12 ஆகஸ்ட் 2010

சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது தி.மு.க. குண்டர்கள் தாக்குதல்!



சென்னை தியாகராய நகர் முத்துரங்கம் சாலையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் அரசியல் இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மாத இதழின் தலைமை அலுவலகம் இயங்கி வருகின்றது. நேற்று முன்தினம் இரவு(10.08.2010) அவ்விதழின் சுவரொட்டியை ஒட்டச் சென்ற இதழ் பணியாளர்கள் 2 பேர் மற்றும் அவர்களுடன் சென்ற இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், இதழின் ஆசிரியர் குழு உறுப்பினருமான க.அருணபாரதி ஆகியோர் மீது தி.மு.க. குண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.
“செம்மொழி மாநாடு செய்தது என்ன?” என்ற தலைப்பில் செம்மொழி மாநாடு குறித்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளரும், அவ்விதழின் ஆசிரியருமான திரு. பெ.மணியரசன் எழுதிய கட்டுரை, ”இந்தியாவே வெளியேறு” என்ற தலைப்பில் காசுமீர் மக்களின் போராட்டத்தை விவரித்து, க.அருணபாரதி எழுதிய கட்டுரை உள்ளிட்ட கட்டுரைகளின் தலைப்புகள் அவ்விளம்பர சுவரொட்டியில் இருந்தன.
10.08.2010 அன்று இரவு பத்திரிக்கை அலுவலகம் இயங்கி வந்த சாலையில், சுமார் 10.45 மணியளவில் இவ்விளம்பர சுவரொட்டியை இதழின் பணியாளர்கள் திரு. பாலா, திரு. நாகராஜ் ஆகியோர் ஒட்டிக் கொண்டிருக்க, திரு. அருணபாரதி உடன் சென்றிருந்தார்.
அப்போது அங்கு குடிபோதையில் வந்திருந்த சிலர், அவ்விளம்பர சுவரொட்டியை ஒட்டக் கூடாது என தகராறு செய்தனர். “செம்மொழி மாநாடு செய்தது என்ன?” என்ற தலைப்பை படித்து விட்டு ஒருவர், “எங்க தலைவன் மாநாடு நடத்துறார்.. நீங்க யாருடா கேள்வி கேட்க… உங்க வீட்டுல கலர் டி.வி. இருக்கா? இந்தியாவையே வெளியே போக சொல்றியா…” என்றபடி நாகராஜை தாக்க வந்தார். அதனை தடுக்க சென்ற அருணபாரதி, பாலா ஆகியோரை முதுகிலும், கழுத்திலும் அடித்தது அந்த கும்பல்.
சுவரொட்டி ஒட்டுவதற்காக தோழர்கள் கொண்டு சென்றிருந்த மிதிவண்டியை அக்கும்பல் வெறி கொண்டு தூக்கிக் கடாசியது. குடிபோதையில் இருந்த அந்தக் கும்பலில் ஒருவன் நிதானமிழந்து, அங்கு சாலையோரம் குழி வெட்டிக் கொண்டு பணிபுரிந்து கொண்டிருந்தவரிடம் மண்வெட்டியை பிடுங்கி நாகராஜை வெட்ட வந்தார். அருணபாரதி அதனை தடுத்த பின், சுவரொட்டிகளை அங்கேயே கிழித்தெறிந்து, பத்திரிக்கை அலுவலகம் நோக்கி அக்கும்பல் சென்றது. அலுவலகம் அந்நேரத்தில் மூடப்பட்டிருந்தது.
தி.மு.க. குண்டர்களின் இத்தாக்குதலை எதிர் கொண்ட தோழர்கள், இச்சம்பவம் நிகழ்ந்தவுடன், இரவு 11.30 மணியளவில் மாம்பலம் R1 காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தனர். இதழாசிரியர் பெ.மணியரசன், காவல் ஆய்வாளரிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு முறையிட்டார். புகாரை பெற்ற காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக