30 ஆகஸ்ட் 2010

வெறுப்பு நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர் - வலம்புரி.



யுத்தத்தின் வெற்றி மூலம் நாட்டை இணைத் தாலும் மக்களை இணைக்க முடியவில்லை என அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்த கருத் துக்கள் ஆழமானவை. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களை யுத்த வெற்றி மூலம் பெற்றுக் கொள்ள முடிந்தது.
ஆனால் சிங்கள, தமிழ் இனங்கள் ஒற்றுமைப்படவில்லை. அவர்களிடையே இன்னமும் வேற்றுமை அதிகரித்துள்ளது என்பதே அமைச்சர் டியூ.குணசேகரவின் கருத்து. அப்படியானால் மக்களை இணைக்க வேண்டும். ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்பது அமைச்சரின் முடிபாக இருக்கும். ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் ஓர் உண்மையை வெளிப்படையாகக் கூறியமை வர வேற்கப்பட வேண்டியதொன்றாகும்.
அதேநேரம் அவர் கூட மக்களை இணைப்பதற்கான திட்ட முன்மொழிவுகளை முன்வைக்க முடியாதென்பதும் நிறுத்திட்டமான உண்மை. அந்தளவிற்கு இந்த நாட்டில் பேரினவாதம் புரையோடிப் போயுள்ளது. யுத்தத்திற்குப் பின்னர், ஏ-9 பாதை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து தென் பகுதி மக்கள் பெருந்தொகையில் யாழ்ப்பாணத்திற்கு வந்து செல்கின்றனர்.
இவர்களின் வருகை குறித்து தமிழ் மக்களின் மனநிலை என்னவென்பதை எவரும் அறிய முற்படுவதில்லை. இவர்கள் தாங்கள் உண்டு. தங்கள் பாடு உண்டு என்ற நிலையில் எதையோ இழந்தவர்களாக நடமாடுகின்றனர். அவர்களோ தாங்கள் நினைத்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி எதுவும் செய்யலாம் என்ற நினைப்பில் செயற்படுகின்றனர்.
சில இடங்களில் வீதிகளில் வாகனங்களை மறித்து பொலிஸாரும் படையினரும் தங்கள் சிங்கள உறவுகளிடம் குசலம் விசாரிக்கின்றனர். பிரதான வீதிகளில் கூட இந்த நிலை காணப்படுகின்றது. இதற்கு மேலாக தென் பகுதியில் இருந்து வருபவர்கள் கலாசாரப் பிறழ்வான செயற்பாடுகளை இங்கு அறிமுகப்படுத்துவதான செய்திகள் அதிர்ச்சி தருகின்றன. எவரும் எதுவும் கேட்கமுடியாதென்ற நிலையில் நடக்கின்ற நிகழ்வுகள் குறித்து அரசு கவனம் செலுத்த தவறுமாயின், அமைச்சர் டியூ.குணசேகர கூறிய மக்களை இணைக்க முடியவில்லை என்ற குறைபாடு நிரந்தரமாக நீண்டு செல்வதைத் தடுக்க முடியாது போய் விடும்.
எனவே யாழ்.குடாநாட்டுக்கு வருகை தருகின்ற தென்பகுதி மக்கள் யாழ்ப்பாண மக்களின் மனங்களை நோகடிக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாதென்பதுடன் தென் பகுதி மக்களுக்கு மட்டுமே நாம் உறவானவர்கள் என்ற உணர்வை படையினர் வெளிப்படையாகக் காட்டுவதும் அவ்வளவு நல்லதல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக