09 டிசம்பர் 2012

நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதி!

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, பிரெட்டோரியாவில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தியவர் நெல்சன் மண்டேலா.
இதற்காக 27 ஆண்டுகள் சிறைக்காவலில் இருந்த மண்டேலா, 1994-ம் ஆண்டு தென் ஆப்பிரக்காவின் ஜனாதிபதியாக பதவி ஏற்றார். தென் ஆப்பிரிக்க வரலாற்றில் ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் கறுப்பினத் தலைவர் மண்டேலா என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்தாண்டுகள் மட்டும் ஜனாதிபதியாக பதவி வகித்த மண்டேலா, அதன் பின்னர் பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற்று, தனது சொந்த கிராமமான குனு-வில் ஓய்வெடுத்து வந்தார்.
2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் உலக கால்பந்து போட்டி நடந்தபோது, கடைசி முறையாக பொது இடத்தில் தோன்றிய அவர், பூரண ஓய்வில் உள்ளார். அவரது உடல் நிலை குறித்து ராணுவ மருத்துவர்கள் அடிக்கடி சோதனை நடத்தி வைத்தியம் அளித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் நலமடைந்து வீடு திரும்பினார்.
கடந்த ஜீலை 18ம் திகதி, 94வது பிறந்த நாளை மண்டேலா கொண்டாடினார். மண்டேலாவின் உடல்நிலை குறித்து, கருத்து கூறிய தற்போதைய ஜனாதிபதி ஜேக்கப் ஜீமாவின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ´தென் ஆப்பிரிக்காவின் ஜனநாயக ஆட்சிக்கு வித்திட்ட எங்கள் தலைவரின் உடல்நலத்தை பேணி, பராமரிக்க அனைத்து உதவிகளும் செய்ய அரசு தயாராக உள்ளது.
அவரது உடல் நிலையில் கவலைக்கிடமாக எந்த பின்னடைவும் இல்லை. இது அவரது வயது சார்ந்த பிரச்சினை தான். அவர் விரைவில் பூரண நலமடைந்து விடுவார்´ என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக