09 ஆகஸ்ட் 2010

நோர்வேயில் புலிகளுக்கிடையில் மோதலென பி,பி,சி,தவறான செய்தி.


நோர்வே ஆலயத் திருவிழா ஒன்றில் ஏற்பட்ட சிறு மனஸ்தாபம் காரணமாக ஏற்பட்ட சம்பவத்தை பி.பி.சி சிங்கள சேவையானது மிகப்பெரிது படுத்தி தமிழ்ப் புலிகளுக்கு ஆதரவான குழுக்களிடையே சண்டை என்பதாகப் பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளதாக ஒஸ்லோ தமிழர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேற்படி சம்பவம் தொடர்பான நோர்வே ஊடகங்கள் போலீசாரின் சரியான அறிக்கையுடன் செய்தி வெளியிட்டிருந்த போதிலும், பி.பி.சி இல் இச்செய்தி பொருத்தமற்ற விதத்தில் அவை தனிப்படுத்திக்காட்டப்பட்டது. ஆனால் தமது கற்பனைகளுடன் தீங்கு விளைவிக்கும் விதமாக செய்தியை வெளியிட்டுள்ள பி.பி.சி தனது செய்திக்கு நோர்வே ஊடகங்களையும், போலீசாரையும் மேற்கோள் காட்டியுள்ளது. உண்ணாவிரதமிருந்த பரமேஸ்வரன் பர்கர் சாப்பிட்டார் என்ற பொய்யான செய்தியை வெளியிட்ட இரு பிரிட்டிஷ் பத்திரிகைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து அவ்வழக்கில் வெற்றியும் கிடைத்துள்ள நிலையில் பி.பி.சி தற்போது பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளமை தமிழர்கள் மத்தியில் ஆச்சரியத்தை உண்டு பண்ணியுள்ளது.மேற்படி சிறிய சம்பவத்தை நெடியவன் மற்றும் கே.பி ஆகியோரின் குழுக்களிடையே சண்டையென கற்பனை பண்ணி செய்தி வெளியிட்டமை ஆழ்ந்து ஆராயப்படவேண்டிய ஒன்று என்று நோர்வேத் தமிழர்கள் கூறியுள்ளதோடு, மேற்படி 'சண்டை' சனிக்கிழமை இரவு கிளம்பியதாகவும், காயப்பட்டவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சோடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர். ஆனால் இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமையே நடந்துள்ளது.காயப்பட்ட நபர் ஈழத் தமிழர்களின் நோர்வே பேரவை உறுப்பினர் எனக் கூறுவதன் மூலம், தேர்தல் மூலம் ஜனநாயக ரீதியில் தெரிவாகியுள்ள இந்த பேரவையானது புலிகளுக்குச் சார்பானது எனக் காண்பிக்க பி.பி.சி செய்தி நிறுவனம் முயற்சிக்கின்றது என்று ஈழத் தமிழர்களின் நோர்வே பேரவைத் தலைவர் பஞ்சகுலசிங்கம் கந்தையா கூறினார்.இதேவேளை ஈழத் தமிழர்களின் நோர்வே பேரவை என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட முன்னரே நெடியவன் அரசியல் செயல்பாடுகளை விட்டுவிட்டார் என்பதை நோர்வே அதிகாரிகள் நன்கு அறிவர். இவ்வாறாக பி.பி.சி ஆனது பொய்யான செய்திகளை வெளியிடுவது, போராட்டத்துக்கு எதிராக எழுதுபவர்கள் தமது எழுத்துக்களைத் தொடர்ந்தும் மேற்கொள்வதற்கான ஆதாரத்தையும், அங்கீகாரத்தையும் வழங்குகிறது என்பதையும் தமிழ் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.உண்மையில் இச்சம்பவமானது தமிழர் ஒருவர் தனது விலையுயர்ந்த காரைத் தாம் விரும்பிய ஒரு இடத்தில் நிறுத்த விரும்பியதாலேயே ஏற்பட்டது. கோவில் திருவிழா நிகழ்வுகளை ஒழுங்குபடுத்த உதவிய தொண்டர்கள் இதை அனுமதிக்காத காரணத்தாலேயே முரண்பாடு ஏற்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட கைகலப்பில் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளரான சிரேஷ்ட தொண்டர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது. காரில் இருந்த மூவரும் கூட தாக்கப்பட்டனர்.மேற்படி மூவரையும் ஒஸ்லோ போலீஸ் கைது செய்துள்ளது. இவர்களுக்கும் காயம் ஏற்பட்டிருந்தபோதும், சிறிய காயங்கள் மட்டுமே. ஒரு தொண்டருக்கு மட்டும் கத்திக் குத்து காயம் ஏற்பட்டதல் அவர் ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 அளவில் நடந்துள்ளது.ஆனால் இச்சம்பவங்கள் அனைத்தையும் பி.பி.சி சிங்கள சேவை திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக