28 ஆகஸ்ட் 2010

கப்பலில் அகதிகளாக கனடா வந்துள்ள தமிழர்கள் மீது பரிவிரக்கம் காட்ட வேண்டும் என பேராயர் வேண்டுகோள்!


கப்பலில் அகதிகளாக கனடா வந்துள்ள தமிழர்கள் மீது பரிவிரக்கம் காட்ட வேண்டும் என வன்கூவர் பேராயர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடிவரவுத்துறை சம்பந்தமான விவாதத்தின் போது குடியேற்ற வாசிகளின் கௌரவத்தை மனதில் வைத்திருக்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாக் கரையை வந்தடைந்துள்ள 492 தமிழ் குடியேற்றவாசிகள் தொடர்பாக கடுமையான விவாதங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. கனடாவின் குடிவரவுத்துறை முறைமைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் சட்டத்தை மாற்றியமைக்கவேண்டும் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்படும் நிலையில் ஒவ்வொரு மனிதரினதும் அடிப்படைக் கௌரவத்தை நினைவு கூரவேண்டிய நேரம் இது என்று வன்கூவர் பேராயர் ஜே. மைக்கேல் மில்லர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த குடிவரவுத்துறை விவாதத்தினால் ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் பலியாடுகளாகி விடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாதுகாப்பு தொடர்பான ஆபத்துகளுக்குக் கதவுகளைத் திறந்து விடாத வகையில் புதிதாக வருவோரிரை அடையாளம் கண்டுகொள்ளவேண்டிய தேவை பொறுப்பு வாய்ந்த அரசாங்கங்களுக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயுதமோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களை அகதிகளாக அங்கீகரிக்கவேண்டுமெனவும் அவர்களுக்கு சர்வதேச ரீதியான பாதுகாப்பு வழங்கப்படவேண்டுமென்றும் கத்தோலிக்க திருச்சபை கருதுவதாகவும் மில்லர் தெரிவித்துள்ளார்.
கனடா குடியேற்ற வாசிகள் அகதிகளின் தேசமென்ற புகழைப் பெற்றுள்ளது. அநீதியிலிருந்தும் தப்பி புகலிடம் தேடி வருவோரை வரவேற்கும் நீண்ட வரலாற்றையும் இந்நாடு கொண்டுள்ளது என்றும் மில்லர் குறிப்பிட்டிருக்கிறார். குடியேற்றவாசிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்பவேண்டுமென்பது தொடர்பாக அபிப்பிராய வாக்கெடுப்பில் பெரும்பான்மையானோர் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில் பேராயரிடமிருந்து இந்தக் கருத்து வெளிப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக