07 டிசம்பர் 2012

என்னைக்கொல்ல பலமுறை அரசு முயற்சித்துள்ளது உண்மை-சிவாஜிலிங்கம்

இலங்கை அரசு தன்னைக் கொல்ல பலமுறை முயற்சி எடுத்தது எனவும், எனவே தற்போது கனடாவில் அகதிக் கோரிக்கை சமர்ப்பித்துள்ள இராணுவ அதிகாரி தன்னைப் பற்றித் தெரிவித்துள்ள கூற்றுக்கள் உண்மையாக இருக்கலாம் எனவும் சிவாஜிலிங்கம் கனடிய ஊடகமொன்றிற்குத் தெரிவித்துள்ளார். கனடாவில் அகதிநிலை கோரியுள்ள கப்டன் ரவீந்ரா வதுடுரா பண்டனகே என்ற இலங்கை இராணுவ அதிகாரி தனது உயரதிகாரியான கேணல் அத்தபத்து தன்னை சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்குக் குண்டு வைக்குமாறு கேட்டதாகவும் ஆனால் தான் அவ்வாறு செய்யவில்லையென்றும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக நசனல் போஸ்ட் என்ற இந்தப் பத்திரிகைக்குக் கருத்துத் தெரிவித்த முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம், இந்த இராணுவ வீரர் சொல்வதை தன்னால் நம்ப முடிவதாகவும், இறுதி யுத்தத்தின் போது மூன்று முறை தன்னை அரசு கொல்ல முனைந்ததாகவும் அதிலொரு தடவை கிளைமோர் குண்டொன்றின் மூலம் தன்னைக் கொல்ல முயன்றதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தான் 2008ம் ஆண்டு இறுதிப்பகுதியில் நாட்டை விட்டு வெளியேறி போர் முடிந்த பின்பு நாடு திரும்பியதாகத் தெரிவித்துள்ள சிவாஜிலிங்கம்,போரின் போது வேறு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி இந்த இராணுவ வீரர் சொல்வது உண்மையாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக