10 டிசம்பர் 2012

ஜனநாயக வழியில் போராடியவர்களுக்கு புனர்வாழ்வளிக்கவும் ஏற்பாடு?

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களுள் நால்வரை குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சிக்க வைக்க முழு அளவினில் முயற்சிகள்இடம்பெற்று வருவதாக இன்று காலை கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாணவர் சங்கத்தின் இரண்டு உறுப்பினர்களான சண்முகம் சொலமன் (24) கனகசுந்தரம் ஜெனமஜெந்த் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்சனன் (24)ஆகியோருடன் மாணவர் ஒன்றிய தலைவர் பவானந்தன் ஆகியோரையே சிக்க வைக்க முயற்சிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் மூலம் பல்கலைக்கழக சமூகத்திற்கு பாடம் படிப்பிக்கவும் முற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனடையே இறுதியாக ஒப்படைக்கப்பட்ட மருத்துவ பீட மாணவர்கள் ஜவரையும் அதே போன்று பெற்றோர் மற்றும் பீடாதிபதிகள் சகிதம் சரணடைந்த மாணவர்களில் மாணவர் ஒன்றிய தலைவர் பவானந்தன் தவிர்ந்த ஏனைய அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் தெரியவருகின்றது. முன்னதாக இம்மாணவர்களுள் சிலர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைய முற்பட்டிருந்த போதும் அலுவலகம் திறக்கப்பட்டிராமையால் நேரில் வவுனியா சென்று சரணடைந்ததாக தற்போது தெரிய வந்துள்ளது.
அதே வேளை கடந்த சனிக்கிழமை யாழ் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் அங்கு நிறுவப்பட்டுள்ள பொங்கு தமிழ் பிரகடனப்பலகை மற்றும் மாவீரர் நினைவுத் தூபிகளை படம் பிடித்துள்ளதுடன் கடந்த 27 மற்றும் 28ம் திகதிய சம்பவங்கள் தொடர்பாக காவலர்களிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்து சென்றுள்ளனர்.
இதனிடையே ஜனநாயக வழியில் போராடிய மாணவர்களை புனர்வாழ்வளிக்க வேண்டிய தேவையென்ன என கேள்வி எழுப்பியுள்ள மாணவர் சமூகம் அனைவரும் விடுவிக்கப்படும் வரை போராட்டத்தை விலக்கிகொள்ளும் பேச்சிற்கே இடமில்லையென உறுதிபட தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக