20 டிசம்பர் 2012

நிலம் உள்ளிறங்கி 60 அடி பள்ளம் திடீரென தோற்றம்!

திடீரென நிலம் உள்ளிறங்கி 60 அடிக்கும் மேலான பள்ளம் தோன்றியது. பெரிய மரங்கள் அதில் புதையுண்டன. மாத்தளை துங்கொலவத்தையிலுள்ள தொரகும்புர பகுதியிலேயே இந்த நில வெடிப்பு இடம் பெற்றுள்ளது.
சுமார் 25 அடி விட்டமும் 60 அடி க்கும் மேலான ஆழமும் உடைய குழி அங்கு தோன்றியுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த புவிச்சரிதவியல் திணைக்களத்தினர், ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியிலேயே வெடிப்பு இடம்பெற்றதால் உயிராபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை. பலா, கித்துள் போன்ற உயரமான மரங்கள் புதையுண்டுள்ளன.
2005 ஆம் ஆண்டிலும் இதுபோன்ற வெடிப்புக்கள் இடம்பெற்றதாகவும், நிலத்தடியில் உள்ள சுண்ணக்கற்களின் கசிவே முன்னர் நடந்த வெடிப்புக்குக் காரணமெனக் கண்டறியப்பட்டதாகவும், தற்போதும் இதே நிகழ்வே இடம்பெற்றிருக்கலாமெனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக