03 டிசம்பர் 2012

"ஈழத்தமிழகம்"தமிழர்களை மீண்டும் கடுப்பேற்றிய கருணாநிதி!

ஈழத் தமிழர் விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் நிலைப்பாடுகள் பலராலும் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் "தமிழீழம்" என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் திடீரென "ஈழத் தமிழகம்" என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
ஈழத் தமிழர் பிரச்சனையில் காலந்தோறும் பயன்படுத்தப்பட்டு வரும் சொல் "தமிழீழம்" என்பதுதான். திமுக டெசோ மாநாடு நடத்துவதாக அறிவித்த போதுதான் "தமிழீழம்" என்ற சொல்லுக்கே பிரச்சனை வந்தது. "தமிழீழம்" என்பதே இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது என்று மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. இதைத் தொடந்து திமுக முன்னின்று நடத்திய டெசோ மாநாட்டில் அதாவது "தமிழீழ ஆதரவாளர்கள் மாநாட்டில்", "தமிழீழம்" என்ற சொல்லே இல்லாமல் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட்னா. அவற்றைத்தான் இன்றளவும் "டெசோ" தீர்மானங்களாக திமுக புகழ்ந்து வருகிறது.
தற்போதைய சூழலில் திமுக- காங்கிரஸ் உறவு பலப்பட்டுவிட்ட நிலையில் "தமிழீழம்" என்ற சொல்லையே பயன்படுத்த விரும்பாததைப் போல திமுக தலைவர் கருணாநிதி, "ஈழத் தமிழகம்" என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் 80-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பேசுகையில் "ஈழத் தமிழகம்" என்ற சொல்லையே பயன்படுத்தியிருக்கிறார். பொதுவாக தமிழ்நாட்டைத் தான் "தமிழகம்" என்று சொல்வது வழக்கத்தில் இருந்து வருகிறது. தற்போது கருணாநிதி, "ஈழத் தமிழகம்" என்று புது சொல்லை பயன்படுத்தியிருக்கிறார்.
"தமிழீழம்" என்ற சொல்லைத்தானே பயன்படுத்தக் கூடாது.. "ஈழத் தமிழகம்" என்று சொன்னால் ஒரு பாதுகாப்பாக இருக்கலாம் என்று அவர் கருதியிருக்கலாம். ஆனால் கருணாநிதியின் இந்த 'சொல் விளையாட்டு' என்பது "தமிழீழம்" என்ற உயரிய லட்சிய பயணத்தில் குழப்பம்தான் விளைவிக்கும் என்கின்றனர் ஈழத் தமிழர் ஆர்வலர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக