11 டிசம்பர் 2012

அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தப்போவதாக எனக்கு மிரட்டல்-மகிந்த

சிறிலங்கா அதிபர் பதவியில் இருந்து விலகியதும், தன்னை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தப் போவதாக வெளிநாட்டவர் ஒருவர் மிரட்டி வருவதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“எந்த உயர்பதவியில் இருப்பவராக இருந்தாலும், தவறிழைத்தால் அவர் தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டும்.
அதற்கு ஒரு முறைமை உள்ளது, அதன்படியே நாம் செயற்படுகிறோம்.
நான் தவறிழைத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களால் எனக்கெதிராக குற்றவியல் பிரேரணையைக் கொண்டு வர முடியும்.
அவ்வாறு இடம்பெற்றாலும் என்னால் அப்போது நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது.
அரசியலமைப்பின்படி அவ்வாறு என்னால் செய்ய முடியாது.
எதற்கும் ஒரு சம்பிரதாயம், சட்டம், முறைமை என உள்ளன. அதனை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம்.
தலைமை நீதியரசர் விவகாரத்திலும் அவ்வாறே செய்யப்படுகிறது.
நாம் இப்போது பல்வேறு தடைகள், அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலிகள் எனக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர்.
நான் குற்றவாளி என்றும் எனக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் முழக்கம் எழுப்புகின்றனர்.
நான் ஒரு ஐந்து, பத்து ஆண்டுகள் அல்லது இருபது ஆண்டுகளோ தான் பதவியில் இருக்க முடியும்.
அதன் பின்னர் என்னை அனைத்துலக நீதிமன்றத்தின் முன்நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டவர் ஒருவர், பரப்புரை செய்து வருகிறார்.
இது பிரபாகரனை நான் கொன்றமைக்காகவாம். இதுதான் தற்போதைய நிலை.
ஒரு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாட்டில் தற்போதுள்ள பிரச்சினை தொடர்பில் கொமன்வெல்த்துக்கு அறிவித்து, அங்கிருந்து ஒரு விசாரணைக் குழுவை அனுப்ப வேண்டும் என்று கடித மூலம் கோரியுள்ளார்.
ஏனென்றால், அடுத்த ஆண்டு இறுதியில் சிறிலங்காவில் கொமன்வெல்த் மாநாடு நடைபெறவுள்ளது.
அப்போது அதன் தலைமைத்துவம் இரண்டு வருடங்களுக்கு எனக்குக் கிடைத்து விடும்.
அதனைத் தடுப்பதற்காகவே இந்தக் குரோத மனப்பாங்குடன் செயற்படுகின்றனர்.
இப்போதிருந்தே அதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
இத்தகையவர்கள் தமது நாடு, மக்கள், நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக அல்லாமல் மக்கள் நலனுக்காக செயற்பட வேண்டியது அவசியம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக