15 டிசம்பர் 2012

மாணவர்களின் பெற்றோரையும் சந்திக்கவேண்டி இருக்கிறது:கோத்தாவின் மிரட்டல்

மாணவர்கள் மீது காடைகள் அராஜகம் 
வெலிகந்தை புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரும் விசாரணைகளுடனான புனர் வாழ்வுக் காலம் நிறைவடைந்த பின்னரே விடுவிக்கப்படுவர் என கோத்தபாய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ். பல்கலைக்கழகத்தில் இவ்வாறான நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடுவதற்கு நிர்வாகம் அனுமதுயளிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ள கோத்தபாய  தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர்களையும் சந்திக்க வேண்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களின் விடுதலை தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் கோத்தபாயவுக்கும், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்வி.வசந்தி அரசரட்ணம் தலைமையிலான பேராசிரியர்கள் குழுவுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போதே கோத்தா  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேற்படி சந்திப்பில் கலந்து கொண்ட பேராசிரியர் குழுவினர், தமது மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால் அவர்களது கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே அவர்களை விடுவிப்பதற்கு ஆவண  செய்யுமாறும் கோத்தபாயவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
எனினும் கைது செய்யப்பட்ட மாணவர்களிடமிருந்து பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருப்பதால் மேலதிக விசாரணைகள் இடம்பெற இருப்பதாகவும், அத்துடன் புனர்வாழ்வு அளிக்கப்பட்டதன் பின்னரே அவர்கள் விடுதலை செய்யப்படுவர் என்றும் கோத்தா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளர்.
அத்துடன் மாணவர்கள் இனியும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு இடம்பெற்றால் நிர்வாகத்தின் ஆதரவுடனேயே இத்தகைய செயல்கள் இடபெறுவதாகக் கருதப்படும். மேலும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டதன் பின்னர் விடுதலை செய்யப்படும் மாணவர்கள் நிர்வாகத்தின் பொறுப்பிலேயே விடப்படுவார்கள் இதன் பின்னரும் ஏற்கத்தகாத செயல்கள் இடம்பெறின் பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்புக் கூற வேண்டி ஏற்படும் எனவும் பேராசிரியர் குழுவுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக கலைப் பீடத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும், முகாமைத்துவ பீடத்தைச்ச் சேர்ந்த ஒரு மாணவரும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவருமாக நான்கு மாணவர்களே வெலிகந்தை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக