04 ஆகஸ்ட் 2010

தமிழீழம் கனவல்ல,அது தோற்றுப் போக எம் காவல் தெய்வங்கள் அனுமதிக்கமாட்டார்கள்.




தீப்பற்றி எரிந்த காடுகள் போல் தமிழீழ மண் தீய்ந்துபோய் உள்ளது. மண் மட்டுமல்ல, அந்த மக்களது இதயங்களும் கருகித்தான் போயுள்ளது. நாளும் பொழுதுமாக வன்னி மக்கள் இப்போதும் வதைபட்டுக்கொண்டுதான் உள்ளார்கள்.
மீள் குடியேற்றம் என்ற போர்வையில் மீண்டும், மீண்டும் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டுள்ளார்கள். வாழ்வைத் தொலைத்தவர்களும், வாழும் வகையைத் தொலைத்தவர்களும், ஊனமுற்றவர்களுமாக அந்த மண் சோபை இழந்து சோகமாகக் காட்சி தருகின்றது.
அவர்களது உடலில் உயிரைத் தவிர அவர்களுக்கென்று எதுவுமே மிச்சமாக இல்லை. அவர்களது அவலங்களை அப்படியே வெளிக் கொணர்ந்து உலகின் மனச்சாட்சியைத் தட்டும் பணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தற்போது ஆரம்பித்துள்ளது.
அழுவதற்கோ, ஆறுதல்படுத்துவதற்கோ, ஆதரவுக் கரம் நீட்டுவதற்கோ கூட அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாட்டுக்காகப் பிள்ளைகளைப் பெற்றுக் கொடுத்தவர்கள், அவர்களது கல்லறைகளில் கூட கண்விழிக்க அனுமதியின்றித் தவிக்கின்றார்கள்.இத்தனை அவலங்கள் நிறைந்த இன்றைய தாயக பூமி இங்கிருந்து செல்லும் சில ஈனத் தமிழர்களுக்கு சொர்க்க பூமியாகக் காட்சி தருவதுதான் மிகப் பெரும் கொடுமையாக உள்ளது. விபச்சாரிகள் தப்பு, சரி என்று எதையுமே கணக்கிடுவதில்லை என்பது போலவே, இவர்களுக்கும் அந்த மண்ணின் அவலங்களும், அந்த மக்கள் மீது நடாத்தப்படும் அசிங்கங்களும், அவமானங்களும் துடைத்தெறியக்கூடிய புனிதங்களாகத் தோன்றுகின்றன.
இவர்களுக்காகவென்றே சிங்கள தேசமும், அதன் கூலிக் குழுக்களும் செய்து கொடுக்கும் வசதிகளும், வாய்ப்புக்களும் இவர்களுக்கு தமிழீழம் தற்போது தேன் பாயும் பூமியாகக் காட்சி தருகின்றது. மனிதன் இழக்கக் கூடாதது மானம், இழக்க முடியாதது சுய கௌரவம். இந்த இரண்டையும் இழந்துவிட்ட இரண்டும் கெட்டான்களுக்கு சிங்களம் வரம் தரும் கர்ப்பக்கிருகமாகக் காட்சி தருவதில் வியப்புக் கொள்ள ஒன்றும் இல்லை.
தமிழீழம் சூறையாடப்படுகின்றது. தமிழ் மக்கள் அச்சத்தினுள் வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். சிங்களக் குடியேற்றங்களால் தமிழீழம் திணறுகின்றது. கிழக்கைப் போல், வவுனியா போல் வன்னியும், யாழ்ப்பாணமும் சிங்கள மயப்படுத்தப்படுவதால், அங்கும் தமிழர்கள் சிறுபான்மை இனமாக அவலப்படும் நிலை படிப்படியாக உருவாக்கப்பட்டு வருகின்றது.
அச்சப்படுத்தப்படும், வாழ்வுரிமை மறுக்கப்படும் தமிழர்கள் கடல் கடந்து தப்பிச் செல்வதைக் கறியாகக் கொண்டிருப்பதால், சிங்களத்தின் ‘சிங்கள தீப’ கனவு நனவாகும் நிலையை அடைந்து வருகின்றது.
இந்த வருடங்களில் உல்லாசப் பயணமாக அந்தத் தமிழ் மண்ணைத் தரிசித்தவர்கள், இன்னமும் சில வருடங்களில் யாழ்ப்பாணத்தில் ‘ஆயி போவன்’ சொல்லியே தரை இறங்க வேண்டிய அவலத்தைச் சந்திக்கப் போகின்றோம் என்பதை இப்போதே உணர்ந்து கொள்ள வேண்டும்.
சின்னச் சின்ன ஆசைகளோடு சிறிலங்கா சென்று திரும்பும் எமது உறவுகள், எம் இனத்தின் எதிர்காலத்தையும் சேர்த்தே காவு கொடுக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. முள்ளிவாய்க்காலுடன் எல்லாம் முடிந்துவிட்டது என்று முழுக்குப் போடும் நம்மவர்கள், இன்றும் விடுதலை வேட்கையுடன் தமிழீழ மண்ணும், மக்களும், புலம்பெயர் தமிழர்களும் யாக வேள்வி நடாத்துவதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தனி ஒரு மனிதனாகத் தனக்கான சுமையுடன் சிவந்தன் என்ற தமிழீழ விடுதலைத் தீப்பொறி லண்டனிலிருந்து ஜெனிவா நோக்கித் தனது போர்ப் பயணத்தைத் தொடர்ந்த வருகின்றது. பத்து நாட்களாக நடந்து பாரிஸ் நகரின் ஊடாகப் பயணப்பட்டுள்ள இந்த அக்கினிக் குஞ்சு புலம்பெயர் தேசத்தின் தமிழ் மக்களது திறக்காத மனக் கதவுகளை உடைத்துத் தமிழீழக் கனவை விதைக்கப் போகின்றது. அது சிங்கள தேசத்தின் பிடியிலிருந்து தமிழீழத்தை முற்றாக மீட்டெடுக்கும் புதிய போர்க் களத்தைப் புயலாக மாற்றப் போகின்றது.
இந்த யதார்த்தத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழீழம் தோற்றுப்போகவில்லை. அது தோற்றுப்போக அந்த மண்ணுக்காய்ப் போராடி மாவீரராகிப்போன எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டாhகள்.தமிழீழம் கனவல்ல…
எங்கள் தோள்களில் சுமத்தப்பட்டுள்ள தேசியக் கடமைகளை நாங்கள் சுகந்தனைப் போல் தூய மனத்துடன் சுமந்து சென்றால்,
தமிழீழம் கனவல்ல!


ஈழநாடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக