25 டிசம்பர் 2012

தமிழர்களின் அவலநிலை ஐநாவில் முன்னிலைப்படுத்தப்படும்!

இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில் அரசாங்கமானது சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. இத்தகைய போக்கு தொடருமானால் சர்வதேச ரீதியில் இலங்கை அந்நியப்படுத்தப்படும் சூழல் ஏற்படுவது நிச்சயமாகும்.
தமிழர்களின் அவலநிலை குறித்து மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவை அமர்வில் முன்னிலைப்படுத்தப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இனப்பிரச்சினை தீர்வுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்து வருகின்றது. ஆனால் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க விடயத்தில் பாராளுமன்ற தெரிவுக்குழு செயற்பட்ட விதம் குறித்து தற்போது சகலருமே அறிந்துள்ளனர்.
பிரதம நீதியரசருக்கே தெரிவுக்குழுவில் அநீதி இழைக்கப்படுகின்றதென்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கேற்றால் என்ன நடக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தெரிவுக்குழுவில் தமிழ் மக்கள் நியாயத்தை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து விட்டதாகவே கருதுகின்றது. சர்வதேசத்துக்கு காட்டுவதற்காக இனப்பிரச்சினை தொடர்பில் பேசுவதாக அரசாங்கம் கூறி வருகின்றது.
வடமாகாணத்தில் ஒன்றரை லட்சம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். ஆனால் அங்கு 15,100 இராணுவத்தினரே நிலைகொண்டுள்ளதாக இராணுவ கட்டளைத் தளபதி கூறுகின்றார். இராணுவப் பிரசன்னம் வடக்கில் அதிகரித்துள்ளதுடன் திட்டமிட்ட குடியேற்றங்களும், காணி அபகரிப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐநா மனிதஉரிமைகள் பேரவை கூட்டத்தில் ஏற்படவுள்ள நெருக்கடியை சமாளிக்கும் விதமாகவே அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. இனப்பிரச்சினை விவகாரமாகட்டும் நாட்டின் நீதித்துறையுடன் ஏற்பட்டுள்ள முரண்பாடு ஆகட்டும் அரசாங்கத்துக்கு சாதகமான வகையில் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்பதையே நாட்டின் தலைமை விரும்புகின்றது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பவர்கள் மற்றும் அதற்கெதிராக போராடுபவர்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாக இல்லை. அத்தகைய செயற்பாடுகளை ஜீரணிக்க முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது. பிரதம நீதியரசர் விவகாரத்தை எடுத்துக்கொண்டால் திவிநெகும சட்டமூலம் தொடர்பில் அவர் வழங்கிய நீதியான தீர்ப்பே அவருக்கெதிராக குற்றவியல் பிரேரணையினை கொண்டு வருவதற்கு வழி சமைத்திருந்தது. பிரதம நீதியரசர் சட்டத்துக்கு அமையவே செயற்பட்டார்.
பிரதம நீதியரசரை விசாரணைக்குட்படுத்திய தெரிவுக்குழு செயற்பட்ட விதத்தை இன்று அனைவருமே அறிவார்கள். பிரதம நீதியரசருக்கே இத்தகைய அநீதி இழைக்கப்படும் போது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேசுவதற்கு கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு சென்றால் எத்தகைய நிலை ஏற்படும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள முடியும்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அரைகுறையாகவும் அற்பசொற்ப அதிகாரங்களுடனும் காணப்படும் 13வது திருத்தச் சட்டத்தையும் இல்லாதொழிக்க முயலும் அரசாங்கத்தை எவ்வாறு நம்ப முடியும். சர்வதேசத்தை அரசாங்கம் ஏமாற்றுவதற்காகவே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில் அரசாங்கமானது சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. இத்தகைய போக்கு தொடருமானால் சர்வதேச ரீதியில் இலங்கை அந்நியப்படுத்தப்படும் சூழல் ஏற்படுவது நிச்சயமாகும்.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனிதஉரிமைகள் பேரவை மாநாட்டிலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டிலும் இலங்கை அரசாங்கம் நெருக்கடிகளை சந்திக்கும் நிலை ஏற்படும்.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் உண்மை முகம் குறித்து நாம் பல வழிகளிலும் எடுத்துக் கூறுவதற்கு முயல்வோம் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைகள் கூட இன்னமும் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. இத்தகைய நிலை தொடர்ந்தால் அரசாங்கம் தனிமைப்படுத்தப்படும் என்பது மட்டும் உண்மையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக