29 டிசம்பர் 2012

மாணவி மரணம் எதிரொலி டில்லியில் பதற்றம்!

பாலியல் கொடுமைக்குள்ளான மாணவி சிங்கப்பூரில் மரணமடைந்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்க 10 மெட்ரோ ரயில் நிலையங்களும் இந்தியா கேட் செல்லும் சாலையும் மூடப்பட்டுள்ளன. டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கடந்த 10 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி உயிரிழந்தார். இதனால் டெல்லியில் போராட்டம் தீவிரமடையக் கூடும் என்று கருதி சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ராஜபாதை, இந்தியா கேட் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இந்தியா கேட்டை சுற்றிய 10 மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டிருக்கின்றன. பாதுகாப்புக்காக துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி ஜந்தர் மந்திர் மற்றும் ராம்லீலா மைதானத்தில் அமைதிவழியிலான போராட்டங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே மாணவியின் மரணத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் தமது இரங்கல் செய்தியில், தமது வாழ்வைக் காப்பாற்ற இறுதிவரை துணிச்சலுடன் போராடிய அந்த மாணவியை இழந்துவாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மாணவி இந்திய இளைஞர்களின் துணிச்சலின் அடையாளமாக திகழ்வார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.இந் நிலையில் மரணமடைந்த மாணவிக்கு டெல்லியில் பொதுமக்கள் அமைதியான முறையில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜந்தர் மந்தர் பகுதியில் கூடியுள்ள மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியும், அமைதியாக அமர்ந்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வன்கொடுமைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான பள்ளிச் சிறுமிகளும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக