29 ஆகஸ்ட் 2010

புலிகளின் ஆயுதக் கொள்வனவாளர் பொன்னையா ஆனந்தராஜாவால் ஆபத்து : இலங்கை அரசு.



2000ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகளின் பல கப்பல்கள் சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து இலங்கை, மற்றும் இந்திய அரசின் கடற்படைகளால் அழிக்கப்பட்டது. புலிகளுக்கு ஆயுதம் ஏந்திவந்த கப்பல்கள் இலங்கையை அண்மிக்கும் முன்னரே, அவற்றை இனம் கண்டு அழிப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. 2002ம் ஆண்டு முதல் பகுதியில், இவ்வாறு சென்ற மற்றுமொரு ஆயுதக் கப்பல் சர்வதேச கடற்பரப்பில் தரித்து நிற்பதாக புலிகளுக்கு செய்தி அனுப்பப்பட்டது. அதில் இருக்கும் ஆயுதங்களை இறக்கி கரைக்கும் கொண்டுவரும் நடவடிக்கையில் கடற்புலிகள் ஈடுபட்டிருந்த வேளை, சற்றும் எதிர்பாராதவிதமாக அங்குவந்த இலங்கை கடற்படையினர் அக்கப்பல் மீது கடும் தாக்குதல் தொடுத்தனர்.
இதனால் கப்பல் தீ பற்றி எரிந்து சில மணித்தியாலங்களில் கடலில் மூழ்கியது. இருப்பினும் கப்பல் வெடித்து எரியவில்லை. இதன் காரணமாக அக் கப்பலில் ஆயுதங்கள் இருக்கவில்லை என புலிகளின் தலைமைப்பீடம் அறிந்தது. இதனை அடுத்தே தேசிய தலைவரால் கே.பி பணிநீங்கம் செய்யப்பட்டார். அவர் இடத்திற்கு ஆயுதக்கொள்வனவாளராக பொன்னையா ஆனந்தராஜா நியமிக்கப்பட்டார். ஆயுதங்களை கொள்வனவு செய்து அதைப் புலிகளிடம் கொடுக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் அதனை கப்பல் மூலம் கொண்டு செல்லும் பொறுப்புகளை புலிகளே மேற்கொண்டிருந்தனர்.
தற்போது கே.பி சரணடைந்து இலங்கை அரசிடம் தஞ்சம்கோரியுள்ள நிலையில், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராஜன் கைதானார். பின்னர் பிரின்சஸ் கிரிஸ்டீனா என்ற கப்பலும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அத்தோடு நின்றுவிடாமல், கே.பி தனது பொறுப்பில் இருந்த மேலும் 2 சரக்குக் கப்பல்களை, முறையே கோத்தபாய, பசில், ஆகியோரின் பெயருக்கு மாற்றி அதன் உரிமையை தாரைவார்த்துள்ளார். இலங்கைக்கு கப்பலைக் கொண்டுவந்தால் அது அரசுடமையாக்கப்படும் என்பதால் வெளிநாடுகளில் வைத்தே அதன் உரிமை மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இலங்கை அரசின் கவனம் பொன்னையா ஆனந்தராஜா பக்கம் திரும்பியுள்ளது. இவர் எந்த நாட்டில் வசித்துவருகிறார் என்று இதுவரை யாரும் அறிந்ததில்லை. அத்தோடு இன்றுவரை சர்வசாதாரணமாக ஆயுதங்களைக் கொள்வனவுசெய்ய இவரால் முடியும் என்றும், அவ்வகையான தொடர்புகளை இவர் இன்னமும் பேணிவருவதாகவும் சொல்லப்படுகிறது. புலிகளால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 6 சிலின் 143 இலகு ரக விமானங்கள், எரித்திரியா நாட்டில் ஆஸ்மாறா என்னும் இடத்தில் உள்ளது. இவற்றை எரித்திரிய அரசாங்கம் இலங்கைக்கு கொடுக்க மறுத்துவிட்டதோடு, அதனை அதன் உரிமையாளர்களிடமே கொடுப்போம் எனக் கூறியுள்ளது. எனவே உரிமையாளர்கள் ஏற்கனவே எரித்திரியாவை தொடர்புகொண்டுவிட்டனர் என்பதே அதன்பொருளாகும்.
இவ்வாறு பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் சர்வதேச அமைப்பின் உறுப்பினரான ஷானக்க ஜெயசேகர கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக