திருச்சியில் அமைச்சர் நேரு மற்றும் சிவா எம்.பி. ஆதரவாளர்களின் கோஷ்டி பூசல் வலுத்துவருகிறது.முதல்வர் கருணாநிதி அடுத்த மாதம் 8ஆம் தேதி திருச்சி செல்கிறார். திருச்சியில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். முதல்வரின் வருகையையொட்டி சிவா எம்.பி. ஆதரவாளர்கள் திருச்சி முழுவதும் முதல்வரை வரவேற்று பேனர்கள் வைத்து வருகின்றனர். நேற்று மாலை சிவா வீட்டுக்குச்செல்லும் வழியில் ஸ்டேட் பாங்க் ஆபீசர்ஸ் காலணியிலும் பேனர் வைத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களான திருச்சி துணைமேயர் அன்பழகன், திமுக பகுதி செயலாளர் காஜாமலை விஜய், அமைச்சர் நேருவின் உதவியாளர் முத்துச்செல்வன் உட்பட 30 பேர் அங்கு வந்தனர். இவர்கள், பேனர் வைத்துக்கொண்டிருந்த சிவாவின் ஆதரவளர்களை தடுத்தனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. நேரு ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.இந்த தாக்குதலில் சிவாவின் ஆதரவாளர்கள் வழக்கறிஞர் பாரதி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
வழக்கறிஞர் பாரதிக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியபடியே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிருஷ்ணமூர்த்தி கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து இன்று வழக்கறிஞர் பாரதி, திருச்சி கண்டோன்மெண்ட் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தியிடம் புகார் மனு அளித்தார். தாக்குதல் நடத்திய அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்ய கோரியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், திருச்சி துணைமேயர் அன்பழகன், திமுக பகுதி செயலாளர் காஜாமலை விஜய், அமைச்சர் நேருவின் உதவியாளர் முத்துச்செல்வன் ஆகிய 3 பேர் மீதும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி மாநகராட்சி கமிஷ்னர் பால்சாமி, வழக்கறிஞர் பாரதி மேல் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், மாநகராட்சி இடத்தில் அத்துமீறி சேதப்படுத்திவிட்டார்கள் என்று பாரதி மேல் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.
வழக்கறிஞர் பாரதியோ, திருச்சி மாநகர வழக்கறிஞர்கள் சங்கத்தினரை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்த ஏற்பாடு செய்துவருகிறார்.
திருச்சியில் திமுகவின் கோஷ்டி பூசல் வலுத்துவருவதால் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக