13 டிசம்பர் 2012

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் அவதூறுக் கருத்துக்களுக்கு அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை கண்டனம்.

News Serviceதமிழ்த் தேசியத்தை இழிவுபடுத்தும் வகையிலும் தமிழீழ விடுதலைப் பயணத்தைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் அண்மையில் தெரிவித்த கருத்துகளை அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை வன்மையாகக் கண்டிக்கிறது.
இது தொடர்பாக பின்வரும் அறிக்கையை அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை விடுத்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் கடந்த சில மாதங்களாக தமிழர்களின் விடுதலைப் பயணம் தொடர்பாகவும் அவர்களின் நிகழ்கால அவலங்கள் தொடர்பாகவும் தெரிவித்துவரும் உண்மைக்குப் புறம்பான கருத்துகள் தமிழ் மக்களைத் தொடர்ந்து வேதனைக்குள்ளாக்கி வருவதோடு இவரது செயற்பாடுகள் தொடர்பாகப் பல சந்தேகங்களையும் ஏற்படுத்தி வருகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தேசிய விடுதலைப் பயணத்துக்கு உறுதுணையாக செயற்படுவதற்காக தமிழ் தேசியத் தலைமையால் உருவாக்கப்பட்டது. இது தனி ஒருவரது சொத்தல்ல. இதில் உள்வாங்கப்பட்டவர்கள் அதற்கான உறுதிமொழியை தேசியத் தலைமை முன்னிலையில் வழங்கியவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் தேசியத் தலைமை மௌனிக்கப்பட்டுள்ள வேளையில் அதைனைத் தமக்குச் சாதகமாக்கியுள்ள தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் தமிழின படுகொலைக்காக போர்க்குற்றத்தை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு துணை போவதைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது.
விடுதலைப் புலிகள் மீது தம்மால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் பதிலளிக்க முடியாத நிலையில் இருப்பதைத் தெரிந்துகொண்டும் அதனையே தமது சொந்த அரசியலுக்கான ஆதாய ஆயுதமாக சம்பந்தன் பயன்படுத்துவது தமிழ்த் தேசியத்துக்கு இழைக்கப்படும் துரோகமாகவே பார்க்கப்படுகின்றது.
சிங்கக்கொடி ஏந்தியதை நியாயப்படுத்தி அதனை எவராலும் தடுக்க முடியாது என்று சம்பந்தன் கூறியபோதே அவரது இரட்டை முகம் அம்பலமானது.
வடக்கிலுள்ள ராணுவ முகாம்களை மூடுமாறு தாம் ஒருபோதும் கேட்கவில்லை என்றும் விடுதலைப் புலிகளின் அழிவு அவர்களினாலேயே நிகழ்த்தப்பட்டது என்றும் திரு. சம்பந்தன் அவர்கள் இப்போது கூறுவது தமிழ் மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மஹிந்த அரசின் தமிழினப் படுகொலையை விசாரிக்க சர்வதேச அமைப்புகளும் புலம்பெயர்ந்த தமிழர்களும் முயற்சி மேற்கொண்டுவரும் இவ்வேளையில் அதனை முறியடித்து சிங்கள அரசுக்கு முண்டு கொடுக்க திரு. சம்பந்தன் அவர்கள்; முயலுவதை இதனூடாகக் காணமுடிகின்றது.
இவ்வாறு செயற்படும் ஒருவர் தமிழினத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பதற்குத் தகுதியானவரா என்ற கேள்வி இப்போது எம்முன்னால் எழுகின்றது.
தமிழ் தேசியத்தின் குரலாக கூட்டமைப்பினர் இருப்பார்கள் என்ற நம்பிக்கையிலும் தேசியத் தலைமையினால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பைப் பலமாக்க வேண்டுமென்ற தேவையையும் கருதியே கடந்த தேர்தல்களில் தங்களின் பிரதிநிதிகளாக கூட்டமைப்பினரைத் தமிழ் மக்கள் தெரிவு செய்தார்கள் என்பதை திரு. சம்பந்தன் அவர்கள் மறந்துவிடக் கூடாது.
இதற்கு எதிர்மாறான தமது சொல்லுக்கும் செயலுக்கும் திரு. சம்பந்தன் அவர்கள் பகிரங்கமாக மன்னிப்புக்கேட்க வேண்டும். அதனை விரும்பாவிடின் தலைமைப் பதவியிலிருந்து தாமாகவே அவர் விலகிவிட வேண்டும் என்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை வேண்டுகின்றது.
தமிழ் மக்களின் அரசியல் வேணவாவை அதி உயர் ஆணையாக ஏற்று உறுதியோடு செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று திரு சம்மந்தனின் உரைக்கு பின்னர் தாயகத்தில் மற்றும் புலத்தில் இருக்கும் தமிழ் மக்களுக்கும் தமது அரசியல் நிலைப்பாட்டை விளக்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருப்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

பஞ்சகுலசிங்கம் கந்தையா
ஊடக பேச்சாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக