05 ஆகஸ்ட் 2010

தமிழ் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்த பிரபா கணேசன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்: மனோ கணேசன் அறிக்கை!



எனக்கும், எமது கட்சிக்கும் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் நம்பிக்கை துரோகம் செய்து, அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனை கட்சியில் இருந்து இடை நிறுத்தியுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு தற்போது விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள அவர், தாம் பிரபா கணேசனை கட்சியில் இருந்து இடைநிறுத்துமாறு கட்சியின் செயலாளர் நல்லையா குமரகுருபரனுக்கு தாம் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஜனாதிபதியுடன் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பிரபா கணேசன் அனுமதி கோரியதாகவும் அதற்கு அனுமதியளித்ததாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.
எனினும் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கோ அல்லது அரசாங்கத்தில் இணைவதற்கோ தாம் அவருக்கு அனுமதியளிக்கவில்லை என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பிரபா கணேசன் தமது முதுகில் குத்திவிட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கை
பிரபா கணேசன் எமது கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் இழைத்துவிட்டார்:

ஜனநாயக மக்கள் முன்னணி

தலைவர் மனோ கணேசன்,
அரசாங்கத்திற்கு ஆதரவளித்து அரசாங்கத்துடன் இணைந்துகொண்டதன் மூலம் பிரபா கணேசன் எம்பி எமது கட்சிக்கும், தமிழ் இனத்திற்கும் துரோகம் இழைத்துவிட்டார். அத்துடன் கடந்த 10 வருடங்களாக நான் முன்னெடுத்துவரும் நேர்மையான அரசியல் நிலைப்பாட்டிற்கு விரோதமாக நடந்துகொண்டதன் மூலம் அவர் என் முதுகில் குத்தியுள்ளார்.
எமது கட்சியின் அடிப்படைச் சட்டம், கட்சி தலைவர் என்ற முறையிலே எனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் எமது பொதுச்செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரனின் உடன்பாட்டுடன் பிரபா கணேசன் எம்பியை தமது கட்சியிலிருந்து உடனடியாக இடைநிறுத்தம் செய்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு தற்சமயம் பயணம் மேற்கொண்டுள்ள மனோ கணேசன் தமது பயணத்தை இடை நிறுத்திவிட்டு நாடு திரும்புவதற்கு முன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது. உத்தேச உள்ளூராட்சி தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பிலான எமது கட்சியின் ஆலோசனைகளை அரசாங்கத்தின் உயர்பீடத்திடம் வழங்குவதற்கு அலரி மாளிகைக்கு செல்லவிருப்பதாக பிரபா கணேசன் நேற்று காலை தொலைபேசியில் என்னிடம் தெரிவித்திருந்தார். எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஜனாதிபதியையோ அல்லது வேறு எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரையோ சந்திப்பதற்கு எமக்கு இருக்கின்ற உரிமை அடிப்படையில் இதற்கான ஒப்புதலை நான் அவருக்கு வழங்கியிருந்தேன்.
ஆனால் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு இன்னுமொரு மலையக பாராளுமன்ற உறுப்பினருடன் இணைந்து அரசிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து, பாராளுமன்றத்திலே அரசாங்கத்துடன் இணைந்துகொண்டுள்ள பிரபா கணேசனின் செயற்பாடு எமது கட்சி கொள்கைக்கு திட்டவட்டமாக முரணானதாகும்.
இதன் மூலம் பிரபா கணேசன் எம்பி, கட்சி தலைவர் என்ற முறையிலே எனக்கும், எமது கட்சிக்கும் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் நம்பிக்கை துரோகம் செய்துள்ளார். கடந்த தேர்தலிலே வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்ல முடியாமல் போன நிலையிலும் நான் மனம் வருந்தவில்லை. ஆனால் இன்று நான் நாட்டில் இல்லாதவேளையில் அரசுடன் இணைந்து கொண்டு எனது முதுகில் குத்தியதன் மூலம் என் மனதை பிரபா கணேசன் எம்பி மிகவும் மோசமான முறையிலே வேதனைக்கு உள்ளாக்கியுள்ளார்.
பெரும்பான்மை கட்சிகளுடனான முரண்பாட்டிற்கு ஒரே தீர்வு தமிழ் பேசும் கட்சிகளும், முற்போக்கு சக்திகளும் ஒன்று சேர்வதாகும். இதுவே எமது கட்சியின் கொள்கை நிலைப்பாடாகும். ஐக்கிய தேசியக் கட்சியுடன் எமது கட்சிக்கு கடந்த தேர்தலுடன் ஏற்பட்டுள்ள முரண்பாட்டை காரணமாக வைத்துக்கொண்டு அரசுடன் இணைவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது சுயநலவாத துரோகமாகும்.
தமிழ் மக்களை வரலாறு காணாத துன்பத்திற்கு உள்ளாக்கியிருக்கக்கூடிய இந்த அரசாங்கத்துடன் பிரபா கணேசன் இணைந்து கொண்டுள்ளார் என்ற செய்தி எனது நெஞ்சில் இடியாக விழுந்துள்ளது.
ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளிலிருந்தும் பிரபா கணேசனின் அங்கத்துவம் உடனடியாக இடை நிறுத்தம் செய்யப்படுகின்றது.
அவருடன் எந்தவித தொடர்புகளை பேணவேண்டாம் என எமது கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும், அலுவலர்களையும் கோருகின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக