31 ஆகஸ்ட் 2010

அமெரிக்காவில் மஹிந்தரை கைது செய்ய முடியுமா? உயர் சட்ட ஆலோசனையில் ஒபாவுக்கான தமிழர்கள்!



ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு வருகை தர இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அமெரிக்கா கைது செய்ய முடியுமா? என அந்நாட்டின் பிரதம நீதியரசர் ஜோன் ரொபேட்ஸிடம் அமெரிக்கத் தமிழரின் அரசியல் குழுவான ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு எழுத்துமூலம் அபிப்பிராயம் கோரி உள்ளது.
இலங்கையில் உள்நாட்டு யுத்தத்திபோது இடம்பெற்ற போர்க் குற்றங்களின் சூத்திரதாரி என்கிற வகையில் அவரை ஏன் கைது செய்ய முடியாது? என்று வினவி உள்ளது.
போர்க்குற்றம் புரிந்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்ட பலரை அமெரிக்கா முன்னைய நாட்களில் கைது செய்து உள்ளது. நாஸிகள் பலரையும் குற்றங்கள் இடம்பெற்று பத்தாண்டுகள் கழிந்த நிலையில் கூட அமெரிக்கா கைது செய்திருந்தது, ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விடயத்தில் முன்பு இடம்பெற்றிருக்கும் அக்கைதுகள் முன்னுதாரணங்கள் ஆகி விட முடியுமா? என்பதே இவ்வமைப்பின் சந்தேகம் ஆகும்.
ஏனெனில் மஹிந்தரின் விவகாரம் வித்தியாசமானது .மஹிந்தருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றம் ஒன்றினால் முன்வைக்கப்பட்டிருப்பவை அல்ல. மாறாக சர்வதேச மக்கள் அமைப்புகளான- சர்வதேச நெருக்கடிகள் குழு, சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற மனித உரிமைகள் அமைப்புக்களினால் முன்வைக்கப்பட்டு வருபவை ஆகும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உத்தரவின் பேரில் இராணுவத்தினரால் போர்க்குற்றங்கள் புரியப்பட்டமைக்கான ஆதாரங்கள் ஏராளம் உள்ளன என இவ்வமைப்புகள் கூறுகின்றன.
இந்நிலையில் அகதிகளுக்கான பாதுகாப்பான பிரதேசங்கள், வைத்தியசாலைகள் ஆகியவற்றின் மீது வலிந்து குண்டுகள் வீசுதல், மனிதாபிமான உதவிகள் செய்யும் நிறுவனங்களின் மீதான வன்முறைத்தாக்குதல் போன்றவை அநேகமாக எல்லோராலும், எவ் வகையான வரைவிலக்கணங்களின் கீழும் போர்க்குற்றங்களாக கருதப்படுவன தானே? என்று பிரதம நீதியரசரிடம் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கேட்டுள்ளது.
இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டோர் எதுவித விசாரணைகளுமில்லாமல் கொலைசெய்யப்பட்டமைக்கு ஆதாரங்கள் உண்டு என்றும் ஆனால் இவ்வாதாரங்கள் எந்த நீதிமன்றத்தினாலும் இதுவரை விசாரணை செய்யப்படவில்லை என்றும் இந்நிலையில் அமெரிக்க நீதிமன்று ஒன்று ஏன் விசாரிக்கக் கூடாது? என்றும் இவ்வமைப்பு கேள்வி தொடுத்துள்ளது.
பொஸ்னியாவில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்தன என்று அறிக்கைகள் தெரிவித்தபோது அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகள் தலையிட்டன என்று இவ்வமைப்பு பிரதம நீதியரசருக்கான கடிதத்தில் சுட்டிக் காட்டி உள்ளது.
ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் இது குறித்து ஊடகங்களுக்கு முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:-
"நாம் சட்டவல்லுனர்கள் அல்லர், பிரதம நீதியரசருக்கான எமது கடிதம் அவரின் கருத்தைக் கேட்கும் முகமாகவே எழுதப்பட்டது.எழுதப்பட்ட விடயம் மிகவும் சிக்கலான விடயம் ,எனவே உயர்-சட்ட ஆலோசனை தேவை.
பிரதம நீதியரசர் ரொபேட்ஸ் அவரது கருத்தை எம்முடன் பகிர்ந்து கொள்வார் என எதிர்பார்க்கிறோம். அவரது கருத்து பொதுக்கருத்தாடல் ஒன்றுக்கு இட்டுச் செல்லும் என நாம் நம்புகின்றோம். சட்டத்தரணிகளும்,நீதிபதிகளும் இது பற்றி பேசும் நிலை வர வேண்டும்."

இராணுவ அதிகாரிகள் தலைமையில் முக்கிய இலங்கைத் தூதரகங்கள்.

இலங்கையின் முக்கிய வெளிநாட்டுத் தூதரகங்கள் பலவும் தற்போது இராணுவ அதிகாரிகள் தலைமையில் கொண்டுநடத்தப்படுவதானது தூதரகங்கள் இராணுவ மயப்படுத்தப்படுகின்றதா என்ற பலத்த சந்தேகங்களை வெளிநாட்டுச் சேவை உறுப்பினர்களிடையே ஏற்படுத்தியுள்ளன. பிரிட்டனிலுள்ள தூதரகத்தில் அதன் உயர் ஸ்தானிகராக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கருணாகொடவையும், அதே தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவையும், ஐ.நா க்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறியையும், அதன் பிரதி நிரந்தரப் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவையும் நியமிக் அரசாங்கம் எடுத்துள்ள முடிவே இந்த சந்தேகத்தை மேலும் பலப்படுத்தியுள்ளது.
இதில் வசந்த கருணாகொட விடுதலைப் புலிகளுடனான இறுதிச் சண்டையில் தலைமை வகித்த தளபதி ஆவார். இதேபோல பிரசன்ன சில்வாவும் இறுதிக்கட்டப் போரில் 58 ஆவது படையணிக்குத் தலைமை தாங்கியவர். இதுதவிர சந்திரசிறியையும், ஷவேந்திர சில்வாவையும் ஐக்கிய நாடுகளின் நிரந்தரப் பிரதிநிதிகளாக நியமிப்பது மனித உரிமை மீறல்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு இப்பதவிகளா என்ற குற்றச்சாட்டுக்களையும் இலங்கை அரசு மீது ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதிக்கட்டப் போரில் இலங்கை புரிந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச சமூகம் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வெளிநாட்டுத் தூதரகங்களில் நியமனம் பெறுகின்ற இவ்வாறான இராணுவ அதிகாரிகள் உதவுவார்கள் என்று அரசாங்கம் நம்புகின்றது. ஆனால் ராஜதந்திரம் என்பது வித்தியாசமான ஒரு நடவடிக்கை என்றும் அதை ஆயுதந்தாங்கும் நபர்களால் கொண்டுநடத்த முடியாது என்றும் வெளிநாட்டு இராஜதந்திர வட்டாரங்கள் குறிப்பிட்டுக் காட்டியுள்ளன. ஆனால் தமது இராணுவ அதிகாரிகளைப் பயன்படுத்தியே புலிகளின் சர்வதேச வலையமைப்பை உடைத்தெறிய அரசு முனைவதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறுகின்றன.

30 ஆகஸ்ட் 2010

வெறுப்பு நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர் - வலம்புரி.



யுத்தத்தின் வெற்றி மூலம் நாட்டை இணைத் தாலும் மக்களை இணைக்க முடியவில்லை என அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்த கருத் துக்கள் ஆழமானவை. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களை யுத்த வெற்றி மூலம் பெற்றுக் கொள்ள முடிந்தது.
ஆனால் சிங்கள, தமிழ் இனங்கள் ஒற்றுமைப்படவில்லை. அவர்களிடையே இன்னமும் வேற்றுமை அதிகரித்துள்ளது என்பதே அமைச்சர் டியூ.குணசேகரவின் கருத்து. அப்படியானால் மக்களை இணைக்க வேண்டும். ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்பது அமைச்சரின் முடிபாக இருக்கும். ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் ஓர் உண்மையை வெளிப்படையாகக் கூறியமை வர வேற்கப்பட வேண்டியதொன்றாகும்.
அதேநேரம் அவர் கூட மக்களை இணைப்பதற்கான திட்ட முன்மொழிவுகளை முன்வைக்க முடியாதென்பதும் நிறுத்திட்டமான உண்மை. அந்தளவிற்கு இந்த நாட்டில் பேரினவாதம் புரையோடிப் போயுள்ளது. யுத்தத்திற்குப் பின்னர், ஏ-9 பாதை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து தென் பகுதி மக்கள் பெருந்தொகையில் யாழ்ப்பாணத்திற்கு வந்து செல்கின்றனர்.
இவர்களின் வருகை குறித்து தமிழ் மக்களின் மனநிலை என்னவென்பதை எவரும் அறிய முற்படுவதில்லை. இவர்கள் தாங்கள் உண்டு. தங்கள் பாடு உண்டு என்ற நிலையில் எதையோ இழந்தவர்களாக நடமாடுகின்றனர். அவர்களோ தாங்கள் நினைத்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி எதுவும் செய்யலாம் என்ற நினைப்பில் செயற்படுகின்றனர்.
சில இடங்களில் வீதிகளில் வாகனங்களை மறித்து பொலிஸாரும் படையினரும் தங்கள் சிங்கள உறவுகளிடம் குசலம் விசாரிக்கின்றனர். பிரதான வீதிகளில் கூட இந்த நிலை காணப்படுகின்றது. இதற்கு மேலாக தென் பகுதியில் இருந்து வருபவர்கள் கலாசாரப் பிறழ்வான செயற்பாடுகளை இங்கு அறிமுகப்படுத்துவதான செய்திகள் அதிர்ச்சி தருகின்றன. எவரும் எதுவும் கேட்கமுடியாதென்ற நிலையில் நடக்கின்ற நிகழ்வுகள் குறித்து அரசு கவனம் செலுத்த தவறுமாயின், அமைச்சர் டியூ.குணசேகர கூறிய மக்களை இணைக்க முடியவில்லை என்ற குறைபாடு நிரந்தரமாக நீண்டு செல்வதைத் தடுக்க முடியாது போய் விடும்.
எனவே யாழ்.குடாநாட்டுக்கு வருகை தருகின்ற தென்பகுதி மக்கள் யாழ்ப்பாண மக்களின் மனங்களை நோகடிக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாதென்பதுடன் தென் பகுதி மக்களுக்கு மட்டுமே நாம் உறவானவர்கள் என்ற உணர்வை படையினர் வெளிப்படையாகக் காட்டுவதும் அவ்வளவு நல்லதல்ல.

சிறீலங்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் மற்றொரு ஆணைக்குழு.





இலங்கையில் கடந்த காலங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நியமிக்கும்; என நேபாளத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் பணிப்பாளர் எந்தனி கார்டன தெரிவித்துள்ளார்.
சர்வதேச கடத்தல் மற்றும் காணாமல் போனவர்களுக்கான தினம் இன்று அனுஷ்ட்டிக்கப்படுகிறது.
காணால் போனவர்கள் தொடர்பில் நேபாளம் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் அரசாங்கங்கள், நீதிமன்றங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களை ஏற்று செயற்பட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் பலவற்றில், கடத்தல் மற்றம் காணாமல் போதல் தொடர்பான சட்டங்கள் மீறப்பட்டு வருகின்றமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், சர்வதேச ரீதியாக காணப்படுகின்ற பல்வேறு கடத்தல் மற்றும் காணாமல் போதல் குறித்த முறைபாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு உயர் மட்ட ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமது உறவினர்களையும், சொத்துக்களையும் இழந்து நெடுகாலமாக காணால் போயுள்ளவர்கள் குறித்து, அவர் தமது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்

29 ஆகஸ்ட் 2010

15 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற நால்வர் கைது.



மன்னார் பஸ் நிலயத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்த 15 வயதுடைய சிறுமியை, பலவந்தமான முறையில் அருகிலுள்ள மலசலகூடத்துக்கு இழுத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று மாலை 4.30 மணியளவில் பஸ்ஸிற்காக காத்திருந்த குறித்த சிறுமியை 3 இளைஞர்கள் பலவந்தமாக, அருகாமையிலுள்ள பொது மலசலகூடத்துக்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளதுடன் அச்சிறுமியை கையடக்க தொலைபேசி மூலம் படம் பிடிக்கவும் முயன்றுள்ளனர்.
அப்போது குறித்த சிறுமி சத்தமிட்டதை அடுத்து அப்பகுதியில் கடமையிலிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்க, பொலிஸாரும் அவ்விடத்துக்கு விரைந்து சிறுமியை காப்பாற்றியுள்ளனர்.
அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடையதான மூன்று இளைஞர்களையும் கைது செய்துள்ள பொலிஸார் சமபவத்துக்கு உதவியதாகக் கூறப்படும் மற்றுமொரு இளைஞரையும் சிறுமி அடையாளம் காட்டியதையடுத்து கைது செய்துள்ளனர்.
மேற்படி சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நான்கு இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவு செய்த பொலிஸார், அவர்களை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பிரபல பாடகி மாயாவை பொய்யராக்க முயற்சிக்கும் அமெரிக்கா.



உலகின் பிரபல பொப்பிசைப் பாடகர்களில் ஒருவரும் , புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் தமிழருமான மாயா இலங்கை குறித்து தெரிவித்து வரும் கருத்துக்களை வாபஸ் பெற்றுக்கொண்டு இலங்கை அரசிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது.
அவ்வாறு மன்னிப்புப் கோரும்பட்சத்தில் அவரின் அமெரிக்க விசா சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விடும் என்றும் ஆசை காட்டி உள்ளது.
மாயாவின் கணவர் ஒரு அமெரிக்கர் ஆவார். இவர்களுக்கு குழந்தைப் பாக்கியமும் உண்டு. இந்நிலையில் மாயா கிறீன் அட்டையை பெறுகின்றமைக்கு பெரிதும் முயற்சித்து வருகின்றார்.ஆனால் அம்முயற்சி வெற்றி பெறவே இல்லை.
அத்துடன் அமெரிக்காவுக்கு செல்கின்ற ஒவ்வொரு தடவையும் ஏதோ ஒரு வகையில் அமெரிக்க குடிவரவு அதிகாரிகளால் பிரச்சினைக்கு உட்படுத்தப்படுகின்றமையும் வழக்கம். இலங்கையின் அரசியல் நிலை குறித்து மாயா தெரிவித்திருக்கும் கருத்துக்களே அவர் அமெரிக்காவில் இவ்விதம் நடத்தப்படுவதற்குக் காரணம் ஆகி இருக்கின்றன.
மாயா தற்போது அமெரிக்காவில் உள்ளார்.அவருக்கு குழந்தை ஒன்று புதிதாகப் பிறந்துள்ளது. பேரனை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தால் மாயாவின் தாய் கலா அமெரிக்காவுக்கு புறப்பட்டு வந்திருக்கின்றார்.
ஆயினும் அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் அவர் நாட்டுக்குள் பிரவேசிக்கா வண்ணம் தடுத்து நிறுத்தி விட்டார்கள். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கிலாரி கிளிண்டனின் உதவியை இவ்விடயத்தில் மாயா கோரி இருக்கின்றார். ஆயினும் பயன் எதுவும் கிடைத்ததாக தெரியவில்லை.
அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு சென்று மாயா மன்னிப்புக் கேட்கும்பட்சத்தில் இப்பிரச்சினை முடிவுக்கு வந்து விடும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்,ஆனால் அப்படி ஒருபோதும் மன்னிப்புக் கேட்க மாட்டார் என்று ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார் மாயா.

புலிகளின் ஆயுதக் கொள்வனவாளர் பொன்னையா ஆனந்தராஜாவால் ஆபத்து : இலங்கை அரசு.



2000ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகளின் பல கப்பல்கள் சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து இலங்கை, மற்றும் இந்திய அரசின் கடற்படைகளால் அழிக்கப்பட்டது. புலிகளுக்கு ஆயுதம் ஏந்திவந்த கப்பல்கள் இலங்கையை அண்மிக்கும் முன்னரே, அவற்றை இனம் கண்டு அழிப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. 2002ம் ஆண்டு முதல் பகுதியில், இவ்வாறு சென்ற மற்றுமொரு ஆயுதக் கப்பல் சர்வதேச கடற்பரப்பில் தரித்து நிற்பதாக புலிகளுக்கு செய்தி அனுப்பப்பட்டது. அதில் இருக்கும் ஆயுதங்களை இறக்கி கரைக்கும் கொண்டுவரும் நடவடிக்கையில் கடற்புலிகள் ஈடுபட்டிருந்த வேளை, சற்றும் எதிர்பாராதவிதமாக அங்குவந்த இலங்கை கடற்படையினர் அக்கப்பல் மீது கடும் தாக்குதல் தொடுத்தனர்.
இதனால் கப்பல் தீ பற்றி எரிந்து சில மணித்தியாலங்களில் கடலில் மூழ்கியது. இருப்பினும் கப்பல் வெடித்து எரியவில்லை. இதன் காரணமாக அக் கப்பலில் ஆயுதங்கள் இருக்கவில்லை என புலிகளின் தலைமைப்பீடம் அறிந்தது. இதனை அடுத்தே தேசிய தலைவரால் கே.பி பணிநீங்கம் செய்யப்பட்டார். அவர் இடத்திற்கு ஆயுதக்கொள்வனவாளராக பொன்னையா ஆனந்தராஜா நியமிக்கப்பட்டார். ஆயுதங்களை கொள்வனவு செய்து அதைப் புலிகளிடம் கொடுக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் அதனை கப்பல் மூலம் கொண்டு செல்லும் பொறுப்புகளை புலிகளே மேற்கொண்டிருந்தனர்.
தற்போது கே.பி சரணடைந்து இலங்கை அரசிடம் தஞ்சம்கோரியுள்ள நிலையில், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராஜன் கைதானார். பின்னர் பிரின்சஸ் கிரிஸ்டீனா என்ற கப்பலும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அத்தோடு நின்றுவிடாமல், கே.பி தனது பொறுப்பில் இருந்த மேலும் 2 சரக்குக் கப்பல்களை, முறையே கோத்தபாய, பசில், ஆகியோரின் பெயருக்கு மாற்றி அதன் உரிமையை தாரைவார்த்துள்ளார். இலங்கைக்கு கப்பலைக் கொண்டுவந்தால் அது அரசுடமையாக்கப்படும் என்பதால் வெளிநாடுகளில் வைத்தே அதன் உரிமை மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இலங்கை அரசின் கவனம் பொன்னையா ஆனந்தராஜா பக்கம் திரும்பியுள்ளது. இவர் எந்த நாட்டில் வசித்துவருகிறார் என்று இதுவரை யாரும் அறிந்ததில்லை. அத்தோடு இன்றுவரை சர்வசாதாரணமாக ஆயுதங்களைக் கொள்வனவுசெய்ய இவரால் முடியும் என்றும், அவ்வகையான தொடர்புகளை இவர் இன்னமும் பேணிவருவதாகவும் சொல்லப்படுகிறது. புலிகளால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 6 சிலின் 143 இலகு ரக விமானங்கள், எரித்திரியா நாட்டில் ஆஸ்மாறா என்னும் இடத்தில் உள்ளது. இவற்றை எரித்திரிய அரசாங்கம் இலங்கைக்கு கொடுக்க மறுத்துவிட்டதோடு, அதனை அதன் உரிமையாளர்களிடமே கொடுப்போம் எனக் கூறியுள்ளது. எனவே உரிமையாளர்கள் ஏற்கனவே எரித்திரியாவை தொடர்புகொண்டுவிட்டனர் என்பதே அதன்பொருளாகும்.
இவ்வாறு பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் சர்வதேச அமைப்பின் உறுப்பினரான ஷானக்க ஜெயசேகர கூறியுள்ளார்.

28 ஆகஸ்ட் 2010

ஒன்லைன் எரைவல் விசாவை ரத்து செய்யும் திட்டம் மீள்பரிசீலனையில்!


ஒன்லைன் எரைவல் விசா வழங்கும் நடைமுறையை அடுத்த மாதம் 30 ஆம் திகதியுடன் இல்லாமல் செய்யும் திட்டத்தை இலங்கை மீள்பரிசீலனை செய்கின்றது.
சிங்கப்பூர், மாலைதீவு ஆகிய நாடுகளின் பிரஜைகள் தவிர்ந்த ஏனையோருக்கு இத்திட்டத்தின் கிழ் விசா வழங்கப்பட மாட்டாது என்று குடிவரவு-குடியகல்வு திணைக்களம் முன்பு அறிவித்திருந்தது.
இப்புதியத் திட்டத்தின் அடிப்படையில் 70 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வர அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு சென்று விசா விண்ணப்பிக்க கோரிக்கைகளை முன்வைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டும் இருந்தது.
எனினும், இலங்கைப் பிரஜைகளுக்கு ஒன் எரைவல் விசா வழங்கும் நாடுகளினது பிரஜைகளுக்கு இலங்கை ஒன் எரைவல் விசா வழங்கத் தயார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இத்திட்டம் மீள்பரிசீலனை செய்யப்படுகின்றது என குடிவரவு -குடியகல்வு கட்டுப்பாட்டு அதிகாரி டபிள்யூ.ஏ.சி.பெரேரா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கப்பலில் அகதிகளாக கனடா வந்துள்ள தமிழர்கள் மீது பரிவிரக்கம் காட்ட வேண்டும் என பேராயர் வேண்டுகோள்!


கப்பலில் அகதிகளாக கனடா வந்துள்ள தமிழர்கள் மீது பரிவிரக்கம் காட்ட வேண்டும் என வன்கூவர் பேராயர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடிவரவுத்துறை சம்பந்தமான விவாதத்தின் போது குடியேற்ற வாசிகளின் கௌரவத்தை மனதில் வைத்திருக்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாக் கரையை வந்தடைந்துள்ள 492 தமிழ் குடியேற்றவாசிகள் தொடர்பாக கடுமையான விவாதங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. கனடாவின் குடிவரவுத்துறை முறைமைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் சட்டத்தை மாற்றியமைக்கவேண்டும் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்படும் நிலையில் ஒவ்வொரு மனிதரினதும் அடிப்படைக் கௌரவத்தை நினைவு கூரவேண்டிய நேரம் இது என்று வன்கூவர் பேராயர் ஜே. மைக்கேல் மில்லர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த குடிவரவுத்துறை விவாதத்தினால் ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் பலியாடுகளாகி விடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாதுகாப்பு தொடர்பான ஆபத்துகளுக்குக் கதவுகளைத் திறந்து விடாத வகையில் புதிதாக வருவோரிரை அடையாளம் கண்டுகொள்ளவேண்டிய தேவை பொறுப்பு வாய்ந்த அரசாங்கங்களுக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயுதமோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களை அகதிகளாக அங்கீகரிக்கவேண்டுமெனவும் அவர்களுக்கு சர்வதேச ரீதியான பாதுகாப்பு வழங்கப்படவேண்டுமென்றும் கத்தோலிக்க திருச்சபை கருதுவதாகவும் மில்லர் தெரிவித்துள்ளார்.
கனடா குடியேற்ற வாசிகள் அகதிகளின் தேசமென்ற புகழைப் பெற்றுள்ளது. அநீதியிலிருந்தும் தப்பி புகலிடம் தேடி வருவோரை வரவேற்கும் நீண்ட வரலாற்றையும் இந்நாடு கொண்டுள்ளது என்றும் மில்லர் குறிப்பிட்டிருக்கிறார். குடியேற்றவாசிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்பவேண்டுமென்பது தொடர்பாக அபிப்பிராய வாக்கெடுப்பில் பெரும்பான்மையானோர் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில் பேராயரிடமிருந்து இந்தக் கருத்து வெளிப்பட்டிருக்கிறது.

27 ஆகஸ்ட் 2010

மன்னாரில் எரியூட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு.

மன்னார் மூர்வீதி காட்டுப்பள்ளி கடற்கரைக்கு அண்மையில் எரியூட்டப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தை இன்று காலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.பலியானவர் இனங்காணப்படவில்லை. 50 வயதான இந்நபர், தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் எரியூட்டப்பட்டிருக்கலாம் என மன்னார் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இச்சடலம் தற்போதும் கடற்கரையிலேயே உள்ளது. அவ்விடத்தில் தற்போது இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

புலம்பெயர் தமிழர்களை டேவிட் மிலிபான்ட் சந்திக்கவுள்ளார்.



பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்களை அடுத்த வாரமளவில் பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
டேவிட் மிலிபான்டுடன் பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவிருப்பதாக மின்னஞ்சல் அழைப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற் கட்சியின் தலைவரும் எதிர்காலத்தில் பிரித்தானிய பிரதமராகக்கூடும் எனக் கருதப்படுபவருமான டேவிட் மிலிபான்டுடனான இந்த சந்திப்பு தமிழ்ச் சமூகத்திற்கு சிறந்ததொரு சந்தர்ப்பம் எனவும் ‘தொழிலாளர்களுக்கான தமிழர்கள்’ விடுத்த மின்னஞ்சல் அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி இந்த சந்திப்பு இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக மின்னஞ்சல் அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் உலகத் தமிழ் பேரவையின் மாநாட்டில் டேவிட் மில்லிபான்ட் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

26 ஆகஸ்ட் 2010

மக்களுக்காக போராடுவது தவறென்றால் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்வேன்.



சென்னையில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சீமான் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் உள்ள சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுரைக் கழகம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சீமான் நேற்று அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர் வெளியே வந்த சீமான், பலத்த போலீஸ் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் செய்தியாளர்களிடம் பேசினார்.
’’இறையாண்மைக்கு எதிராக நான் என்ன பேசி விட்டேன், நான் பேசியதால் இரு நாட்டு உறவுகளும் பாதிக்கப்படும் என்றால் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே செயலால் இரு நாடுகளின் உறவும் ஏன் பாதிக்கபடவில்லை.
நான் பேசியது தவறு என்றால் இந்த குற்றத்தை தூண்டி விட்ட ராஜபக்சேவிற்கு தண்டனை வழங்குவது யார் ? சீமானை சிறையில் அடைத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று தமிழக அரசு பகல் கனவு காண்கிறது.
மக்களுக்காக நடத்தப்படும் போராட்டம் தவறு என்றால் அதே தவறை மீண்டும், மீண்டும் செய்வேன்.
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அரசியலில் லாபம் அடைவதற்காக நான் அரசியல் இயக்கத்தை தொடங்கவில்லை.
இந்திய சட்டம் 21ன் படி தமது கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்பது தமிழனுக்கு கிடையாதா ? என்று ஆவேசமாக கேள்விகளை எழுப்பினார்.

மனைவியை கொலை செய்ய முயற்சி! இத்தாலியில் இலங்கையர் கைது.


சொந்த மனைவி மற்றும் அவர்களின் இரு மாதப் பெண் குழந்தை ஆகியோரை தாக்கினார் என்பதற்காக குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் இலங்கையர் ஒருவர் இத்தாலியில் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
Porto San Giorgio நகரத்தில் உள்ள இலங்கையரின் வீடு ஒன்றில் குடும்ப வன்முறை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது என இத்தாலிய பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்திருக்கின்றது. அவர்கள் அவ்வீட்டை முற்றுகையிட்டனர்.
அப்போது மனைவியின் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்ய முற்பட்டமையையையும், நையப் புடைத்தமையையும், காயப்படுத்தியமையும் நேரில் கண்டனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாய் குழந்தையை தூக்கி வைத்திருந்த நிலையில் தகப்பனின் தாக்குதலில் குழந்தைக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
தாயையும், சேயையும் பொலிஸார் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளார்கள். இத்தம்பதிகளுக்கு இடையில் மிக நீண்ட காலமாகவே சண்டை இடம்பெற்று வருகின்றது என்றும் கணவனால் தாக்கப்படுகின்றார் என்று மனைவி முன்பு பல தடவைகள் பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கின்றார் என்றும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ராஜபக்ஷ வரலாம்! நான் வரக் கூடாதா? : பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி – ஆனந்த விகடன்.



தமிழர்களைக் கொல்லும் ராஜபக்ஷவும் அவர் பரிவாரங்களும் இந்தியாவுக்குள் வரலாம்! விருந்துண்டு மகிழலாம். ஆனால், அழிக்கப்படும் என் தமிழ் இனத்துக்காகப் பேசும் என்னைப் போன்றவர்கள் இந்தியாவுக்குள் வர முடியாது. இவ்வாறு மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, கூறியுள்ளார்.
பேராசிரியர் இராமசாமி, ‘பினாங்கு ராமசாமி’ என்றே அறியப்படுகிறார். மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர். இலங்கை இன அழிப்புப் போருக்குப் பின்னர் ஈழ மக்களுக்காக சர்வதேச அளவில் ஓங்கி ஒலிக்கும் கோபக் குரல்!
செம்மொழி மாநாட்டுக்கு எதிராக இவர் கொளுத்திப்போட்ட பட்டாசுகள் வெடித்து அடங்குவதற்குள், ‘மகிந்தா ராஜபக்ஷ, கோத்தபாய வரிசையில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், கருணாநிதி ஆகிய மூன்று பேரும் போர்க் குற்றவாளிகளே. இவர்களிடமும் ஐ.நா. விசாரணைக் குழு விசாரணை நடத்த வேண்டும்’ என்று அதிரடி அறிக்கை விட்டிருக்கிறார்.
பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி, ஆனந்த விகடனுக்காக வழங்கிய செவ்வி வருமாறு:
கேள்வி: இந்தியாவுக்குள் உங்களை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதே… என்ன காரணம்?
பதில்: மாநில முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக உள்துறை, இந்திய அரசைக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நானும் பார்வதி அம்மாளைப்போல எச்சரிக்கைப் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கிறேன். இலங்கையில் ராஜபக்ஷவின் தமிழின அழிப்புப் போரில் இந்திய நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்து வந்தேன்.
இருண்ட மேகம் தமிழர்களைச் சூழ்ந்த வேளையில், துயர் துடைக்க கருணாநிதி எதுவுமே செய்யவில்லை. கவலையோடு ஏதாவது செய்யுங்கள் என்றேன். ஆனால், கருணாநிதிக்கு சொக்கத் தங்கம் சோனியா காந்தியின் கோபத்துக்கு தான் ஆளாகிவிடக் கூடாது என்ற ஒரே கவலை மட்டுமே இருந்தது. அதன் விளைவுதான், அந்தக் கடிதம்.
தமிழர்களைக் கொல்லும் ராஜபக்ஷவும் அவர் பரிவாரங்களும் இந்தியாவுக்குள் வரலாம்! விருந்துண்டு மகிழலாம். ஆனால், அழிக்கப்படும் என் தமிழ் இனத்துக்காகப் பேசும் என்னைப் போன்றவர்கள் இந்தியாவுக்குள் வர முடியாது.
கேள்வி: உங்கள் நண்பர் சீமான் சிறையில் இருக்கிறாரே?
பதில்: மீனவர்களுக்காகக் குரல் கொடுத்ததற்காகத் தம்பியைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். அதன் பின்னர், இரண்டு முறை சிங்களக் கடற்படை இராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை வெடிவைத்துத் தகர்த்திருக்கிறது. இப்போது மிகத் தந்திரமாக யாழ்ப்பாண மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டும் சதி நடந்துகொண்டு இருக்கிறது.
இரு நாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகச் செய்திகள் வெளியாகின்றன. பிரச்சினை இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலானதா? இலங்கை அரசுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையிலான பிரச்னையை இவர்கள் இரு நாட்டுத் தமிழ் மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையாகத் திசை திருப்புகிறார்கள். அதற்கு இடைஞ்சலாக இருப்பார் என்பதால்தான், தம்பி சீமானை சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
கேள்வி: செம்மொழி மாநாட்டுக்கு உங்களை அனுமதிக்கக் கூடாது என்று கடிதம் எழுதுகிற அளவுக்கு உங்களுக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் இடையில் என்ன முரண்பாடு?
பதில்: எல்லாத் தமிழர்களையும்போல நானும் ஆரம்பத்தில் கலைஞரை மிகவும் நேசித்தேன். அவர் எழுத்துக்களை விடாமல் படித்தேன். ஆனால், முதலாம் ஈழப் போரின்போதுதான் இவரின் சுயநல அரசியலைப் புரிந்துகொண்டேன். அவருக்கு, தமிழர்கள் பற்றியோ, தமிழ்மொழி பற்றியோ எந்தக் கவலையும் இல்லை.
செம்மொழி மாநாட்டைப் பொறுத்தவரையில் நான் ஏதோ செம்மொழி மாநாட்டுக்கு வருகிறேன்… வருகிறேன் என்று வாசலில் போய் நின்றது போலவும், கருணாநிதி என்னைத் துரத்திவிட்டது போன்றும் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார். விருந்து உண்ணுவதில்கூட மானம் பார்க்கிற தமிழன் நான். உலக அளவில் தனக்கு நேர்ந்துள்ள அவப் பெயரைப் போக்க, இனக் கொலை நடந்த ஓர் ஆண்டுக்குள் செம்மொழி பெயரில் இந்த மாநாட்டைத் தன் குடும்ப மாநாடாக நடத்தி முடித்திருக்கிறார்.
ஆனால், தன் மீது விழுந்த களங்கத்தை மாநாடு நடத்தியோ, மயிலாட நடத்தியோ கழுவ முடியாது என்பது முத்தமிழ் அறிஞர் கருணாநிதிக்கு இன்னும் விளங்கவில்லை. இந்த மாநாடு அறிவிக்கப்பட்ட உடனே முதன்முதலாக அதற்கு எதிராகக் குரல் கொடுத்தவன் நான். செம்மொழி மாநாடு நடந்த அதே கோவையில், பல தடைகளைத் தாண்டி டாக்டர் கிருஷ்ணசாமி ஏற்பாடு செய்த மாநாட்டிலும், மதுரையில் நாம் தமிழர் மாநாட்டிலும் பேசினேன்.
புது டெல்லியில் நடைபெற்ற புலம்பெயர்ந்த இந்தியர்களின் மாநாடான ‘பிரவசி பாரதிய திவாஸ்’ மாநாட்டுக்கு எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனிதப் பேரவலத்தில் இந்தியாவின் பங்கைச் சுட்டிக்காட்டி, நான் நிராகரித்தேன்.
இப்படி எதிர்ப்புத் தெரிவித்த என்னை அவமானப்படுத்தும் நோக்கில், வழக்கம் போலக் கடிதம் எழுதினார் கருணாநிதி. மற்றபடி எனக்கும் அவருக்கும் எந்தவிதமான தனிப்பட்ட பிரச்சினைகளும் இல்லை.
கேள்வி: பிரபாகரன்தான் என் தலைவர் என்கிறீர்கள், அதற்கு என்ன காரணம்?
பதில்: எனக்கு மட்டுமல்ல… உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒப்பற்ற தலைவர் பிரபாகரன்தான். தலைவர் பிரபாகரனை இரு முறை வன்னியில் சந்தித்துள்ளேன். ஈழத் தமிழர்களைப் பற்றியும் உலகத் தமிழர்கள் பற்றியும் நீண்ட நேரம் உரையாடினோம். அவரிடமிருந்து விடைபெறும்போது, தமிழ், தமிழர் நலன் குறித்த தெளிந்த சிந்தனையும் தெளிவான பார்வையோடும் நான் வெளியே வந்தேன்.
பிரபாகரன் எனக்கு ஒரு வழிகாட்டி. சுருக்கமாகச் சொல்லப்போனால், தமிழினத்தின் காவலன் பிரபாகரன். தமிழர் சரித்திரத்தில், 1,000 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அவரைப் போன்ற தீர்க்கதரிசனம் மிக்க தலைவர் தோன்றுவார். தமிழர் சரித்திரத்தில் ஈடு இணையற்ற மாபெரும் தலைவர் அவர்!
கேள்வி: 30-க்கும் மேற்பட்ட நாடுகள், புலிகள் அமைப்பைத் தடை செய்திருக்கும் நிலையில், மலேசியாவில் ஓர் அரசுப் பதவியில் இருக்கும் உங்களது பேச்சு, மலேசிய அரசுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தாதா?
பதில்: கடந்த காலங்களில் ‘தீவிரவாதம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி, பல சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் நசுக்கப்பட்டதை நாம் அறிவோம். அயர்லாந்து புரட்சி இயக்கம், விடுதலைப் புலிகள் இயக்கம், பி.எல்.ஓ. எனப்படும் பாலஸ்தீன சுதந்திர இயக்கம், இப்படிப் பல சுதந்திரப் புரட்சி இயக்கங்களை அவ்வாறுதான் சித்தரித்து ஒடுக்கப்பார்த்தார்கள்.
என்னைப் பொறுத்தவரை, விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தேசிய விடுதலை இயக்கம். சிங்கள இனவெறி அரசின் கொலை வெறியாட்டத்தில் இருந்து, இலங்கையில் ஒரு தேசிய இனமான தமிழர்களைக் காப்பாற்றத் தொடங்கப்பட்ட இயக்கம். அவ்வியக்கம், தமிழர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவே விளங்கியது. ஈழத் தமிழர்கள் மட்டும் இன்றி, உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு காவல் அரணாக நம்பிக்கையை ஏற்படுத்தியது விடுதலைப் புலிகள் அமைப்புதான்.
நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு இருந்தே, தமிழர்கள் மட்டுமல்லாது, இந்தோனேஷியாவின் ஆச்சே பகுதி மக்கள், பாலஸ்தீனியர்கள் என்று உரிமைக்காகப் போராடும் மக்களுக்காகப் போராடுபவனாகவே இருந்து வந்திருக்கிறேன். இப்போது அரசியலுக்கு வந்து, பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பதவியில் உட்கார்ந்து இருக்கிறேன் என்பதற்காக எனது கொள்கைகளை, எனது போராட்டத்தைக் கைவிட்டுவிட முடியாது!
கேள்வி: கே.பி. கைது, ஈழ அகதிகள் விவகாரங்களில் கொண்டுள்ள அணுகுமுறை போன்றவற்றை வைத்துப்பார்க்கும்போது, மலேசிய அரசு, இலங்கை அரசுக்கு ஆதரவாக இருப்பதைப் போன்று தெரிகிறதே?
பதில்: மலேசியாவில் ஆட்சியில் இருக்கும் அரசும் இனவாத அரசே. அந்த வகையில், சுதந்திர இயக்கங்களுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவது அதிசயம் இல்லை. மலேசிய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இணக்கப்பாடின்றி, நெருங்கிய ஒத்துழைப்பு இன்றி, கே.பி-யின் கைது மலேசியாவில் நிகழ்ந்திருக்காது
பல விடுதலைப் புலி உறுப்பினர்களைக் கைது செய்து, இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது மலேசிய அரசு. அவ்வாறு நாடு கடத்தப்படும் புலி உறுப்பினர்களை, இலங்கை அரசு கைது செய்து சிறையில் அடைக்கிறது, சித்திரவதைகள் செய்கிறது.
தமிழ் சுதந்திர இயக்கங்களை ஒடுக்குவதில், இரண்டு அரசுகளும் மிகக் கவனமாக நடந்துவருகின்றன. இன்று வரையிலும் சுமார் 2,000 தமிழ் அகதிகள், மலேசியாவின் குடிநுழைவுத் துறை தடுப்பு முகாம்களில் உள்ளனர். அண்மையில்கூட, சுமார், 75 அகதிகள் கைது செய்து அடைக்கப்பட்டுள்ளனர்.
கேள்வி: இந்திய, தமிழக அரசுகளையும், சோனியாவையும் நீங்கள் விமர்சிப்பது, மலேசிய-இந்திய உறவுகளைப் பாதிக்காதா?
பதில்: மகிந்தா ராஜபக்ஷ, கோத்தபய ராஜபக்ஷே போன்று மன்மோகன் சிங், சோனியா காந்தி, ப.சிதம்பரம், கருணாநிதி ஆகியோரும் போர்க் குற்றவாளிகளே.
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் குழு, தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக் கொடுமைகள்பற்றி விசாரிக்கும்போது இவர்களையும் விசாரிக்க வேண்டும்.
உங்களுக்குத் தெரியும், ஈழப் போரில் நிகழ்ந்த கொடுமைகளைக் கண்டு, நான் சில தலைவர்களைக் கேள்வி கேட்டதற்கே, எனக்கு இந்தியாவுக்குள் செல்லத் தடை விதித்துள்ளனர்.
கண்டிப்பாக, மலேசிய அரசுக்கு என் நடவடிக்கைகள் எரிச்சலைக் கிளப்பியிருக்கும்தான். அதைப்பற்றி எல்லாம் எனக்குக் கவலை இல்லை. இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதுதான் என் நோக்கம்.
கேள்வி: உங்கள் மாநிலத்துக்கு வந்த இந்தியத் தூதரை நீங்கள் சந்திக்க மறுத்து அவமதித்தது சரியா?
பதில்: எனக்குத் தடை விதித்த இந்திய அரசின் அதிகாரிகளுக்கு நான் மரியாதை கொடுப்பது அவசியம் இல்லை என்று நான் கருதுகிறேன். சமீபத்தில், இந்தியத் தூதர் விஜய் கோகல்லே அவர்களைச் சந்திக்க நான் மறுத்துவிட்டேன். நான் என்ன நினைக்கிறேன் என்றால், மலேசியாவில் உள்ள இந்திய அரசின் அதிகாரிகள் இந்திய அரசாங்கத்தின் பிரசார சாதனங்கள், அவ்வளவுதான்.
கேள்வி: ஐ.நா. விசாரணைக் குழுவின் விசாரணைகள் சரியான வகையில் நடத்தப்படும் என்று கருதுகிறீர்களா?
பதில்: இலங்கையில் நிகழ்ந்த கடும் யுத்தத்தை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது. ஆனால், இன்று பல நாடுகள், மனித உரிமைக் குழுக்கள், தனி நபர்களின் தொடர் அழுத்தத்தால், இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் விசாரணைக் குழு ஒன்றை ஐ.நா. அமைத்துள்ளது. அதன் நடவடிக்கைகள், விசாரணைகள் எந்த அளவுக்கு நடுநிலையாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால், இலங்கையில் நிகழ்ந்தது இன அழிப்பு நடவடிக்கைதான் என உலக நாடுகளுக்கும், தலைவர்களுக்கும் புரியவைக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டன. நாங்களும் இதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டோம்!
கேள்வி: இந்திய அரசு ஈழத் தமிழர் விவகாரத்தில் மட்டுமல்லாது எல்லா தமிழர்கள் விவகாரத்திலும் இப்படித்தான் நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டினீர்களே, அது ஏன்?
பதில்: மலேசியாவில் வசித்தாலும் எங்கள் வேர்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன. எங்களின் மூதாதையர்களில் பலர், இரண்டாம் உலகப் போரில் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து போராடியவர்கள். ஆனால், இந்திய அரசாங்கம் மலேசியத் தமிழர்களை எப்போதோ மறந்துவிட்டது.
எங்கள் துன்பங்களை இந்திய அரசு கண்டுகொண்டதே இல்லை. அதிலும் குறிப்பாக, வட இந்தியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்திய நடுவண் அரசு, தமிழர்கள் விவகாரங்களில், அது மலேசியத் தமிழராகட்டும், ஈழத் தமிழராகட்டும், ஓர் அலட்சியப் போக்கையே கடைப்பிடிக்கிறது.
ஆஸ்திரேலியாவில் வட இந்தியர்கள் தாக்கப்பட்டால் அலறித் துடிக்கும் இந்திய அரசின் இதயம், தாக்கப்படுபவன் தமிழன் என்றால் மௌனமாகிவிடுகிறது.
கருணாநிதியோ தனது குடும்ப நலனுக்காக தமிழர்களின் நலன், அவர்களின் எதிர்காலம் எல்லாவற்றையும் காவு கொடுத்துவிட்டார்.
இப்போதைக்கு, தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம், மறுமலர்ச்சி கண்டிப்பாகத் தேவை என்பதுதான் என்னுடைய கருத்து. அதன் பிறகுதான், தமிழீழத்தைப் பற்றிய விவாதங்கள் குறித்து நாம் பேச முடியும்! என்றார்.

25 ஆகஸ்ட் 2010

ஆயுதக் குழுக்களுக்கு சிறீலங்கா இராணுவம் எச்சரிக்கை.



பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என சிறீலங்கா இராணுவத்தினர் ரீ.எம்.வீ.பி., டெலோ, புளொட் மற்றும் ஈ.பி.டி.பி ஆகிய தமிழ்த்தேச விரோத ஆயுதக் குழுக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிறீலங்கா அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ள முன்னாள் ஆயுதக் குழுக்களுக்கும் சிறீலங்கா இராணுவத்தினருக்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் ஆயுதம் பறிக்கப்பட்டுள்ள சம்பவத்தினை அடுத்து பிரதேச அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.
ரீ.எம்.வீ.பி., டெலோ, புளொட் மற்றும் ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

24 ஆகஸ்ட் 2010

கரைசேர முடியாமல் நடுக்கடலில் தள்ளாடிய குமுதினி.




நூற்றி ஐம்பது பயணிகளுடன் நடுக்கடலில் நேற்றுத் தத்தளித்துக்கொண்டி ருந்த குமுதினி படகை, அக்குவாட்டி படகு கட்டி இழுத்து பாதுகாப்பாக கரைக்கு சேர்த்தது.
இச்சம்பவம் குறித்து தெரிவிக்கப்படுவதாவது, நேற்று திங்கட்கிழமை காலை நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி புறப்பட்ட குமுதினி மோட்டார் படகு திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகப் பழுதடைந்தது. சுமார் 150 பயணிகளுடன் வந்த குமுதினி நடுக்கடலில் திடீரெனப் பழுத டைந்ததைத் தொடர்ந்து பயணிகள் பீதியடைந்தனர்.
இதே சமயம் நெடுந்தீவில் இருந்து சிறிது நேரத்தின் பின் பயணிகளுடன் வந்த தனியார் படகு குமுதினி படகு கடலில் தத்தளிப்பதை அவதானித்து உடன் அதனருகே விரைந்து சென்று குமுதினியைக் கட்டி இழுத்தபடி குறிகாட்டுவானுக்கு வந்து சேர்ந்தது.

இலங்கை பணிப்பெண்ணுக்கு ஆணி அடித்து சித்திரவதை,சவுதியில் கொடூரம்!


சவூதி அரேபியாவில் கடமையாற்றிய பணிப்பெண் ஒருவரின் உடம்பில் ஆணி அடித்து செய்யப்பட்ட மோசமான சித்திரவதையினால் படுகாயமடைந்த நிலையில் அப்பெண் இலங்கை வந்துள்ளார்.
அவர் தற்போது கும்புறுபிட்டி தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பெண்ணின் உடலில் 23 ஆணிகள் இருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மாத்தறை பிரதேசத்தின் திஹகொடையைச் சேர்ந்த 49 வயதான எல். பி. ஆரியவதி என்பவரே வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்று கடந்த மார்ச் 25ம் திகதி சவூதி பயணமாகியுள்ளார்.
அவரது உடலில் ஆணிகள் அடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கடந்த 21ம் திகதி இலங்கை திரும்பியுள்ளார். தனக்கு உறங்குவதற்கு கூட இடமளிக்கப்படாது சதாவும் வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதாகவும், குறித்த வீடடின் எஜமான் இரும்பு ஆணிகளை சூடாக்கி தனது உடலில் அடித்ததாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்
தான் இலங்கைக்கு தனது சம்பளப் பணத்தில் டிக்கட் பெற்றுக் கொண்டே திரும்பியதாகவும் அப்பெண் மேலும் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு பிடகஸ்மன் மற்றும் வலி போக்கும் ஊசி மருந்துகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த வைத்தியர்கள் அப்பெண்ணை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

23 ஆகஸ்ட் 2010

பத்து மாத காலமாக கணவராயிருந்தவர் உண்மையில் ஒரு பெண்! அதிர்ச்சியடைந்த மனைவி பொலிஸில் புகார்.



இலங்கையின் மாத்தறைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளம் பெண்ணொருவர், தனது கணவர் உண்மையில் ஒரு பெண் என்பதை 10 மாதங்களின் பின்னர் கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்ததுடன் இந்த விடயம் தொடர்பாக பொலிஸில் புகார் செய்துள்ளார்.
அச்சந்தேக நபர் மாத்தறை திக்கெல்லையைச் சேர்ந்த 30 வயது பெண்ணாவார்.
அவர் தனது புகைப்படமொன்றை போட்டோஷொப் மூலம் ஆண் போன்று மாற்றிக்கொண்டு, பாதிக்கப்பட்ட யுவதிக்கு அனுப்பியதாகவும் தான் இராணுவத்திலிருந்து தப்பியோடிய ஒருவர் எனவும் அந்த யுவதியிடம் கூறியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த யுவதி கடந்த வருடம் நவம்பர் 29 ஆம் திகதி பெற்றோரின் சம்மதமின்றி சந்தேக நபரை திருமணம் செய்தாராம். ஆனால் சுமார் 10 மாதங்கள் வரை தனது கணவர் ஒரு பெண் என்பதை அவர் அறியாமல் இருந்தமைதான் ஆச்சரியமானது.
ஆனால், அண்மையில் ஒருநாள் தனது கணவர் மதுபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவரின் சாரம் கழன்று விழுந்து விட்டதாம்.
அப்போதுதான் தான் வாழ்க்கையில் மிக முக்கிய விசயங்களை இழந்திருப்பது மனைவிக்குத் தெரிய வந்ததாம். அதிர்ச்சியடைந்த அவர் , தனது பெற்றோருக்கு இது குறித்து தெரிவித்ததுடன் மாத்தறை காந்தர பொலிஸில் நிலையத்திலும் புகார் செய்துள்ளார்.
அதையடுத்து, ஆண் வேடமிட்டு கணவராக நடித்த பெண் தலைமறைவாகியுள்ளார். அவரை பொலிஸார் வலை வீசித் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கே.பி சொல்வது உண்மையா பொய்யா இனம் காண முடியாத ஊடகங்கள்.



இலங்கை அரசாங்கத்தின் தடுப்பில் உள்ளதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாதன், இலங்கையின் சில ஊடகங்களுக்கு அவ்வப்போது செவ்விகளை வழங்கி வருகிறார் அண்மையில் அவர் வழங்கிய செவ்வியில் வன்னியில் நடைபெற்ற இறுதியுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா நடேசன் இந்திய உள்துறை அமைச்சர் பா சிதம்பரத்துடன் தொடர்புக்கொண்டு போர் நிறுத்தம் ஒன்று குறித்து பேச்சு நடத்தியதாக குமரன் பத்மநாதன் தெரிவித்திருந்தார்
அப்போது போர் நிறுத்தத்திற்காக சிதம்பரம் பல நிபந்தனைகளை விதித்திருந்தார் என்றும்
இந்த குறித்த விடயம், தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலாளர் வைகோ மற்றும் தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ நெடுமாறன் ஆகியோருக்கு தெரியக்கூடாது என சிதம்பரம் நடேசனிடம் தெரிவித்திருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்
இவ்வாறான உரையாடலுக்கிடையில் சிதம்பரத்தை முழுமையாக நம்பாத நடேசன், கம்யூனிஸ கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே மகேந்திரனிடம் இந்த விடயத்தை தெரிவித்ததாகவும்
ஆதனைத் தொடர்ந்து மகேந்திரன், வை கோபாலசாமியிடமும், நெடுமாறனிடமும் சிதம்பரத்தின் நிபந்தனை தொடர்பாக தெரிவித்ததாக குமரன் பத்மநாதன் குறிப்பிட்டுள்ளார்
இவ்வாறான உரையாடலிக்கிடையில் கோபமடைந்த வை. கோபாலசாமி, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தாம் வழங்கிவரும் ஆதரவை விலக்கிக்கொள்ளப்போவதாக தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்
அத்துடன், இந்திய மத்திய பொதுத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியே ஆட்சியமைக்கும் என்பதால், அந்த கட்சியை கொண்டு இலங்கை அரசாங்;கத்தை போர் நிறுத்தத்திற்கு இணங்க வைக்கலாம் என்ற நம்பிக்கையையும் கோபாலசாமி, நடேசனிடம் தெரிவித்தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
ஆகவே தான் நடேசனும் சிதம்பரத்துடனான பேச்சுவார்த்தையை கைவிட்டதாக குமரன் பத்மநாதன் குறிப்பிட்டுள்ளார்.

22 ஆகஸ்ட் 2010

பேஸ்புக்கில் மலர்ந்த காதல் தற்கொலையில் முடிந்த பரிதாபம்!



பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழ் இளைஞன் ஒருவனுடன் காதல் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்ட தமிழ் மாணவி ஒருவர் ceiling fan இல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளவராவர். வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில் குறித்த மாணவி 11ம் தரத்தில் கல்வி கற்று வந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்போது லண்டனில் வசித்து வருபவருமான 19 வயது இளைஞர் ஒருவருடன் இணையம் ஊடாக காதல் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்ட குறித்த மாணவி இறுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
காதல் தோல்வியில் ஏற்பட்ட விரக்தி நிலைமையே இந்த தற்கொலைக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களாக பேஸ்புக் மூலம் இருவரும் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாகவும், கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி குறித்த மாணவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததாகவும் அப்போது மாணவின் வீட்டுக்கும் அவர் சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையிலிருந்து லண்டன் சென்றது முதல் குறித்த மாணவியை அந்த இளைஞர் நிராகரிக்கத் தொடங்கியதாகவும், இதனால் மாணவி உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிய வருகின்றது.
மீண்டும் மீண்டும் இணையமூடாக தொடர்பு கொள்ள முற்பட்ட போதிலும் இளைஞர் அவற்றை நிராகரித்த காரணத்தினால், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கொழும்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணையமூடாகக் காதலித்து உயிரை விடும் சம்பவங்கள் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது ஜே வி பி.



இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கக்கோரி சர்வதேச நாடுகளை கோரப்போவதாக ஜே வி பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தள்ளார்.
சமீபத்தில் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலியில் வைத்து கைதுசெய்யப்பட்டமையை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சோமவன்ச தெரிவித்துள்ளார்
அகிம்சை ரீதியான எதிர்ப்புக்களுக்கு இலங்கையில் இடமில்லை என்ற அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்
காலியில் சரத் பொன்சேகாவை விடுகவிக்குமாறு கோரி நடத்தப்ட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்புகைத்தாக்குதலை நடத்தியதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கைதுசெய்தனர் என்பது குறிப்பிடத் தக்கது

21 ஆகஸ்ட் 2010

61 வயது பிலிப்பைன்ஸ் பெண்ணை கற்பழிக்க முயன்று வாங்கிக் கட்டிய 41 வயது இலங்கையர்!



இத்தாலியின் மிலான் நகரில் 61 வயதுடைய பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணிடம் நன்றாக வாங்கிக் கட்டினார் 41 வயது உடைய இலங்கையர் ஒருவர். இப்பெண்மணி தாதியாக கடமையாற்றுகின்றார்.
ஆனால் இவர் கராட்டிக் கலையில் கறுப்புப் பட்டியை பெற்றுக் கொண்டவர். இவர் நேற்று வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். இவர் ஒரு தொடர்மாடியில்தான் வசிக்கின்றார்.
இந்த இலங்கையரும் இத்தொடர்மாடியில்தான் இருக்கின்றார். இவர் மின்சாரத்தில் இயங்கும் மாடிப்படி ஊடாக சென்றபோது கத்தரிக்கோல் ஒன்றுடன் இலங்கையர் இவருக்காக வெளி வாசலில் காத்திருக்கின்றார்.
இலங்கையர் உள்ளாடை மாத்திரம் அணிந்திருந்தார். மதுபானமும் அருந்தி இருக்கின்றார்.. கத்திரிக்கோலால் மிரட்டி அவருடைய அறைக்கு இப்பெண்ணை கொண்டு செல்ல முயன்றிருக்கின்றார்.
ஆனால் சாதுரியமாக செயற்பட்ட அந்தப் பெண் கராட்டி முறையில் இலங்கையரைத் தாக்கி நிலைகுலையச் செய்தார். பின் பெரிதாக சத்தமிட்டார். அவரின் சகபாடிகள் இருவர் அவரின் குரலைக் கேட்டு உதவிக்கு வந்தனர். பொலிஸார் தொலைபேசி மூலம் அழைக்கப்பட்டனர். இலங்கையர் கைது செய்யப்பட்டார்.

இலத்தீன் அமெரிக்கர்கள் கனடா அகதிகளுக்கு ஆதரவு.



கடந்த வாரம் கனடாவை அடைந்துள்ள 100 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட்ட 490 இலங்கை அகதிகளையும் பாதுகாப்பதற்கு கனடாவிலுள்ள இலத்தீன் அமெரிக்கர்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். இலத்தீன் அமெரிக்கக் குழுக்கள் கையொப்பமிட்ட அறிக்கையொன்றும் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளவை ஆவன,"கனடாவிலுள்ள இலத்தீன் அமெரிக்கச் சமூகமாகிய நாங்கள் 100 பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளடக்கமாக கனடாவை அடைந்துள்ள 400-500 தமிழ்ச் சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு எமது ஆதரவைத் தருவதாக பிரேரிக்கிறோம். இந்த அகதிகளை பயங்கரவாதிகளாக வகைப்படுத்தி கனடியன் ஊடகம் மற்றும் பொது அதிகாரிகள் இதை அரசியல் நோக்கமானதாகச் செய்கிறார்கள். இந்த அறிக்கைகள் எல்லாம் இன அழிப்பில் ஈடுபடும் இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கமானவர்களால் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டன. இந்த மக்களுக்கான மனித மற்றும் சட்ட ரீதியான உரிமைகளை எங்கள் அரசாங்கம் மறுப்பதானது இனப்பாகுபாடான மற்றும் அந்நிய நாட்டவர் மீது காட்டும் வெறுப்புணர்வான போதனை என்றே நாம் நம்புகின்றோம்.இதேபோன்ற நிலைமைகளின் கீழ் சிலி, கொலம்பியா, குவாட்டமாலா, சல்வடோர், உருகுவே மற்றும் பிற நாடுகளிலிருந்து பலர் அகதிகளாக இங்கு வந்துள்ளனர். இந்த வரலாற்று அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, எங்களைப் போல தமது சொந்த நாட்டில் மறுக்கப்பட்ட அமைதியையும் கௌரவத்தையும் இங்கு பெற்று தமது வாழ்க்கையை வாழ விரும்புகின்ற அவர்களுக்கு எங்கள் ஒருமைப்பாட்டை அங்கீகரிக்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.அதோடு தமிழ் அகதிகளுக்கு சர்வதேச விதியின் அடிப்படையில் அவர்களின் மனித உரிமைகளை மதித்து அகதி அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று கனேடிய அரசுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளனர். மேலும், கனேடிய மக்கள் தாம் தெரிவுசெய்துள்ள அரசாங்க அதிகாரிகளிடம் இந்த அகதிகளுக்கு ஆதரவாக குரல்கொடுக்கவேண்டும் என்று கேட்கவேண்டும் என்றும் இலத்தீன் அமெரிக்கக் குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.மேற்படி அறிக்கையில் கீழ்க்கண்ட அமைப்புகள் கையொப்பம் இட்டுள்ளன.Barrio NuevoCASA Salvador AllendeCELSAN (Canada El Salvador Action Network)Circulo Bolivariano Louis RielFrente de Resistencia de HondurasHands off Venezuela (HOV)Latin@sLatin American Solidarity NetworkLatin American Trade Unionist Coalition (LATUC)Victor Jara Cultural Group

19 ஆகஸ்ட் 2010

திருச்சியில் திமுக கோஷ்டி பூசல் வலுக்கிறது.



திருச்சியில் அமைச்சர் நேரு மற்றும் சிவா எம்.பி. ஆதரவாளர்களின் கோஷ்டி பூசல் வலுத்துவருகிறது.முதல்வர் கருணாநிதி அடுத்த மாதம் 8ஆம் தேதி திருச்சி செல்கிறார். திருச்சியில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். முதல்வரின் வருகையையொட்டி சிவா எம்.பி. ஆதரவாளர்கள் திருச்சி முழுவதும் முதல்வரை வரவேற்று பேனர்கள் வைத்து வருகின்றனர். நேற்று மாலை சிவா வீட்டுக்குச்செல்லும் வழியில் ஸ்டேட் பாங்க் ஆபீசர்ஸ் காலணியிலும் பேனர் வைத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களான திருச்சி துணைமேயர் அன்பழகன், திமுக பகுதி செயலாளர் காஜாமலை விஜய், அமைச்சர் நேருவின் உதவியாளர் முத்துச்செல்வன் உட்பட 30 பேர் அங்கு வந்தனர். இவர்கள், பேனர் வைத்துக்கொண்டிருந்த சிவாவின் ஆதரவளர்களை தடுத்தனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. நேரு ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.இந்த தாக்குதலில் சிவாவின் ஆதரவாளர்கள் வழக்கறிஞர் பாரதி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
வழக்கறிஞர் பாரதிக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியபடியே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிருஷ்ணமூர்த்தி கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து இன்று வழக்கறிஞர் பாரதி, திருச்சி கண்டோன்மெண்ட் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தியிடம் புகார் மனு அளித்தார். தாக்குதல் நடத்திய அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்ய கோரியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், திருச்சி துணைமேயர் அன்பழகன், திமுக பகுதி செயலாளர் காஜாமலை விஜய், அமைச்சர் நேருவின் உதவியாளர் முத்துச்செல்வன் ஆகிய 3 பேர் மீதும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி மாநகராட்சி கமிஷ்னர் பால்சாமி, வழக்கறிஞர் பாரதி மேல் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், மாநகராட்சி இடத்தில் அத்துமீறி சேதப்படுத்திவிட்டார்கள் என்று பாரதி மேல் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.
வழக்கறிஞர் பாரதியோ, திருச்சி மாநகர வழக்கறிஞர்கள் சங்கத்தினரை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்த ஏற்பாடு செய்துவருகிறார்.
திருச்சியில் திமுகவின் கோஷ்டி பூசல் வலுத்துவருவதால் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது.

மக்களுக்கென சேகரித்த நிதியுடன் சிறிடெலோ அமைப்பின் தலைவர் இந்தியா பயணம்.



யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கான சுகாதாரப் பணிகளை பேணுவதற்கெனக் கூறி கூறி மோசடியான முறையில் நிதி சேகரித்த டெலோ அமைப்பின் தலைவரான நிமோ என்றழைக்கப்படும் நிர்மலன் முருகேசு, அந்த நிதியில் அவரது குடும்பத்தாருடன் அண்மையில் சமய வழிபாடுகளுக்காக இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கின்றன.
நிமோவுடன் இந்தியா செல்வதற்காக அவரது மனைவி இங்கிலாந்திருந்து இலங்கை வந்த பின்னர; இருவரும் இந்தியா சென்றுள்ளதாக தெரியவருகிறது.சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக ஜேர்மனிய காவல்துறையினர் நிமோவை விசாரணை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ள அதேவேளை, ஜேர்மனிய காவல்துறையினரின் விசாரணைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே அவர் தற்போது இலங்கையில் வசித்து வருகிறார் அத்துடன் நிமோ ஜேர்மனியப் பிரஜாவுரிமைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1980ம் ஆண்டுகளின் முற்பகுதியில் மன்னாரில் படுகொலைச் சம்பவமொன்றுடன் சம்பந்தப்பட்ட இவர் ஜேர்மனிக்குச் தப்பிச் சென்று அங்கு அரசியல் தஞ்சம் கோரி ஜேர்மனிய பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டவராவார்
யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு வந்த இவர் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மக்களுக்கான நிவாரணைப் பணிகளை முன்னெடுப்பதாகக் கூறி இவ்வாறு நிதி சேகரிப்பு மோசடியில் ஈடுபட்டுவந்தார்.

18 ஆகஸ்ட் 2010

இடம்பெயர் முகாம்களில் விடுதலைப் புலிகளின் சுவரொட்டிகள்?



வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் விடுதலைப் புலிகளின் போஸ்ரர்கள் ஒட்ட்பட்டிருந்ததாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இந்தப் போஸ்ரர்கள் அங்குள்ள மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் அச்சுறுத்தல் விடுப்பது போல கையெழுத்துக்களால் எழுதப்பட்டு ஒட்டப்பட்டுள்ளனவாம். அவற்றில் "எங்கள் தேசியத் தலைவர் இறந்துவிடவில்லை. அவரை எவ்வாறு ஒருவரால் கொல்ல முடியும்? அவரை ஒருவராலுமே வெல்ல முடியாது. இராணுவம் பொய் கூறுகிறது. இராணுவத்துடன் தொடர்பு கொள்ளும் எவரும் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும். எங்கள் தலைவரின் கீழ் ஈழப் போராட்டம் தொடரும்" போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.இதையடுத்து மேற்படி முகாம்களில் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் கண்காணிக்கப்பட்டு வந்த சிலர் முகாம்களிலிருந்து தப்பியோடியுள்ளதால் முகாம் நிர்வாகிகளுக்கும், இராணுவத்துக்கும் மேலும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மன்னார், வவுனியா யாழ்ப்பாண முகாம்களில் புலனாய்வுப் பிரிவுகள் பலவும் நியமிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல பிரிவுகள் முகாம்களுக்குப் பொறுப்பாக இருக்கின்ற போதும்கூட, புலிகள் பற்றிப் புகைய ஆரம்பித்திருப்பது குறித்து சிரேஷ்ட அதிகாரிகள் மிகுந்த விழிப்புடன் இருக்கிறார்களாம்.

17 ஆகஸ்ட் 2010

அசின் படத்தை வாங்க சக்தி சிதம்பரம் முடிவு.



நடிகை அசின் இலங்கை சென்றுவந்ததால் அவருக்கு தமிழ் திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவரது படத்தை வெளியிட்டால் எதிர்ப்புகள் வரும் என்று அவர் நடித்துள்ள படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குநர் சக்தி சிதம்பரம் அதிரடி முடிவெடுத்துள்ளார்.
அசின் விவகாரத்தால் சிக்கலில் தவித்துக்கொண்டிருக்கிறது விஜய்யின் காவலன் படம். இந்தப்படத்தை வெளியிட பலரும் தயங்கிய வேளையில் பிரபல நிறுவனங்கள் கூட ஒதுங்கிவிட, இயக்குநரும் தயாரிப்பாளருமான சக்தி சிதம்பரம் இப்படத்தை விலை பேசியுள்ளாராம்.
ஒரு பெரிய தொகையை முன் பணமாக கொடுத்து விட்டாராம்.
ஒட்டுமொத்தட் திரையுலகமும் அசினுக்கு எதிராக இருக்க இந்த இயக்குநரின் முடிவு பலரையும் திகைக்க வைத்துள்ளது.

ஈழத் தமிழர் ஒருவர் ஜேர்மனி செனட்டர் ஆகிறார்:



இலங்கையில் பிறந்து ஜேர்மனியில் குடியேறியுள்ளவரும் கோடீஸ்வரரும் கொள்கலன் தொழில் அதிபருமான அயன் கிருகரன் ஹம்பேர்க்கின் பொருளாதார விவகாரங்களுக்கான செனட்டராகப் பதவியேற்கவுள்ளார். இது குறித்து கூறிய அவர் "அந்த நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்'" என்றார். ஹம்பேர்க்கின் பிரஜையான கிருகரன் இப்போது ஜேர்மனியின் பிரஜாவுரிமையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க விரும்புவதாக ஜேர்மனி ஊடகங்களை மேற்கோள்காட்டி இலங்கை இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. ஜேர்மனியின் பிரஜாவுரிமையை கிருகரன் பெற்றுக்கொள்ள வேண்டுமென ஜேர்மன் அதிபர் (கண்சிலரின்)அங்கெலா மேர்கள் விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கையில் பிறந்த கிருகரன் இங்கிலாந்துக்குப் புலம்பெயர்ந்து சென்று, அதன்பின் அங்கிருந்து ஹம்போர்க்கிற்கு குடிபெயர்ந்தார். விசேட கொள்கலன்களை உற்பத்திசெய்யும் நிறுவனமான பேர்ம் கப்பிட்டல் இன்ரர்மொடலின் உரிமையாளர் கிருகரன் என்பதும் குறிப்பிடத்தக்கது. பதவி விலகும் செனட்டர் அக்ஸெல் ஜெடஸ்கோவின் இடத்திற்கு 70 வயதான கரன் செனட்டராகவுள்ளார்.

சிங்களவர்கள் மீது யாழில் தாக்குதல்.



தென்னிலங்கையில் இருந்து வியாபார நோக்கத்திற்காக யாழ் சென்றிருந்த மூன்று சிங்களவர்கள் இனந்தெரியாதோரால் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர்.மேற்படி சம்பவம் நேற்று மாலை 7:30 மணியளவில் யாழ்ப்பாண ஆரியபாதம் வீதி அம்பட்ட பாலத்திற்கு அருகில் இடம்பெற்றது.
தென்னிலங்கையில் இருந்து யாழ் செல்லும் சிங்கள வர்த்தகர்கள் அதிகரித்துள்ள நிலையில் நேற்று 3 சிங்கள வர்த்தகர்களை, தலைக்கவசம் அணிந்து முகத்தை கறுப்பு துணியால் மறைத்து மோட்டார் சைக்கிளில் வந்த 13 பேர் அடங்கிய கும்பல் கத்திகளால் வெட்டி அவர்கள் வந்த லொறியினை எரித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கத்திக்குத்துக்கு உள்ளாகிய சிங்கள வர்த்தகர்களுள் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் ஏனைய இருவரும் பலத்த காயங்களோடு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எரிந்த நிலையில் இருந்த லொறியினை விரைந்து வந்த இராணுவத்தினர் அணைத்துவிட்டனர்.
தளபாட வியாபாரிகள் தம் விற்பனையை முடித்துவிட்டு லொறிக்குள் இருந்த சமயத்திலேயே இவ் இனந்தெரியாத கும்பல் அலவாங்கு, வாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சிங்கள வர்த்தகர்களை தாக்கி, இனிமேல் இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு வியாபாரம் என்ற நோக்கில் வரக்கூடாது என சிங்களத்திலேயே சரளமாக திட்டியுமுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் ஏராளமான இராணுவத்தினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வீதிக்கான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் மிகவும் பதட்ட நிலை நிலவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

16 ஆகஸ்ட் 2010

இளம் பெண்களை கடத்தும் முயற்சி முறியடிப்பு.




கிளிநொச்சிப் பெண்களுக்கு கூடிய சம்பளங்களுடன் சிறந்த வேலைவாய்ப்பைத் தருவதாகக் கூறி கண்டியிலுள்ள தனியார் நிறுவனமொன்று அப்பெண்களைக் கடத்த எடுத்த முயற்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை முறியடிக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின்மீது சந்தேகம் கொண்ட வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சரவணபவன் மற்றும் சிறிதரன் ஆகியோர், இப்பெண்களைக் கூட்டிச்செல்வதற்காக கிளிநொச்சி அரசாங்க அதிபர் பணிமனைக்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த இடத்துக்கு விஜயம் செய்து மேற்படி கடத்தலைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.தென்மாகாணத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றிலேயே இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பு இருப்பதாக கண்டி நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் இந்த இளம்பெண்களைக் குறித்த நிறுவனம் தவறாகப் பயன்படுத்தக்கூடிய ஆபத்து உள்ளதாகச் சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர்கள், குறித்த நிறுவனத்துக்கு இலங்கை அரசாங்கத்தின் சட்ட ரீதியான அனுமதி எதுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டினர். இதற்கிடையில், இந்நிறுவனமானது கிளிநொச்சியில் இரவுபகலாக கடமையில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கோ அல்லது இராணுவத்தினருக்கோ தெரியாமல் இளம்பெண்களைக் கடத்தும் இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் சிறிதரன் கூறியுள்ளார். எனவே இலங்கை அரச படைகளும் சேர்ந்தே இம்முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை தெளிவாகியுள்ளது. போரினால் தமது கணவன்மாரை அல்லது குடும்பத் தலைவர்களை இழந்துள்ள இளம் பெண்களுக்கு கூடுதல் சம்பளம் தருவதாக அவர்கள் வலை விரித்துள்ளார்கள்.இதேவேளை, தடுப்பு முகாமிலுள்ள முன்னாள் பெண் புலிகளை அரசாங்கமானது சிறைகளிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் சம்பளம் இன்றியே வேலைக்கு அமர்த்தியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

வடமராட்சி கிழக்கு கரையோரப்பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள்!!!



வடமராட்சி கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் துரித கெதியில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாழையடி முதல் கட்டைக்காடு வரையான கரையோரப் பிரதேசங்களிலேயே இவ்வாறான சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன.
தென்னிலங்கையில் இருந்து பெருந்தொகையான சிங்கள மீனவர்களை வடபகுதிக்கு கொண்டுசென்றுள்ள சிறீலங்கா அரசு அவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட சிங்கள மீனவக் குடும்பங்களை வடபகுதியின் கரையோரங்களில் குடியேற்றி வருவதாகவும், இதனால் தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் சிங்களவர்களுக்கு தாரைவார்க்கப்படுவதாகவும் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.
இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு கரையோரப் பகுதியூடாக பயணித்த மக்களே இவ்வாறு தாழையடி, செம்பியன் பற்று, கட்டைக்காடு போன்ற பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டிருப்பதை அவதானித்துள்ளனர்.
புதிதாக ஒரே மாதிரியான குடியிருப்புக்களை கட்டி அங்கு சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டிருப்பதாகவும், தம்மை இதுவரை காலமும் சொந்த இடமான அப்பகுதிகளில் குடியேற்றாது தடுத்துவந்த இராணுவமும், மகிந்த அரசும் தற்போது தமது இடங்களில் இவ்வாறான சிங்களக்குடியேற்றங்களை செய்துவருவதாக கவலையுடனும், கொதிப்புடனும் தெரிவித்தனர்.

15 ஆகஸ்ட் 2010

பிரச்சனையை கிளப்பும் ப்‌ரியாமணி.



பாசிஸ சிங்கள அரசின் ஊதியம் வாங்காத விளம்பர தூதராக செயல்பட்டு வருகிறார்கள் சல்மான்கானும், விவேக் ஓபராயும். சல்மான்கானின் சகவாசத்தால் இந்த தூதர் வேலையை அசினும் செய்து சிக்கலில் மாட்டிக் கொண்டது உலகுக்கே தெ‌ரியும். அப்படியிருக்க ப்‌ரியாமணியும் அந்த வலையில் விழ‌த் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.போக்க‌ரி படத்தை சல்மான்கானை வைத்து வான்டட் என்ற பெய‌ரில் இந்தியில் இயக்கினார் பிரபுதேவா. படம் ஹிட். அப்போதே வான்டட் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என தயா‌ரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது.இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் ப்‌ரியாமணியை நடிக்க வைக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இது குறித்து ப்‌ரியாமணியிடம் கேட்டதற்கு, வான்டட் இரண்டாம் பாகத்தில் நடிக்க கேட்டு என்னை இதுவரை யாரும் அணுகவில்லை. அப்படி கேட்டால் உடனடியாக ஒப்புக் கொள்வேன். சல்லு பாயுடன் நடிக்க யாருக்குப் பிடிக்காது என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்.யாருடைய படங்களை தவிர்க்க வேண்டும் என்று தமிழர்கள் நினைக்கிறார்களோ அவர்கள்தான் இந்த நடிகைகளுக்கு பிடித்தமான நடிகர்கள்.திரையுலகமே ரெட் கார்ட்டை ரெடி பண்ணி வையுங்கள்.

எம்.வி.சன்.சி கப்பல் பயணிகளிடையே சகோதரனைத் தேடும் தமிழ் பெண்!



எம்.வி.சன்.சி கப்பலில் கனடா வந்திருக்கும் பயணிகளிடையே அவருடைய சொந்தத் தம்பியைத் தேடி அலைகின்றார் கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் பெண் ஒருவர்.
இவருடைய 24 வயதுச் சகோதரர் ஒருவரும் இப்படித்தான் பல மாதங்களுக்கு முன் கப்பல் ஒன்றில் புறப்பட்டு இருக்கின்றார். வாரத்தில் ஒரு முறை இருவரும் உரையாடி வந்திருக்கின்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாக தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் எம்.வி.சன்.சி கப்பலில் வந்திருப்பவர்களில் அவரின் சகோதரரும் இருக்கக் கூடும் என்று இப்பெண் நம்புகின்றார். சகோதரனை அடையாளம் காண்கின்றமைக்கு கனேடிய தமிழ் காங்கிரஸினர் உதவி செய்ய வேண்டும் என்று கோரி உள்ளார்.
இப்பெண் 1996 ஆம் ஆண்டு கனடாவுக்கு வந்திருக்கின்றார்.ரொரன்ரோ நகரில் வாழ்கின்றார். இவரின் குடும்ப அங்கத்தவர்கள் தற்போதும் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். எனவே பாதுகாப்புக் கருதி இவருடைய பெயரை ஊடகங்களில் பிரசுரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

பட்டினி போராட்டம் நடத்திய வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா.



உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்ககோரி, பட்டினி போராட்டம் நடத்தி, தமிழக அரசின் அடக்குமுறைகளுக்கு ஆளாகி, பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தும் தங்கள் போராட்டங்களை கைவிடாது நெஞ்ச உறுதியுடன் தொடர்ந்த வழக்கறிஞர்கள் பாகத்சிங், ராசேந்திரன், பாரதி, எழிலரசு, ராசா, நடராசன் ஆகியோருக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம். நேற்று 16 கால் மண்டபம், திருப்பரங்குன்றத்தில் நடை பெற்றது .
இந்த பொதுக்கூட்டத்தில் முதல் நிகழ்வாக செஞ்சோலை படுகொலையின் நான்காம் ஆண்டு நினைவுவணக்க அஞ்சலியை செலுத்தி தியாகசூடரினை வழக்கறிஞர் சங்க செயலாளர் சினராஜா ஏற்றினர்.
இந்த பொதுக்கூட்டத்தை திரு.த.செந்தில், நாம் தமிழர் கட்சி. தலைமையேற்று நடத்தினர் . இதில் பட்டினி போராட்டம் நடத்தி வழக்கறிஞர்களுக்குநினைவு பருசுகள் வழங்கப்பட்டது . நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் வெற்றிகுமார் , ராஜகுரு , சீமான் ஆகியேர் நினைவு பருசுகள் வழங்கினார்கள் .இதனை தொடர்ந்து சமர்ப்பா இசை நிகழ்ச்சியும் , நாம் தமிழ ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை ,புலவர் தமிழ் கூத்தான் தமிழ் மணி , செந்தில், மு .கருப்பைய தமிழ் தேசிய விடுதலை இயக்கம் ஆகியோர் பாராட்டு உரை வழங்கினார்கள். ஏற்புரை வழக்கறிஞர் பாகத்சிங்
கூட்டத்தில் புலிகள் மீதான தடை சட்ட ஆணைக்கு விரோதமானது , சட்டத்திக்கு புறம்பான தடுப்பு சட்டம் புலிகள் மீதான தடைக்கு பொருந்து என்று பேசிய போது பலத்த கரவோசம் எழுப்பபட்டது . இப் பொதுக்கூட்டத்தில் 200 மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டார்
இப் பொதுகூட்டத்தை நாம் தமிழர் இயக்க தோழர்கள் மருது , பிரகாரன் ,சூசை, காந்தி . டானியல் மற்றும் நாகராஜ், சிவா, மதி ,படியராஜன், சண்முகம், ஆகியோர் முன்னின்று நடத்தினார்கள்.

ஓமந்தையில் மனித மண்டையோடு, எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு.



ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலங்குளம் காட்டுப் பகுதியிலிருந்து மனித மண்டையோடுகளும் எலும்புக்கூடுகள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பிரிவினராலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அங்கு சென்ற மாவட்ட நீதிவான் எம்.கணேசராசா, கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டார். இந்நிலையில் மேற்படி, எழும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

14 ஆகஸ்ட் 2010

சிதம்பரம், கருணாநிதிக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை.



இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழக்கவும், அங்கு நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்கும் மன்மோகன் சிங், சோனியா, சிதம்பரம், கருணாநிதி ஆகியோரது பங்களிப்பும் உறுதுணையாக இருந்ததால், அவர்களுக்கு எதிராக உடனடியாக போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என மலேசியாவின் பினாங்கு மாநில துணைமுதல்வர் ராமசாமி வலியுறுத்தியுள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இது தொடர்பாக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்த மலேசியா ஜனநாயக நடவடிக்கைக் கட்சியின் முக்கியத் தலைவரும், பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வருமான பேராசிரியர் பி ராமசாமி,கடந்த ஆண்டு மே மாதம் இலங்கையில் நடந்த ஈழத்தமிழினத்திற்கெதிரான இனப்படுகொலையையும், போர்க்குற்றத்தையும் ஆராய்வதற்கான நடவடிக்கையை,தாம் மற்றும் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் ஆகியோரை உள்ளடக்கிய பிரத்தியேக குழு மேற்கொள்ளும் என்றார். அவர் மேலும் கூறியதாவது: சென்ற வருடம் மே மாதத்தில் இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கைத் தீவின் வடகிழக்கு மாநிலத்தில் நடைபெற்ற கடைசிக்கட்ட ஈழப்போரில்,இலங்கை இராணுவத்தினரின் தெரிந்தே மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல்களினாலும், வானிலிருந்து விமானப்படையினால் பொழியப்பட்ட குண்டுகளின் தாக்குதலாலும் 50,000 அப்பாவித் தமிழ் மக்கள் கடைசி சில தினங்களில் அழித்தொழிக்கப்பட்டனர். விடுதலைப்புலிகளின் இராணுவப் பின்னடைவிற்கு பின், தமிழ் மக்கள் அனைவரையும் முள்வேலி முகாமுக்குள் அடைத்து வைத்து இலங்கை இராணுவம் சித்திரவதை செய்ததை உலகம் அறியும். இன்றும் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் உணவு, மருந்து, குடிநீர் வசதி என எந்தவித அடிப்படை வசதியுமின்றி திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் முடங்கி அல்லலுற்று வருகின்றனர். படுபாதக இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலால் 50,000 தமிழர்கள் கொல்லப்பட்ட போர்க்குற்றத்தை ஆராய்வதற்கு,ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் தனிப்பட்ட குழுவை அமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன் அமெரிக்க காங்கிரசின் 56 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டின் இராணுவத்தின் தலைமையில் நடைபெற்ற போர்க்குற்றத்தை ஆராய்வதற்கு ஒரு தனிப்பட்ட குழுவை அமைப்பதற்கு எந்தவித காலதாமதமுமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களைக் கேட்டுக்கொண்டிருப்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இன்றுவரை, ராஜபக்சேவைத் தலைமையாகக் கொண்ட இலங்கைத் தீவின் அரசாங்கம், தனது நாட்டின் இராணுவம் செய்த போர்க்குற்றத்தை விசாரிக்க, கண்துடைப்புக்காக உருவாக்கப்பட்ட தனது குழுவின் விசாரணையை வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகின்றது. சிங்கள அரசின் எட்டு உறுப்பினர்களைக் கொண்ட அந்த விசாரணைக்குழு, ஈழத்தமிழர்கள் பாதிக்கப்பட்ட சம்பவத்தில் மெத்தனம் காட்டிவருகின்றது.அந்த குழுவின் விசாரணையில் தமிழர்களுக்கு நீதிகிடைக்காது என்பதே கடந்தகால அனுபவம். இலங்கைத் தீவில் நடைபெற்ற மனித உரிமை மீறலும், போர்க்குற்றமும் பல ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களின் உயிரிழப்பிற்குக் காரணம் இலங்கை இராணுவம் மட்டுமே அல்ல. அப்போர்க்குற்றத்திற்குச் சிங்கள அரசாங்கத்தின் பல்வேறு மட்ட அரசாங்கத் தலைவர்களும் நேரடியாக பங்கேற்றதோடு மட்டுமின்றி, விவரிக்கமுடியாத இப்போர்க்குற்றங்கள் நடைபெறுவதற்கு, இந்தியாவின் மத்திய மற்றும் தமிழக மாநில அரசுகளும், அதன் அரசியல் தலைவர்களின் பங்களிப்பும் உறுதுணையாக இருந்திருக்கிறது என்பது வெளிப்படையாகும். எனவே இதனைக் கருத்திற்கொண்டு, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, இந்தியாவின் உள்துறை அமைச்சர் சிதம்பரம் போன்றவர்களின் மீது உடனடியாக போர்க்குற்ற விசாரனையை மேற்கொள்ள அவசியம் ஏற்படுகிறது. மேலும் இப்போர்க்குற்றத்தில் முக்கிய குற்றவாளியாகத் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், இலங்கையின் கடைசிக்கட்டப் போரில் தப்பித்து வெளியேறியவர்களின் நேரடி சாட்சிப்படி கருணாநிதி தனது உண்ணாவிரத நாடகத்தின்போது, இலங்கை இராணுவம் கனரக ஆயுதத்தை இனிமேல் பயன்படுத்தாது என்றும், போர் முடிவுக்கு வந்துவிட்டது என்றும் யாரும் பயப்படத் தேவையில்லை, வெளியே வரலாம், இராணுவம் ஒன்றும் செய்யாது என்று வாக்குறுதி தந்ததை நம்பி ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் தங்களது பதுங்கு குழியிலிருந்து வெளியேறிய போதுதான், காத்திருந்த விமானங்களும், பீரங்கிகளும் குண்டு மழைபொழிந்து பல்லாயிரக் கணக்கானோரை பலிகொண்ட உண்மை தற்போது சர்வதேசத்தை வாயடைக்க வைத்திருக்கிறது. இலங்கையில் தழினத்திற்கெதிராக நடைபெற்ற படுபாதகமான மனித உரிமை மீறலையும் அதன்வாயிலாக இலங்கையின் மீது சர்வதேசத்தின் அழுத்தமான நடவடிக்கையையும் கருத்திற்கொண்டு, DAP (Democratic Action Party) சமுதாயத்தின் முக்கிய அங்கத்தினர்களையும், அரசு சார்பற்ற நிறுவனங்களையும், மனித உரிமை அமைப்புகளையும் சேர்ந்த ஒரு பிரத்தியேகக் குழு ஒன்றை அமைத்து, இலங்கைக்கெதிரான போர்க்குற்றத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ஐ.நா.குழுவிற்கு ஆதரவாக நிற்கும். இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை கடுமையாக எதிர்க்க வேண்டும் என மலேசிய அரசாங்கத்தையும் கேட்டுக்கொள்கிறோம். ராஜபக்சேவை போர்க்குற்றத்திலிருந்து காப்பாற்றுவதற்காக, மலேசியாவில் வாழும் ஒருசில யாழ்ப்பாணத் தொழிலதிபர்கள் இலங்கையில் வளர்ச்சிப்பணி என்றப் போர்வையில் முதலீடு செய்ய செல்வதென்பது ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கைக்கு வெகுமதி தருவது போன்ற இனத்துரோகச் செயலாகும்.இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். எனது கட்சியின் தேசியத் தலைவர்களை உள்ளடக்கிய இந்தச் சிறப்புக் குழு, இலங்கையில் மனித உரிமையை மீட்டெடுக்கப் பாடுபடுவது மட்டுமன்றி, ஈழத்தமிழ் மக்களின் நீண்ட நாளைய ஈழவிடுதலைக் கோரிக்கைக்கு முக்கியத் தீர்வொன்றையும் காண்பதற்கு வழிவகுக்க பாடுபடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது கட்சியின் மூலமாக, இலங்கையின் போர்க்குற்றத்தை விசாரிப்பதற்காக அமைக்கப்படும் சிறப்புக் குழுவானது, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஈழத்தமிழர்களால் தேர்வு செய்யப்பட்ட மக்களவைகளோடும், அமெரிக்காவில் இயங்கி வரும் 'இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள்' என்ற (Tamils Against Genocide- TAG ) அமைப்போடும் மற்றும் ஆசிய பிராந்தியத்தில் இயங்கி வரும் மனித உரிமை அமைப்புகளோடும் இணைந்து, இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற இனப்படுகொலையை விசாரித்து,ஒரு சர்வதேச நீதிவிசாரணையை அமைப்பதற்கான முன்முயற்சியில் ஈடுபடும். அத்துடன் நான் துணை முதல்வராக அங்கம் வகிக்கும் பினாங்கு மாநிலத்தில், இலங்கையில் நடைபெற்ற ஈழத்தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலைக்கு, சர்வதேச போர்க்குற்றவியல் நீதி விசாரணைக் கோரும் தீர்மானமொன்றை வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற உள்ளோம். இலங்கைத் தீவில், ஈழத்தமிழர்கள் இலங்கை அரசினால் இனப்படுகொலை செய்யப்படுவதற்கு உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர்கள் தயாரிக்கும் அனைத்துப் படங்களையும், குறிப்பாகக் கலாநிதிமாறனின் தயாரிப்பில் தற்போது வெளிவரவுள்ள “எந்திரன்” படத்தையும் புறக்கணிக்க மலேசியா முழுவதும் நாங்கள் பரப்புரை செய்து வருகிறோம். இனமானமுள்ள ஈழத்தமிழர்களும், தமிழகத் தமிழர்களும், மற்றும் உலகம் முழுவதும் பரந்துவிரிந்து வாழும் மற்றைய தமிழின உறவுகளும் இப்போராட்டத்தில் பங்குபெற வேண்டுகிறேன். அப்பாவியான ஈழத்தமிழ் மக்களை, தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இனப்படுகொலை செய்த சிங்கள இனவெறி அரசுக்கு துணை போனவர்களின் குடும்ப பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்கு, உலகில் இனமான உணச்சியுள்ள எந்தத் தமிழரும் துணைப்போகக்கூடாது என்று வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன். இப்போராட்டத்தின் வெற்றி என்பது, முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழ் உறவுகளுக்கு நாம் செய்யும் உணர்வுக் காணிக்கையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

13 ஆகஸ்ட் 2010

பொன்சேகாவின் கட்சியைச் சேர்ந்த எம்.பிகள் இருவர் உட்பட 11 பேருக்கு விளக்கமறியல்!



ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹெரத் ,அஜித் குமார ஆகியோர் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் 11 பேரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்று காலி நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
காலியில் பொலிஸாருக்கும், தேசிய சுதந்திரக் கூட்டமைப்பினருக்கும் இடையில் நேற்று பின்னேரம் ஏற்பட்ட முறுகல் நிலையின் தொடர்ச்சியாகவே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் விடுதலையைக் கோரி ஜனநாயக தேசிய கூட்டமைப்பினர் காலியில் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது இம்முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
காலி பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸாரை தாக்கினர் என்கிற குற்றச்சாட்டின் பேரிலேயே இரு எம்.பிகளும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அகதிகள் கப்பலினுள் கனேடிய கடற்படையினர் ஏறி, விசாரணை.



490 இலங்கை அகதிகளுடன் கனடாவை அடைந்துள்ள 'எம். வி. சன் சீ ' கப்பலுக்குள் அந்நாட்டுக் கரையோர காவல் படையினர் பிரவேசித்துள்ளதாக கனேடியன் குளோப் அண்ட் மெயில் செய்தியில் தெரிவிக்கப்படுகிறது. கனேடிய கடற்படைக் கப்பலான எச்.எம்.சி.எஸ். வின்னிபெக், எம்.வி. சன் சீ கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தியதாகவும் இறுதியில் கப்பலில் அகதிகள் இருப்பதாக சன் சீ கப்பல் தெரியப்படுத்தியதாகவும் கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு விவகார அமைச்சர் விக் டோவ்ஸ் வியாழனன்று அறிவித்தார்.கனடாவின் பொருளாதார வலயத்துக்குள் சென்றுள்ள இந்தக்கப்பல் இன்று பிரிட்டிஷ் கொலம்பியாவை சென்றடையும் எனவும், அக்கப்பல் குறித்து கனடா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். கப்பலில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவென விக்டோரியாவில் வைத்தியசாலை ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.அக்கப்பலுக்கு அருகில் இருந்த மீன்பிடிக் கலத்தின் ஓட்டுநர் ஒருவரும் சன் சீ பற்றி கனேடியன் பிரஸுக்குத் தகவல் கொடுத்துள்ளார். தனது மீன்பிடிக்கலத்துக்குக் கிடைத்த வானொலி அலைகள் மூலம், அகதிகள் கப்பலினுள் பிரவேசித்துள்ள கனேடிய கடற்படையினர் அங்குள்ள அகதிகளை கேள்விகளால் துளைத்தெடுப்பதை அறியமுடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.எத்தனை பேருக்கு உடல்நிலை சரியில்லை, எத்தனை பேர் இறந்தார்கள், எத்தனை பெண்கள், எத்தனை சிறுவர்கள் போன்ற பத்தாயிரம் கேள்விகளை அவர்கள் கேட்பதாக அவர் மேலும் கூறியுள்ளார். இக்கேள்விகளுக்கு, "490 பேர் ஏறினார்கள், பின்னர் அது 480 ஆகியது, பின்னர் அது 450. ஒருவருமே இறக்கவில்லை. ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை"போன்ற பதில்களை அகதிகள் அளித்துள்ளனர்.இது இவ்வாறிருக்க, இக்கப்பலில் வருபவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டாம் என இலங்கையின் உயர்ஸ்தானிகர் கனேடிய அரசாங்கத்திடம் கோரியுள்ளார். கப்பல்கள் கனடாவை நோக்கி வருவதை நிறுத்த கனடா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒன்றன் பின்னொன்றாக பல கப்பல்கள் வரும் என்றும் அவர் கனடாவை எச்சரித்துள்ளாராம்.

12 ஆகஸ்ட் 2010

பரீட்சைக்குச் சென்ற மாணவி கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு.


கண்டியிலுள்ள பரீட்சை நிலையமொன்றில் பரீட்சைக்குத் தோற்ற வந்த மாணவி ஒருவர் வகுப்பறையில் கைகளும் வாயும் கட்டப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுb பின்னர் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் நேற்று கண்டியில் இடம்பெற்றுள்ளது. கண்டி பெண்கள் உயர் நிலைப் பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு பரீட்சை ஆரம்பித்து 45 நிமிடங்களின் பின் கண்டுபிடிக்கப்பட்டார். இது விவரம் தெரிய வந்ததும், மாணவி மீட்கப்பட்டு, பரீட்சை ஆணையாளரின் விசேட அனுமதியின் பேரில் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டார்.

சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது தி.மு.க. குண்டர்கள் தாக்குதல்!



சென்னை தியாகராய நகர் முத்துரங்கம் சாலையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் அரசியல் இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மாத இதழின் தலைமை அலுவலகம் இயங்கி வருகின்றது. நேற்று முன்தினம் இரவு(10.08.2010) அவ்விதழின் சுவரொட்டியை ஒட்டச் சென்ற இதழ் பணியாளர்கள் 2 பேர் மற்றும் அவர்களுடன் சென்ற இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், இதழின் ஆசிரியர் குழு உறுப்பினருமான க.அருணபாரதி ஆகியோர் மீது தி.மு.க. குண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.
“செம்மொழி மாநாடு செய்தது என்ன?” என்ற தலைப்பில் செம்மொழி மாநாடு குறித்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளரும், அவ்விதழின் ஆசிரியருமான திரு. பெ.மணியரசன் எழுதிய கட்டுரை, ”இந்தியாவே வெளியேறு” என்ற தலைப்பில் காசுமீர் மக்களின் போராட்டத்தை விவரித்து, க.அருணபாரதி எழுதிய கட்டுரை உள்ளிட்ட கட்டுரைகளின் தலைப்புகள் அவ்விளம்பர சுவரொட்டியில் இருந்தன.
10.08.2010 அன்று இரவு பத்திரிக்கை அலுவலகம் இயங்கி வந்த சாலையில், சுமார் 10.45 மணியளவில் இவ்விளம்பர சுவரொட்டியை இதழின் பணியாளர்கள் திரு. பாலா, திரு. நாகராஜ் ஆகியோர் ஒட்டிக் கொண்டிருக்க, திரு. அருணபாரதி உடன் சென்றிருந்தார்.
அப்போது அங்கு குடிபோதையில் வந்திருந்த சிலர், அவ்விளம்பர சுவரொட்டியை ஒட்டக் கூடாது என தகராறு செய்தனர். “செம்மொழி மாநாடு செய்தது என்ன?” என்ற தலைப்பை படித்து விட்டு ஒருவர், “எங்க தலைவன் மாநாடு நடத்துறார்.. நீங்க யாருடா கேள்வி கேட்க… உங்க வீட்டுல கலர் டி.வி. இருக்கா? இந்தியாவையே வெளியே போக சொல்றியா…” என்றபடி நாகராஜை தாக்க வந்தார். அதனை தடுக்க சென்ற அருணபாரதி, பாலா ஆகியோரை முதுகிலும், கழுத்திலும் அடித்தது அந்த கும்பல்.
சுவரொட்டி ஒட்டுவதற்காக தோழர்கள் கொண்டு சென்றிருந்த மிதிவண்டியை அக்கும்பல் வெறி கொண்டு தூக்கிக் கடாசியது. குடிபோதையில் இருந்த அந்தக் கும்பலில் ஒருவன் நிதானமிழந்து, அங்கு சாலையோரம் குழி வெட்டிக் கொண்டு பணிபுரிந்து கொண்டிருந்தவரிடம் மண்வெட்டியை பிடுங்கி நாகராஜை வெட்ட வந்தார். அருணபாரதி அதனை தடுத்த பின், சுவரொட்டிகளை அங்கேயே கிழித்தெறிந்து, பத்திரிக்கை அலுவலகம் நோக்கி அக்கும்பல் சென்றது. அலுவலகம் அந்நேரத்தில் மூடப்பட்டிருந்தது.
தி.மு.க. குண்டர்களின் இத்தாக்குதலை எதிர் கொண்ட தோழர்கள், இச்சம்பவம் நிகழ்ந்தவுடன், இரவு 11.30 மணியளவில் மாம்பலம் R1 காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தனர். இதழாசிரியர் பெ.மணியரசன், காவல் ஆய்வாளரிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு முறையிட்டார். புகாரை பெற்ற காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

11 ஆகஸ்ட் 2010

துன்னாலைப் பகுதியில் மயக்கமடைந்த நிலையில் இளம் பெண் மீட்பு!



யாழ்ப்பாணம்,துன்னாலைக் குடவத்தைப் பகுதியில் நேற்றுக் காலையில் மயக்கம் அடைந்திருந்த நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
துன்னாலை குடவத்தை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கு அருகில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இளம்பெண் ஒருவரின் அவலக் குரல் கேட்டுள்ளது.
எனினும் அப்பகுதி மக்கள் பயம் காரணமாக அங்கு செல்லவில்லை. இந்நிலையில் நேற்றுக் காலை நெல்லியடிப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் மயக்கமடைந்த நிலையில் இருந்த பிரஸ்தாப யுவதியை மீட்டு மந்திகை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப் பட்டார். யாழ். நகரத்தைச் சேர்ந்த பிரஸ்தாப யுவதி எவ்வாறு சம்பவ இடத்துக்குச் சென்றார் என்பது குறித்துப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

05 வருடங்களுக்கு முன் வெளிநாட்டில் இறந்தாரென நம்பப்பட்ட யாழ்.இளைஞன் போலந்தில் உயிருடன்!



சுமார் 05 வருடங்களுக்கு முன் வெளிநாடு ஒன்றில் இறந்திருக்கலாம் என்று குடும்பத்தினரால் நம்பப்பட்ட ஒரு தமிழ் இளைஞன் போலந்து நாட்டில் உயிரோடு இருக்கின்றார் என்று கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கோண்டாவிலை சொந்த இடமாகக் கொண்டவர் இ.தயாபரன்(வயது 32). அவர் சுமார் 10 வருடங்களுக்கு முன் பிரித்தானியா செல்கின்றமைக்கென நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றிருக்கின்றார். அவர் ஜேர்மனியூடாக சட்டவிரோதமான முறையில் செல்ல முயன்றிருக்கின்றார். ஜேர்மனியில் அகப்பட்டிருக்கின்றார்.
அவருடைய ஆவணங்களில் போலந்து நாட்டைச் சேர்ந்தவர் என்று பொய்யாக பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன போல் இருக்கின்றது. அவர் போலந்துக்கு நாடு கடத்தப்பட்டார். அவர் சுமார் 05 வருடங்களுக்கு முன்தான் குடும்பத்தினருடன் இடையிடையே தொலைபேசியில் உரையாடி வந்திருக்கின்றார். பின் தொலைபேசி உரையாடலும் இடம்பெறவே இல்லை.
இந்நிலையில் அவர் குறித்து எந்தத் தகவல்களும் வருடக் கணக்காகவே கிடைக்கப் பெறாமல் இருந்தமையால் குடும்பத்தினர் அவர் இறந்து விட்டார் என்றே கடந்த மாதம் வரை முடிவெடுத்து இருந்தனர். அவரைப் பற்றி யோசித்தே அவரின் தாயார் நிரந்தர நோயாளி ஆகி விட்டார்.
இந்நிலையில் இலங்கையின் மூத்த இராஜதந்திரிகளில் ஒருவரும், கட்டாருக்கான இலங்கையின் பிரதித் தூதுவருமான ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் விடுமுறையில் நாட்டுக்கு திரும்பி வந்திருந்த நிலையில் சொந்த இடமான யாழ்ப்பாணத்துக்கும் சென்றிருக்கின்றார்.
தர்மகுலசிங்கம் சிறந்த நிர்வாகி எனவும் மக்கள் தொண்டர் எனவும் பெயரை முத்திரை பதித்தவர். தர்மகுலசிங்கத்தை தயாபரனின் குடும்பத்தினர் எதிர்பாராத விதமாக சந்திக்க நேர்ந்தது.
அப்போது தயாபரனின் குடும்பத்தாரின் துன்பக் கதையை கவனமாக செவிமடுத்த தர்மகுலசிங்கம் என்ன நினைத்தாரோ தெரியாது... போலந்து நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அங்குள்ள சக இராஜதந்திரி ஒருவருடன் உரையாடினார்.
தயாபரன் குறித்து குடும்பத்தினரால் சொல்லப்பட்ட தகவல்களை அந்த இராஜதந்திரிக்கு ஒழுங்குமுறையாகக் கூறினார் . அந்த இராஜதந்திரியும் ஓரிரு நாட்களுக்குள் தகவல் வழங்குவார் என்று நண்பருக்கு வாக்குறுதி வழங்கினார். ஆனால் இவை நடந்து சுமார் மூன்று மணித்தியாலங்களின் பின் தர்மகுலசிங்கத்தின் கையடக்கத் தொலைபேசி ஒலித்தது.
தயாபரன் என்று தமிழ் இளைஞர் ஒருவர் உயிருடன் இருக்கின்றார் என்று சொல்லி போலந்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தினர் தர்மகுலசிங்கத்துக்கு தகவல் வழங்கினர். அத்துடன் தயாபரனை இரவில் தொடர்பு கொள்ளக் கூடிய கையடக்கத் தொலைபேசி இலக்கம் ஒன்றையும் வழங்கி இருந்தனர்.
இந்த நிலையில் விபரங்களை அறிந்து கொண்ட தயாபரனின் குடும்பத்தினர் மகன் உயிருடன் உள்ளார் என்பதை உறுதிப்படுத்துகின்றமைக்காக அன்று இரவே குறித்த தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பு மேற்கொண்டனர். மறுமுனையில் ஒருவரின் குரல் கேட்டது.
தயாபரனின் குடும்பத்தினருடைய காதுகளை நம்பவே முடியவில்லை. ஆம்.அந்நபர் அவர்களுடைய தயாபரன்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். அவர் போலந்தின் தலைநகர் பகுதியில் நலிந்தவர்களுக்கான இல்லம் ஒன்றில் வாழ்ந்து வருகின்றார்.
அவரை இலங்கைக்கு கொண்டு வருகின்றமைக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு, போலந்தில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆகியன பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அவர் திரும்பி வரும் பட்சத்தில் தாயின் நோய் ஒருவேளை குணமாகி விடும் என்று வைத்தியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

கிளிநொச்சி கனகபுரத்தில் கிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு.



கிளிநொச்சி, கனகபுரம் கோழிப்பண் ணைப் பகுதியில் வீட்டுக்கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் உருக் குலைந்த நிலையில் நேற்று நண்பகல் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.பாலசுப்பிரமணியம் நிமலன் (வயது 50) என்பவரது சடலமே மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவரு வதாவது:கனகபுரம் கோழிப்பண்ணையில் மீள் குடியமர்ந்த இந்த நபர் தனிமையில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களாக இவரைக் காணாத நிலையில் நேற்றைய தினம் கிணற்றில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலத்தை மீட்ட பொலிஸார் மரண விசாரணைகளுக்காக வவுனியா மருத்துவ மனைக்கு அனுப்பியுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

10 ஆகஸ்ட் 2010

தமிழரின் அவலங்களை அறிய ஆஸி அரசு முயலவில்லை! வேட்பாளரான யாழ்ப்பாணத் தமிழ் பெண் விமர்சனம்.



ஈழத் தமிழர்களின் பேரவலங்களைப் புரிந்து கொள்வதற்கு ஆஸ்திரேலிய அரசு போதுமான முயற்சிகளை எடுக்கவில்லை என்று எதிர்வரும் ஆஸ்திரேலிய செனற் சபை தேர்தலில் கிறீன் கட்சியின் சார்பாகப் போட்டியிடுகின்ற யாழ்ப்பாணத் தமிழ்ப் பெண் பிராமி ஜெகன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
அவர் அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அதில் முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:
லேபர் கட்சியின் சில எம்.பி மார் ஈழத் தமிழர்கள் மீது அனுதாபம் கொண்டுள்ளார்கள் தான்.
ஆனால் ஈழத் தமிழர்களின் பேரவலங்களை விளங்கிக் கொள்வதற்கு லேபர் கட்சி போதுமான முயற்சிகளை எடுக்கவே இல்லை. ஆகவேதான் இலங்கை அரசு தமிழருக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டிருக்கும் இன ஒழிப்பு நடவடிக்கைகளை ஆஸி அரசினால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது.
ஆகவேதான் ஆஸ்திரேலியாவுக்கு அரசியல் தஞ்சம் கோரி வரும் ஈழ அகதிகள் விடயத்தில் ஆஸி அரசு கடும் போக்கைக் கைக்கொள்கின்றது. இது அக்கட்சியின் தலைமைத்துவ மாற்றத்தால் சரி வரப் போகின்ற விடயம் அல்ல.
இலங்கை அரசினால் யுத்தத்தின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள் குறித்து சர்வதேச மட்டத்தில் விசாரணை நடத்த சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து ஆஸ்திரேலியா உரத்துக் குரல் கொடுக்க வேண்டும்.
அத்துடன் இலங்கையில் முட்கம்பி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை உடன் விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை அரசுக்கு பாரதூரமான நெருக்குவாரங்களைக் கொடுக்க வேண்டும்.
இவையே ஈழத் தமிழர்கள் இலங்கையில் அவர்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புகின்றமைக்கு உதவிகளாக அமையும். இலங்கையில் சமாதானம் கிடைக்க வேண்டுமானால் தமிழர்களுக்கு முதலில் நீதி கிடைக்க வேண்டும்

என்றார் அவர்.

09 ஆகஸ்ட் 2010

மாயாவுக்கு எதிரான சதியில் இலங்கை அரசு!



உலகின் முன்னணிப் பொப்பிசைப் பாடகர்களில் ஒருவரான புலம்பெயர் ஈழத் தமிழர் மாயா இலங்கை அரசு அவருக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கின்றது என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.
அவரின் வீடியோக்களை YouTube இல் இருந்து அகற்றி விட வேண்டும் என்று YouTube பாவனையாளர்களுக்கு இலங்கை அரசு கடுமையாக எச்சரித்து வருகின்றது என்றும் அவரின் வீடியோக்களை YouTube இல் இணைப்பவர்கள் பயங்கரவாதத்துக்கு உதவி, ஒத்தாசை வழங்கினர் என்கிற குற்றச்சாட்டில் சிறை வைக்கப்படுவர் என்று மிரட்டி வருகின்றது என்றும் அருட்பிரகாசம் மாதங்கி என்னும் சொந்தப் பெயர் உடைய மாயா பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 11 மாதங்களுக்கு மேலாக இலங்கை அரசினால் இந்நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகளில் ஒருவராகவே மாயா இலங்கை அரசினால் பார்க்கப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நோர்வேயில் புலிகளுக்கிடையில் மோதலென பி,பி,சி,தவறான செய்தி.


நோர்வே ஆலயத் திருவிழா ஒன்றில் ஏற்பட்ட சிறு மனஸ்தாபம் காரணமாக ஏற்பட்ட சம்பவத்தை பி.பி.சி சிங்கள சேவையானது மிகப்பெரிது படுத்தி தமிழ்ப் புலிகளுக்கு ஆதரவான குழுக்களிடையே சண்டை என்பதாகப் பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளதாக ஒஸ்லோ தமிழர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேற்படி சம்பவம் தொடர்பான நோர்வே ஊடகங்கள் போலீசாரின் சரியான அறிக்கையுடன் செய்தி வெளியிட்டிருந்த போதிலும், பி.பி.சி இல் இச்செய்தி பொருத்தமற்ற விதத்தில் அவை தனிப்படுத்திக்காட்டப்பட்டது. ஆனால் தமது கற்பனைகளுடன் தீங்கு விளைவிக்கும் விதமாக செய்தியை வெளியிட்டுள்ள பி.பி.சி தனது செய்திக்கு நோர்வே ஊடகங்களையும், போலீசாரையும் மேற்கோள் காட்டியுள்ளது. உண்ணாவிரதமிருந்த பரமேஸ்வரன் பர்கர் சாப்பிட்டார் என்ற பொய்யான செய்தியை வெளியிட்ட இரு பிரிட்டிஷ் பத்திரிகைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து அவ்வழக்கில் வெற்றியும் கிடைத்துள்ள நிலையில் பி.பி.சி தற்போது பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளமை தமிழர்கள் மத்தியில் ஆச்சரியத்தை உண்டு பண்ணியுள்ளது.மேற்படி சிறிய சம்பவத்தை நெடியவன் மற்றும் கே.பி ஆகியோரின் குழுக்களிடையே சண்டையென கற்பனை பண்ணி செய்தி வெளியிட்டமை ஆழ்ந்து ஆராயப்படவேண்டிய ஒன்று என்று நோர்வேத் தமிழர்கள் கூறியுள்ளதோடு, மேற்படி 'சண்டை' சனிக்கிழமை இரவு கிளம்பியதாகவும், காயப்பட்டவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சோடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர். ஆனால் இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமையே நடந்துள்ளது.காயப்பட்ட நபர் ஈழத் தமிழர்களின் நோர்வே பேரவை உறுப்பினர் எனக் கூறுவதன் மூலம், தேர்தல் மூலம் ஜனநாயக ரீதியில் தெரிவாகியுள்ள இந்த பேரவையானது புலிகளுக்குச் சார்பானது எனக் காண்பிக்க பி.பி.சி செய்தி நிறுவனம் முயற்சிக்கின்றது என்று ஈழத் தமிழர்களின் நோர்வே பேரவைத் தலைவர் பஞ்சகுலசிங்கம் கந்தையா கூறினார்.இதேவேளை ஈழத் தமிழர்களின் நோர்வே பேரவை என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட முன்னரே நெடியவன் அரசியல் செயல்பாடுகளை விட்டுவிட்டார் என்பதை நோர்வே அதிகாரிகள் நன்கு அறிவர். இவ்வாறாக பி.பி.சி ஆனது பொய்யான செய்திகளை வெளியிடுவது, போராட்டத்துக்கு எதிராக எழுதுபவர்கள் தமது எழுத்துக்களைத் தொடர்ந்தும் மேற்கொள்வதற்கான ஆதாரத்தையும், அங்கீகாரத்தையும் வழங்குகிறது என்பதையும் தமிழ் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.உண்மையில் இச்சம்பவமானது தமிழர் ஒருவர் தனது விலையுயர்ந்த காரைத் தாம் விரும்பிய ஒரு இடத்தில் நிறுத்த விரும்பியதாலேயே ஏற்பட்டது. கோவில் திருவிழா நிகழ்வுகளை ஒழுங்குபடுத்த உதவிய தொண்டர்கள் இதை அனுமதிக்காத காரணத்தாலேயே முரண்பாடு ஏற்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட கைகலப்பில் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளரான சிரேஷ்ட தொண்டர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது. காரில் இருந்த மூவரும் கூட தாக்கப்பட்டனர்.மேற்படி மூவரையும் ஒஸ்லோ போலீஸ் கைது செய்துள்ளது. இவர்களுக்கும் காயம் ஏற்பட்டிருந்தபோதும், சிறிய காயங்கள் மட்டுமே. ஒரு தொண்டருக்கு மட்டும் கத்திக் குத்து காயம் ஏற்பட்டதல் அவர் ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 அளவில் நடந்துள்ளது.ஆனால் இச்சம்பவங்கள் அனைத்தையும் பி.பி.சி சிங்கள சேவை திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளது.