10 ஆகஸ்ட் 2010

தமிழரின் அவலங்களை அறிய ஆஸி அரசு முயலவில்லை! வேட்பாளரான யாழ்ப்பாணத் தமிழ் பெண் விமர்சனம்.



ஈழத் தமிழர்களின் பேரவலங்களைப் புரிந்து கொள்வதற்கு ஆஸ்திரேலிய அரசு போதுமான முயற்சிகளை எடுக்கவில்லை என்று எதிர்வரும் ஆஸ்திரேலிய செனற் சபை தேர்தலில் கிறீன் கட்சியின் சார்பாகப் போட்டியிடுகின்ற யாழ்ப்பாணத் தமிழ்ப் பெண் பிராமி ஜெகன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
அவர் அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அதில் முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:
லேபர் கட்சியின் சில எம்.பி மார் ஈழத் தமிழர்கள் மீது அனுதாபம் கொண்டுள்ளார்கள் தான்.
ஆனால் ஈழத் தமிழர்களின் பேரவலங்களை விளங்கிக் கொள்வதற்கு லேபர் கட்சி போதுமான முயற்சிகளை எடுக்கவே இல்லை. ஆகவேதான் இலங்கை அரசு தமிழருக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டிருக்கும் இன ஒழிப்பு நடவடிக்கைகளை ஆஸி அரசினால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது.
ஆகவேதான் ஆஸ்திரேலியாவுக்கு அரசியல் தஞ்சம் கோரி வரும் ஈழ அகதிகள் விடயத்தில் ஆஸி அரசு கடும் போக்கைக் கைக்கொள்கின்றது. இது அக்கட்சியின் தலைமைத்துவ மாற்றத்தால் சரி வரப் போகின்ற விடயம் அல்ல.
இலங்கை அரசினால் யுத்தத்தின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள் குறித்து சர்வதேச மட்டத்தில் விசாரணை நடத்த சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து ஆஸ்திரேலியா உரத்துக் குரல் கொடுக்க வேண்டும்.
அத்துடன் இலங்கையில் முட்கம்பி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை உடன் விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை அரசுக்கு பாரதூரமான நெருக்குவாரங்களைக் கொடுக்க வேண்டும்.
இவையே ஈழத் தமிழர்கள் இலங்கையில் அவர்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புகின்றமைக்கு உதவிகளாக அமையும். இலங்கையில் சமாதானம் கிடைக்க வேண்டுமானால் தமிழர்களுக்கு முதலில் நீதி கிடைக்க வேண்டும்

என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக