14 டிசம்பர் 2012

தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவு நாள்!

தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 04.03.1938ம் ஆண்டு யாழ்பாணத்தில் குழந்தைவேலு மார்கண்டு தம்பதியினருக்கு பிறந்தார். ஆரம்பகாலத்தில் வீரகேசரியின் பத்திரிகையாளராக பணியாற்றிய அன்ரன் பாலசிங்கம் அவர்கள், பின்னர் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். பிரித்தானிய தூதரகத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றியதால் இங்கிலாந்து குடியுரிமையும் பெற்றார்.
1970ம் ஆண்டு தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய கெரில்லாப் போர் முறை குறித்த நூலை வாசித்த தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் தேசத்தின் குரல் அவர்களை தொடர்பு கொண்டதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கும் இடையே தொடர்புகள் எற்ப்பட்டுள்ளன.
இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு அரசியல் வகுப்புகளை நடாத்தினார். 1985ம் ஆண்டு திம்பு பேச்சுவார்த்தைக் குழுவுக்கு ஆலோசகராக செயலாற்றியதால் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராகவும்; பேச்சுவார்த்தையாளராகவும் அரசியல் ஆலோசகராகவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார்.
2002ம் ஆண்டு தமிழீழத்தில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊடகவியளாளர்கள் சந்திப்பின் பொழுது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான தெளிவான விளக்கங்களை அளித்தார்.
சித்திரை மாதம் 2002ம் ஆண்டு நோர்வே அரசின் மேற்பார்வையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சார்த்திடப்பட்டது. அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்தைக் குழுவின் பொறுப்பாளராக செயற்;பட்டார். தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களை தமிழீழ மக்களின் இராயதந்திரியென சர்வதேச நாடுகள் அங்கிகரித்தன.
2000ம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட வேளையிலும் ஆயுதம் ஏந்தாத போராளியாக இங்கிலாந்து நாட்டில் இருந்து உறுதியுடன் தமிழீழ விடுதலைக்காக உழைத்தார். அவருக்கு எற்ப்பட்ட நோயால் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. அதனால் அவருக்கு கொடுக்கப்பட்ட சக்திவாய்ந்த மருந்துகளின் பக்க விளைவாக உடல் எங்கும் புற்று நோய் பரவியது. புற்று நோயால் துடிதுடித்த வேளையிலும் தமிழீழ அரசியலை எவ்வாறு முன்னெடுக்க வேண்டுமென குறிப்புகளில் எழுதி வைத்தார். மேலும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் உடல் நலம் பற்றியும் தமிழீழ மக்கள் பற்றியும் கேட்டறிந்த வண்ணம் இருந்தார். கொடிய புற்று நோயால் 14.12.2006 அன்று இங்கிலாந்து தேசத்தில் வீரமரணம் அடைந்தார்.
தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு செய்த பணி என்றும் மறக்க முடியாதது. அவருடைய இழப்பை தமிழீழ தேசத்தால் என்றும் ஈடுசெய்ய முடியாது.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களைப் பற்றி இவ்வாறு கூறுகின்றார்: �எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கின்றது. ஒரு மூத்த அரசியல் போராளியாக மதியுரைஞராக ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தார். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர்.
எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, எனது பளுக்களையும் பங்கிட்டுக்கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும், வேதனைகளையும், சவால்களையும், சங்கடங்களையும் தாங்கிக்கொண்டவர். எமது அரசியல், இராயதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக முன்னால் நின்று செயற்பட்டவர். ஈழத்தமிழினம் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேச சுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன் நிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டபணிக்கு மதிப்பளித்து தேசத்தின் குரல் என்ற மாபெரும் கௌரவப் பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகின்றேன்.
எமது அன்பான தமிழீழ உறவுகளே, தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் போன்ற ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடைய தமிழீழக் கனவை வென்றெடுப்போம் என இன்றைய நாளில் நாம் அனைவரும் உறுதிகொள்வோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி
ஊடகப்பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக