சுமார் 05 வருடங்களுக்கு முன் வெளிநாடு ஒன்றில் இறந்திருக்கலாம் என்று குடும்பத்தினரால் நம்பப்பட்ட ஒரு தமிழ் இளைஞன் போலந்து நாட்டில் உயிரோடு இருக்கின்றார் என்று கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கோண்டாவிலை சொந்த இடமாகக் கொண்டவர் இ.தயாபரன்(வயது 32). அவர் சுமார் 10 வருடங்களுக்கு முன் பிரித்தானியா செல்கின்றமைக்கென நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றிருக்கின்றார். அவர் ஜேர்மனியூடாக சட்டவிரோதமான முறையில் செல்ல முயன்றிருக்கின்றார். ஜேர்மனியில் அகப்பட்டிருக்கின்றார்.
அவருடைய ஆவணங்களில் போலந்து நாட்டைச் சேர்ந்தவர் என்று பொய்யாக பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன போல் இருக்கின்றது. அவர் போலந்துக்கு நாடு கடத்தப்பட்டார். அவர் சுமார் 05 வருடங்களுக்கு முன்தான் குடும்பத்தினருடன் இடையிடையே தொலைபேசியில் உரையாடி வந்திருக்கின்றார். பின் தொலைபேசி உரையாடலும் இடம்பெறவே இல்லை.
இந்நிலையில் அவர் குறித்து எந்தத் தகவல்களும் வருடக் கணக்காகவே கிடைக்கப் பெறாமல் இருந்தமையால் குடும்பத்தினர் அவர் இறந்து விட்டார் என்றே கடந்த மாதம் வரை முடிவெடுத்து இருந்தனர். அவரைப் பற்றி யோசித்தே அவரின் தாயார் நிரந்தர நோயாளி ஆகி விட்டார்.
இந்நிலையில் இலங்கையின் மூத்த இராஜதந்திரிகளில் ஒருவரும், கட்டாருக்கான இலங்கையின் பிரதித் தூதுவருமான ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் விடுமுறையில் நாட்டுக்கு திரும்பி வந்திருந்த நிலையில் சொந்த இடமான யாழ்ப்பாணத்துக்கும் சென்றிருக்கின்றார்.
தர்மகுலசிங்கம் சிறந்த நிர்வாகி எனவும் மக்கள் தொண்டர் எனவும் பெயரை முத்திரை பதித்தவர். தர்மகுலசிங்கத்தை தயாபரனின் குடும்பத்தினர் எதிர்பாராத விதமாக சந்திக்க நேர்ந்தது.
அப்போது தயாபரனின் குடும்பத்தாரின் துன்பக் கதையை கவனமாக செவிமடுத்த தர்மகுலசிங்கம் என்ன நினைத்தாரோ தெரியாது... போலந்து நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அங்குள்ள சக இராஜதந்திரி ஒருவருடன் உரையாடினார்.
தயாபரன் குறித்து குடும்பத்தினரால் சொல்லப்பட்ட தகவல்களை அந்த இராஜதந்திரிக்கு ஒழுங்குமுறையாகக் கூறினார் . அந்த இராஜதந்திரியும் ஓரிரு நாட்களுக்குள் தகவல் வழங்குவார் என்று நண்பருக்கு வாக்குறுதி வழங்கினார். ஆனால் இவை நடந்து சுமார் மூன்று மணித்தியாலங்களின் பின் தர்மகுலசிங்கத்தின் கையடக்கத் தொலைபேசி ஒலித்தது.
தயாபரன் என்று தமிழ் இளைஞர் ஒருவர் உயிருடன் இருக்கின்றார் என்று சொல்லி போலந்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தினர் தர்மகுலசிங்கத்துக்கு தகவல் வழங்கினர். அத்துடன் தயாபரனை இரவில் தொடர்பு கொள்ளக் கூடிய கையடக்கத் தொலைபேசி இலக்கம் ஒன்றையும் வழங்கி இருந்தனர்.
இந்த நிலையில் விபரங்களை அறிந்து கொண்ட தயாபரனின் குடும்பத்தினர் மகன் உயிருடன் உள்ளார் என்பதை உறுதிப்படுத்துகின்றமைக்காக அன்று இரவே குறித்த தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பு மேற்கொண்டனர். மறுமுனையில் ஒருவரின் குரல் கேட்டது.
தயாபரனின் குடும்பத்தினருடைய காதுகளை நம்பவே முடியவில்லை. ஆம்.அந்நபர் அவர்களுடைய தயாபரன்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். அவர் போலந்தின் தலைநகர் பகுதியில் நலிந்தவர்களுக்கான இல்லம் ஒன்றில் வாழ்ந்து வருகின்றார்.
அவரை இலங்கைக்கு கொண்டு வருகின்றமைக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு, போலந்தில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆகியன பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அவர் திரும்பி வரும் பட்சத்தில் தாயின் நோய் ஒருவேளை குணமாகி விடும் என்று வைத்தியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக