
இலங்கை அகதிகள் 219 பேருடன் கனடாவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் தாய்லாந்து நாட்டுக் கப்பலான எம்.வீ-சன் சீ அமெரிக்க அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் பிலிப் ஜே. கிரௌசி தெரிவித்தார். தற்போது இக்கப்பல் கனடாவின் வன்கூவர் நகரை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், இக்கப்பல் தொடர்பில் அமெரிக்கா நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். இதேவேளை, சன் சீ கப்பல் தொடர்பில் அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் பலருக்கும் பல தகவல்கள் தெரிந்திருந்தும் அத்தகவல்களை வெளிப்படுத்த அவர்கள் மறுப்பதாக அமெரிக்க இணையத்தளத்தில் செய்திகள் வந்துள்ளன.
தனது பெயரை வெளியிட விரும்பாத ஒரு இலங்கைத்தமிழருக்கு அக்கப்பல் குறித்த விடயங்கள் தெரிந்துள்ளதாகவும், ஆனால் அக்கப்பலில் குறித்த தமிழரின் உறவினர்கள் எவருமே பயணிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை அரசாங்கம் கூறுவதுபோல அக்கப்பலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் வந்தாலும்கூட, அவர்கள் தம்மைப் புலிகளாகக் காட்டிக்கொள்ள மாட்டார்கள் என்றும் அத்தமிழர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக