01 டிசம்பர் 2012

தற்கொலை செய்ய முடிவெடுத்தவர்கள் பட்டினிப்போராட்டம் நடத்துவார்களா?சீமான் கேள்வி

தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தவர்கள் பட்டினி கிடந்து போராடிக் கொண்டிருப்பார்களா, பொய் வழக்கு போட்டு ஈழத்தமிழ்ச் சொந்தங்களை மிரட்டி வரும் பொலிஸ்துறைக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லையா? நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது:
பூந்தமல்லி, செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் சட்டத்துக்குப் புறம்பாகவும், மனிதாபிமானமற்ற வகையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள், தனிமைச் சிறையில் வாட்டும் தங்களை சாதாரண முகாம்களுக்கு மாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன் பல முறை பட்டினிப் போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.
அவ்வாறு போராடிய போதெல்லாம் அவர்களுடன் பேச்சு நடத்தும் மாவட்ட நிர்வாகிகளும், தமிழக காவல்துறையின் கியூ பிரிவு அதிகாரிகளும், உங்களை சிறப்பு முகாம்களில் இருந்து விடுதலை செய்கிறோம் என்று வாக்குறுதி அளித்து போராட்டத்தை முடித்து வைப்பார்கள்.
ஆனால், அதன் பின்னர் அவர்களை கண்டுகொள்வதில்லை. சிறப்பு முகாம்வாசிகளும் பொறுத்துப் பார்த்து பொறுமையிழந்து அதன் பின்னர் சாகும்வரை பட்டினிப் போராட்டம் அறிவித்து அதில் ஈடுபடுவார்கள்.
இது தொடர்கதையாக பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இப்போது பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 7 ஈழத் தமிழர்களில் பரமேஸ்வரன், தர்ஷன், பிரதீபன் ஆகிய மூன்று பேரும் கடந்த 23 ஆம் திகதியிலிருந்து ஒருவர் பின் ஒருவராக பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, விடுதலை செய்யாமல், அவர்கள் மீது தற்கொலைக்கு முயன்றனர் என்று கியூ பிரிவு பொலிஸ் வழக்கு பதிவு செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளது. இது உண்மைக்கும், நியாயத்துக்கும் எதிரான அடக்கு முறை நடவடிக்கையாகும் என்று செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக