04 டிசம்பர் 2012

கூட்டமைப்பை அவசரமாக அழைக்கிறார் மகிந்த!யாழில் நடைபெறவுள்ள போராட்டங்களை குழப்பும் சூழ்ச்சியா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அவசர சந்திப்பொன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார். இதற்கான அழைப்பு நேற்று திங்கட்கிழமை கூட்டமைப்பிற்கு விடுக்கப்பட்டுள்ளது.
இடையில் நின்று போயிருக்கும் அரசியல் தீர்வு முயற்சிகள் தொடர்பில் சர்வதேச சமூகம் அழுத்தங்களைக் கொடுத்து வரும் ஒரு சூழ்நிலையில், அரசியல் தீர்வுப் பேச்சுகளை உடனடியாக முன்னெடுப்பது குறித்து ஜனாதிபதி இந்தச் சந்திப்பின்போது சில யோசனைகளை முன்வைக்கும் சாத்தியம் இருப்பதாக அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதம நீதியரசர் விவகாரத்தினால் சர்வதேச மட்டத்தில் அரசு நெருக்குவாரங்களைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில், இனப்பிரச்சினைத் தீர்விலும் இழுத்தடிப்பைச் செய்யாமல் முன்னோக்கிச் செல்ல உத்தேசித்து ஜனாதிபதி இந்த அவசர சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கலாம் என்று அரச தமிழ்க் கூட்டமைப்பு பேச்சுக்குழுவின் உறுப்பினரொருவர் தெரிவித்தார்.
அதேவேளை யாழ். பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இன்று யாழில் ஏற்பாடு செய்துள்ள கண்டனப் போராட்டத்தை குழப்புகின்ற நோக்குடனேயே இந்த அழைப்பை ஜனாதிபதி விடுத்திருக்கலாம் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, ஜனாதிபதியிடமிருந்து வந்த அழைப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாகப் பதில் எதனையும் தெரிவிக்கவில்லை. தமிழ்க் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் கொழும்பில் இல்லாத காரணத்தினால் அவர்கள் கொழும்பு திரும்பியதும் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான நாள் தீர்மானிக்கப்படுமெனத் தமிழ்க் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக