வடமராட்சி கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் துரித கெதியில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாழையடி முதல் கட்டைக்காடு வரையான கரையோரப் பிரதேசங்களிலேயே இவ்வாறான சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன.
தென்னிலங்கையில் இருந்து பெருந்தொகையான சிங்கள மீனவர்களை வடபகுதிக்கு கொண்டுசென்றுள்ள சிறீலங்கா அரசு அவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட சிங்கள மீனவக் குடும்பங்களை வடபகுதியின் கரையோரங்களில் குடியேற்றி வருவதாகவும், இதனால் தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் சிங்களவர்களுக்கு தாரைவார்க்கப்படுவதாகவும் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.
இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு கரையோரப் பகுதியூடாக பயணித்த மக்களே இவ்வாறு தாழையடி, செம்பியன் பற்று, கட்டைக்காடு போன்ற பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டிருப்பதை அவதானித்துள்ளனர்.
புதிதாக ஒரே மாதிரியான குடியிருப்புக்களை கட்டி அங்கு சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டிருப்பதாகவும், தம்மை இதுவரை காலமும் சொந்த இடமான அப்பகுதிகளில் குடியேற்றாது தடுத்துவந்த இராணுவமும், மகிந்த அரசும் தற்போது தமது இடங்களில் இவ்வாறான சிங்களக்குடியேற்றங்களை செய்துவருவதாக கவலையுடனும், கொதிப்புடனும் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக