
தமிழீழ போராட்டத்தின் தீவிர ஆதரவாளரும், அவுஸ்திரேலியாவின் மனித உரிமைகள் நடவடிக்கையாளருமான இலங்கையில் பிறந்த கலாநிதி பிரைன் செனவிரட்னவை சிங்கப்பூர் அரசாங்கம் நாடு கடத்தியது. 81 வயதான பிரைன் செனவிரட்ன, மலேசியாவுக்கு செல்லும் வழியில் கடந்த வெள்ளிக்கிழமை சிங்கப்பூருக்கு சென்றிருந்தார். அங்கு மலேசியாவில் இலங்கையர்களின் அரசியல் அடைக்கலம் குறித்து இரண்டு சந்திப்புகளை நடத்தவிருந்தார். இந்த நிலையில் சிங்கப்பூரின் விமானநிலையத்தில் இறங்கிய அவர் மலேசிய நகரான ஜொஹொர் பஹ்ருக்கு தரைவழியாக செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். எனினும் சிங்கப்பூரின் அதிகாரிகள், அவரை விமான நிலையத்தில் சுமார் 4 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்தினர்.
பின்னர், அவரை, அவுஸ்திரேலிய பிரிஸ்பேனுக்கு விமானம் மூலம் திருப்பியனுப்பினர். இதன்போது செனவிரட்னவிடம் குறிப்பு ஒன்றை கையளித்த சிங்கப்பூர் அதிகாரிகள், சிங்கப்பூரில் பிரவேசிப்பதற்கு அனுமதியில்லை என்று குறிப்பிட்டனர். எனினும் காரணங்கள் எதனையும் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து தமக்கு நேர்ந்த நிலைக்குறித்து பிரைன் செனவிரட்ன, அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மற்றும் குடிவரவு அமைச்சர் கெவின் ருட் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். பிரைன் செனவிரட்ன 1976 ம் ஆண்டு அவுஸ்திரேலிய பிரஜாவுரிமையை பெற்றுக்கொண்டவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக