31 ஆகஸ்ட் 2010

இராணுவ அதிகாரிகள் தலைமையில் முக்கிய இலங்கைத் தூதரகங்கள்.

இலங்கையின் முக்கிய வெளிநாட்டுத் தூதரகங்கள் பலவும் தற்போது இராணுவ அதிகாரிகள் தலைமையில் கொண்டுநடத்தப்படுவதானது தூதரகங்கள் இராணுவ மயப்படுத்தப்படுகின்றதா என்ற பலத்த சந்தேகங்களை வெளிநாட்டுச் சேவை உறுப்பினர்களிடையே ஏற்படுத்தியுள்ளன. பிரிட்டனிலுள்ள தூதரகத்தில் அதன் உயர் ஸ்தானிகராக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கருணாகொடவையும், அதே தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவையும், ஐ.நா க்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறியையும், அதன் பிரதி நிரந்தரப் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவையும் நியமிக் அரசாங்கம் எடுத்துள்ள முடிவே இந்த சந்தேகத்தை மேலும் பலப்படுத்தியுள்ளது.
இதில் வசந்த கருணாகொட விடுதலைப் புலிகளுடனான இறுதிச் சண்டையில் தலைமை வகித்த தளபதி ஆவார். இதேபோல பிரசன்ன சில்வாவும் இறுதிக்கட்டப் போரில் 58 ஆவது படையணிக்குத் தலைமை தாங்கியவர். இதுதவிர சந்திரசிறியையும், ஷவேந்திர சில்வாவையும் ஐக்கிய நாடுகளின் நிரந்தரப் பிரதிநிதிகளாக நியமிப்பது மனித உரிமை மீறல்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு இப்பதவிகளா என்ற குற்றச்சாட்டுக்களையும் இலங்கை அரசு மீது ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதிக்கட்டப் போரில் இலங்கை புரிந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச சமூகம் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வெளிநாட்டுத் தூதரகங்களில் நியமனம் பெறுகின்ற இவ்வாறான இராணுவ அதிகாரிகள் உதவுவார்கள் என்று அரசாங்கம் நம்புகின்றது. ஆனால் ராஜதந்திரம் என்பது வித்தியாசமான ஒரு நடவடிக்கை என்றும் அதை ஆயுதந்தாங்கும் நபர்களால் கொண்டுநடத்த முடியாது என்றும் வெளிநாட்டு இராஜதந்திர வட்டாரங்கள் குறிப்பிட்டுக் காட்டியுள்ளன. ஆனால் தமது இராணுவ அதிகாரிகளைப் பயன்படுத்தியே புலிகளின் சர்வதேச வலையமைப்பை உடைத்தெறிய அரசு முனைவதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக