13 டிசம்பர் 2012

அதிமுகவை விமர்சிக்க எந்த கட்சிக்கும் தகுதி இல்லை: நாஞ்சில் சம்பத்

மக்கள் நலனுக்காக பாடுபடும் அதிமுகவை விமர்சிக்க தமிழகத்தில் உள்ள எந்த கட்சிக்கும் தகுதி இல்லை என்று அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். மேலும் ஜெயலலிதாவின் அருமை, பெருமையை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பிரச்சாரம் செய்யப் போவதாக அவர் மேலும் தெரிவித்தார். மதிமுகவில் இருந்து விலகி அண்மையில் அதிமுகவில் சேர்ந்து அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரான நாஞ்சில் சம்பத் கலந்து கொண்ட முதல் கட்சி பொதுக்கூட்டம் சென்னை மைலாப்பூர் மாங்கொல்லையில் நேற்று இரவு நடந்தது. அந்த கூட்டத்தில் சம்பத் பேசியதாவது, அதிமுகவுக்கு நான் புதிதாக வந்திருக்கலாம். ஆனால் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும், தமிழக மக்களு்ககு நல்லது நடக்க வேண்டும் என்று 5 ஆண்டுகளாக மாநிலம் முழுவதும் சுற்றியவன் நான். தற்போது முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் மாட்சி, அவரது ஆளுமைத் திறன் பற்றி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்யவிருக்கிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று சரித்திரம் படைக்க எட்டுத் திக்கிலும் சூராவளிப் பிரச்சாரம் செய்வேன். தமிழகத்தின் உரிமைக்காகவும், தமிழக மக்களின் தேவைக்காகவும் தொடர்ந்து போராடும் முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் இருந்து உபரி மின்சாரத்தைப் பெற உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். பாகிஸ்தானுக்கு மட்டும் 5,000 மெகாவாட் மின்சாரம் அளி்க்கும் மத்திய அரசு டெல்லியில் இருந்து உபரி மின்சாரத்தை தமிழகத்திற்கு கொடுக்க மின் பாதை இல்லை என்கிறது. அதற்கு தமிழகத்திற்கு மின்சாரம் தர மனமில்லை. மேலும் காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுத்ததையடுத்து முதல்வர் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வழக்கு போட்டு போராடிக் கொண்டிருக்கிறார். டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி மின்சார வழங்க முதல்வர் தாயன்புடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். 20 கோடி விவசாயிகள் மற்றும் 5 கோடி வணிகர் பாதிக்கப்படுவார்கள் என்பதால் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா குரல் கொடுத்து வருகிறார். ஜெயலிலதாவின் அருமை, பெருமைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் எனது பிரச்சாரம் இருக்கும். இவ்வாறு மக்கள் நலனுக்காக பணியாற்றும் அதிமுகவை விமர்சிக்க தமிழகத்தில் உள்ள எந்த கட்சிக்கும் தகுதி இல்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக