நடக்கும் போது போராட்டத்தில் இணைந்தவர்கள் வரை அனைவரையும் தனியாகப் பிரித்தெடுத்து, வௌ;வேறு இடங்களில் அடைத்து வைத்து சித்திரவதைகளுக்குள்ளாக்கிவரும் சிறிலங்கா அரசபடைகளும், சிங்கள அரசும் எவ்வாறு நந்தகோபனை வெளியில் விட்டனர். அதிலும் குறிப்பாக விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த கஸ்ரோ அவர்களின் உதவியாளனாக இருந்த நந்தகோபனைக் கைது செய்திருந்தாலும், சில மாதங்களுக்குள்ளாகவே நாட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதித்தது ஏன்?
கவிகளின் மூலமும், இலக்கியங்கள் மூலமும் புரட்சியை ஏற்படுத்திய எமது ஆஸ்தான கவிஞராக இருந்த புதுவை இரத்தினதுரை அவர்களையே விட்டுவைக்காத சிறிலங்கா அரசு. விடுதலைப்புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரான கஸ்ரோ அவர்களின் உதவியாளரான நந்தகோபன் சரணடைந்த பின்னர்; எதுவித நடவடிக்கைகளுமின்றி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல சிறிலங்கா அரசு வழியமைத்துக் கொடுத்திருந்தது. இவ்விடயத்தை உன்னிப்பாக நோக்கில் விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பை இவர்மூலம் கண்காணிக்கவும், அதனூடாக அதைச்சிதைக்கவும், அதில் பணியாற்றியோரை சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி கைது செய்யவுமே சிறிலங்கா அரசு தனது கைக்கூலியாக நந்தகோபனை வெளியில் அனுப்பியிருக்கலாம் என்பது தற்போதைய அவரின் நடவடிக்கைகள் சுட்டிநிற்கின்றது.
நந்தகோபன் சரணடைந்திருந்தபோது முகாமில் இராணுவப் புலனாய்வாளர்களிடம் சேர்ந்திருந்ததும், ஏராளமான போராளிகளுக்குத் தெரியும். மூத்தபோராளி கஸ்ரோ அவர்கள் சரியான உடல் இயக்கம் இல்லாத நபர் என்பது யாவருக்கும் தெரியும். எனவே இறுதிக்கட்டங்களில் அவரைப் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்திவிட்டு விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புச் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அழிக்கின்ற அல்லது நகர்த்துகின்ற பொறுப்பில் இந்த நந்தகோபன் என்பவரும், அறிவு என்பவருமே பொறுப்பாக இருந்தார்கள். அவர்கள் தமது கடமையைச் சரிவரச் செய்யாது தங்களை மட்டும் பாதுகாத்துக் கொண்டு மக்களோடு சேர்ந்து சரணடைந்து வந்துவிட்டார்கள். இதனால் தான் விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆவணங்கள் முழுவதும் சிறிலங்கா படைகளால் விஸ்வமடுப்பகுதியில் வைத்து எடுக்கப்பட்டது. அவ்வாறு அவ் ஆவணங்கள் அனைத்தும் சிங்கள அரசிடம் செல்வதற்கு காரணகர்த்தாக்கள் இவர்கள் இருவருமே. இவர்களே இன்று அனைத்துலக செயலகத்தை வழிநடத்தும் பொறுப்பாளர்கள்.
சிங்கள அரசுக்கெதிராகச் செயற்பட்ட புலம்பெயர் தமிழர்களை இனங்காணுவதற்கு விஸ்வமடுவில் எடுக்கப்பட்ட அனைத்துலகச் செயலகத்தின் ஆவணங்களே போதுமாவை. புலம்பெயர் மக்களுக்குத் தெரியாத தீவிர விடுதலைச் செயற்பாட்டாளர்கள், உயர்மட்ட அரசியலாளர்கள், பொருளியலாளர்கள் என யாவருடைய விபரங்களும் இராணுவத்தினரிடம் உள்ளன. வெளியே யாருக்கும் தெரியாத விடயங்களை இராணுவத்திடம் அகப்பட வைத்துவிட்டு புலம் பெயர் தேசத்திற்கு வந்து மற்றவர்களைத் துரோகி என்று சொல்ல இந்த நந்தகோபனுக்கு எப்படி முடியும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இராணுவத்திடம் அகப்பட்டு அல்லது சரணடைந்து வெளியில் வந்தவர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் உடனடியாக பாரிய பொறுப்புக்கள் எதனையும் கொடுத்தது கிடையாது. அப்படி வந்தவர்கள் உடனடியாக பொறுப்புக்களை ஏற்றதும் கிடையாது. அப்படியிருக்க நந்தகோபன்; புலம்பெயர் தேசத்திற்கு வந்தவுடன் ஊடத்துறைப் பொறுப்பை எடுத்துக்கொண்டு ஏன் இப்படியான குழப்பங்களை விளைவிக்கின்றார்?. நந்தகோபனை நம்புவது எப்படி. கேபி ஒரு கைதி. அவர் பற்றி நாம் அலட்டத் தேவையில்லை. அவர் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்பது வெளிப்படை. அத்துடன் மக்கள் மத்தியில் அறியப்படாத கேபியை புலம்பெயர் மக்கள் மத்தியில் அறியச் செய்து அவரை ஒரு பெரிய நபர் ஆக்கியதும் இந்த ஊடகங்களும், நந்தகோபனுமே. கேபி குழு என்ற விடயத்தை கையிலெடுத்து மக்கள் மத்தியில் அவரைப் பெரிய சக்தியாகக் காட்டி. விளம்பரப்படுத்தி. தன்னுடைய நிலையை மறைப்பதற்காக ஏதோ தலைமைத்துவப் போட்டி இருப்பது போல ஒரு மாயையை ஏற்படுத்தி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருப்பது இந்தஊடகங்களும், நந்தகோபனுமே.
குறிப்பாக கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்ததன் பின் பல அறிக்கைகளை ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அதில் ஒன்று தான் இலங்கைப்படைகளால் 97,98,99 காலப்பகுதிகளில் நடாத்தப்பட்ட ஜயசிக்குறூய் இராணுவ நடவடிக்கைக்கெதிராக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஒட்டுமொத்த தாக்குலையும் தாமே தலைமைதாங்கி நடத்தினேன் என்பது. இவ்வாறு இவர் தம்பட்டம் அடித்தபோது தமிழீழ விடுதலைப்புலிகள் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. அதனால் கருணாவின் தம்பட்டம் உடைந்து போனது. அதேபாணியில் கேபி விடயத்தையும் கையாண்டிருந்தால் கேபி மிகப்பெரிய சக்தி பற்றிய மாயை உருவாக்கியிருக்க வாய்ப்பேயில்லை.
எனது அன்புக்கும் பாசத்துக்குமுரிய மக்களே!
அனைத்துலகச் செயலகத்தின் தற்போதய பொறுப்பாளர்கள் எமது விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலம் பற்றிய ஏதாவது ஒரு செயற்திட்டத்தை கடந்த ஒன்றரை வருடங்களில் அறிவித்தார்களா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மற்றவர்களைத் துரோகி என்பதும், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் பற்றி தவறான பரப்புரைகளை தமது ஊடகங்களான பதிவு, சங்கதி (புதிது), ஈழமுரசு, புலத்தில் (கனடா) ஆகியவற்றில் மேற்கொண்டு காலத்தை வீணடித்து தேசிய நிதியைச் சூறையாடுவதிலும், தங்களுடை இருப்பை உறுதிப்படுத்துவதிலுமே காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இறுதிக்கட்டப் போரின்போது இராணுவ முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளியேறி விடுதலை வேட்கையோடு இன்று இயங்கிக் கொண்டிருக்கும் போராளிகளையும், கட்டளைத் தளபதிகளையும் மதிக்காது அவர்களின் செயற்பாடுகளுக்கான வழங்கல்கள் எதனையும் செய்யாமல் அவர்களைப் புறந்தள்ளிவிட்டு காகிதத்திலும், இணையத்தளங்களிலுமே தமிழீழ விடுதலைப்போர் என்று கர்ச்சித்துக் கொண்டு தமிழீழச் செயற்பாட்டாளர்களுக்குத் துரோகிப்பட்டம் வழங்குவதுதான் இந்த அனைத்துலகத் செயலக தற்போதைய பொறுப்பாளர்களின் பணியாகிப் போய்விட்டது.
உண்மையில் புலனாய்வு அமைப்புக்கள் ஊடுருவுவதென்றால் அது யாருக்கும் புலப்படாது. அதை சிங்கள அரசு பிரச்சாரப்படுத்தவும் மாட்டாது. புலனாய்வு என்பது எவருக்கும் தெரியாமலேயே இரகசியமாக நடத்தப்படும் வேலை. புலனாய்வாளர்கள் பற்றிய சரியான மதிப்பீடு தெரியாமல் சிங்கள அரசின் புலனாய்வு ஊடுருவல் என்ற பூச்சாண்டியைக் காட்டி இந்த நந்தகோபன் குழு புலம்பெயர் மக்களிடையே குழப்பம் விளைவிக்க முனைகின்றது.
பொதுவாக அனைத்துக தொடர்பகத்தைச் செயற்படுத்திக் கொண்டிருக்கும் ஒருசில பொறுப்பாளர்களே தவறானவர்கள் என்று குறிப்பிடுகின்றேன். ஆனால் அதில் உள்ள அனைத்துப் போராளிகளும் பிழையானவர்கள் அல்ல. அதேபோல் அனைத்துலக செயற்பாட்டுக் கிளைகள் எல்லாவற்றையும், அதன் எல்லாச் செயற்பாட்டாளர்களையும் பிழை என்றும் கூறவில்லை. இலங்கை அரசு உடைக்க நினைக்கும் நாடுகடந்த தமிழீழ அரசையும், புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற மக்கள் அமைப்புக்களையும் இவர்கள் ஒற்றுமையாகச் செயற்படுவதைத் தடுக்கிறார்கள். அதாவது நாடுகடந்த அரசு. மற்றும் அனைத்துலக தொடர்பகம் மக்களுடன் இணைந்து ஒற்றுமையாகச் செயற்படக்கூடாது என்பதே சிங்கள அரசின் திட்டமாகும். அதைத் தற்போது இந்த நந்தகோபன் குழு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதிலிருந்து தெரிகின்றது நந்தகோபன் யாரின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகின்றார் என்பது. இந்நபரின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கின்ற உண்மையான போராளிகளும் தேசியச் செயற்பாட்டாளர்களும் இதை விளங்கிக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு நந்தகோபன் குழுவினரால் பல தேசியச் செயற்பாட்டாளர்களும், மக்கள் கட்டமைப்புக்களும் துரோகி என்ற முத்திரை குத்தப்பட்டு முடக்கப்படுவதோடு தமிழீழ விடுதலைப்போரை அடுத்த கட்;டத்திற்கு நகர்த்தும் நோக்கத்தில் புதிதாக உருவாக்கப்படுகின்ற கட்டமைப்புக்களை துரோகி கருணாவுடனும், கேபியுடனும், இலங்கைப் புலனாய்வுத் துறையினருடனும் முடிச்சுப்; போடுகின்ற சூட்சுமம் இதுதான். அத்துடன் நந்தகோபனதும், சில தனிப்பட்ட நபர்களினதும் தமிழீழத் தேசிய நிதியைச் சூறையாடி மோசடி செய்த விடயங்களை அடுத்த மடலில் வெளியிடுகின்றேன்.
ஆகவே எத்தனை தடைகள் வரினும் தமிழீழ விடுதலைக்கான போராட்டம். மானிட இயங்கியல் விதியின் வழித்தடத்தைப் பின்பற்றி இயல்பாகவும், உறுதியாகவும் முன்னோக்கிச் செல்லும். இக்கால ஓட்டத்தில் பல அற்புதமான மனிதர்கள் வருவார்கள். போவார்கள். சங்கமிப்பார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டம் தனி மனிதர்களுக்கானதன்று. அது தமிழ்த் தேசிய இனத்திற்குச் சொந்தமானது. உண்மையான தேசியவாதிகள் யாராக இருந்தாலும் இதில் இணையலாம் செயற்படலாம், பணியாற்றலாம். இதற்கு யாரும் தடை போடமுடியாது. “நான் சாகலாம் நாங்கள் சாகமுடியாதுஇலக்கை அடையும் வரை தொடர்ந்தும் போராடுவோம்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
.புலிச்சோழன்
நிர்வாகப் பொறுப்பாளர்
இம்ரான் பாண்டியன் படையணி

முக்கிய குறிப்பு
உண்மை நிலையை உணர்ந்து ஒன்று பட்டு விடுதலையை வென்றெடுக்க செயற்பாட்டாளர்கள் உரியவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம். தற்போதுள்ள நிலைமை தெரிந்திருந்தும் பொறுப்பாளர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்பவர்கள் அந்த அந்த நாடுகளில் விடுதலைக்காக இரவு பகல் பாராது செயற்படும் உங்களுக்கு எதையும் தெரியப்படுத்தாமல் தங்களது பெயரையும் பணம் சம்பாதிக்கும் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதை நீங்கள் கண்களால் காண்கிறீர்கள் எனவே சிந்தித்து செயல்ப்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்.