07 டிசம்பர் 2012

இலங்கையை கண்டிக்க இலங்கை மண்ணே சிறந்தது"கனடிய பிரதமருக்கு ஆலோசனை

இலங்கைத்தீவில் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டு நேரடியாக இலங்கையைக் கண்டிப்பதா அல்லது முற்றாகவே மாநாட்டிற்குச் செல்லாமல் விடுவதா என்ற இரண்டு முடிவுகளில் எதை எடுப்பது என்பது குறித்து கனடியப் பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சிக்குட்படுத்தப்பட்டிருந்த ஐம்பத்து நான்கு நாடுகள் அங்கம் வகிக்கும் பொதுநலவாய நாடுகள் அவையின் முடிவெடுக்கும் திறன்வாய்ந்த நாடுகளாக நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, இங்கிலாநது, கனடா, இந்தியா, தென்னாபிரிக்கா என ஆறு நாடுகளே தலைமைத்துவ நிலையில் இருக்கின்றன. இதில் கனடா கலந்து கொள்ளாமல் விடுமிடத்து ஒரு பாரிய “தலைமை” வெற்றிடம் ஏற்படும் என்பதோடு கனடா குறித்த ஏனைய நாடுகளின் பார்வையும் மாறுபட வாய்ப்பிருக்கிறது.
இந்நிலையில் 2013ம் ஆண்டில் கொழும்பில் இடம்பெறவிருக்கும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கலந்து அங்கு வைத்து கண்டனம் தெரிவிப்பது ஒரு சிறந்த வழியாக இருக்கும் என்பதைப் பிரதமரே பரிசீலனைக்கு விட்டுள்ளதாகத் தெரியவருகிறது. தனது கட்சி சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் குழுவிடமும் எந்த முடிவு நன்மை பயக்கும் என்பதை அறிவுறுத்துமாறு வேண்டியுள்ளார்.
இவ்விடயம் குறித்து கனடியப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள கனடிய தமிழர் கண்சவேட்டிவ் அமைப்பு, www.constam.ca இலங்கையின் தமிழர் பகுதிகள் யாவும் இராணுவ முகாம்கள், தளங்கள் என்றில்லாமல்; இராணுவ நகரங்களாகவே மாற்றப்பட்டு சிங்கள இராணுவத்தினர் யதார்த்தத்திற்குப் புறம்பாக குடியமர்த்தப்படுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், அவர்களிற்கான சிங்களப் பாடசாலை, விகாரை என்பனவும் தமிழர்களின் நிலங்களில் அமைக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளதுடன்,
போரின் பின்னரான புரிந்துணர்வு தமிழர்களிற்கும் சிஙகள அரசிற்குமிடையே ஏற்படாதததற்கு சிங்கள அரசின் தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக நடாத்தும் செயல்களே முதன்மை காரணியென்றும், தற்போது உயர் கல்விப்பீடங்கள், பல்கலைக்கழகங்கள் மீது சிறீலங்கா நடத்தும் தாக்குதல்கள் இதற்கு முன்னுதாரணம் என்றும் தெரிவித்து,
தமிழர்களிற்கு நீதி வழங்கப்படாததைச் 54 நாடுகளின் முன் சுட்டிக்காட்டும் சந்தர்ப்பத்தை இம் மாநாடு கனடியப் பிரதமருக்கு வழங்கும் என்பதையும், இம் மாநாட்டில் இலங்கையை பொதுநலவாய நாடுகளிலிருந்து ஒதுக்கும் தீர்மாணத்தை கனடா கொண்டு வரலாம் என்றும், முன்னர் பாகிஸ்தான் ஒதுக்கப்பட்டதைப் போன்று சிறீலங்காவும் ஒதுக்கப்படுவதற்கு ஆதாரத்தகவல்கள் நிறையவே உள்ளன எனத் தெரிவித்து எனவே,
54 நாடுகள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கையை அதன் மண்ணிலேயே நின்று கண்டிப்பதே மனிதவுரிமைகளை மதிக்கும் கனடாவிற்கு உகந்த செயற்பாடென கனடிய தமிழர் கண்சவேட்டிவ் அமைப்பு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக