01 டிசம்பர் 2012

இராணுவம் பற்றி கனடாவில் முன்னாள் கப்டன் சொன்னது யாவும் பொய்யென சிறீலங்கா மறுப்பு

இராணுவம் தமிழர்களை சித்திரவதை செய்ததாக முன்னாள் கெப்டன் முன்வைத்த கருத்துக்கு மறுப்புதமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் மற்றும் மீறல்கள் குறித்த தகவல்களை, கனேடிய அதிகாரிகளிடம் வெளியிட்டுள்ள இலங்கை இராணுவ கெப்டன் ரவீந்திர வடுதுர பண்டாரகே ஒரு மோசடிப் பேர்வழி என இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை இராணுவத்தினரால், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்தும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் வீட்டில் குண்டு வைக்குமாறு தான் மேலதிகாரியால் பணிக்கப்பட்டதாகவும், கெப்டன் வடுதுர பண்டாரகே கனேடிய அதிகாரிகளிடம் கூறியிருந்தார்.
இதுபற்றிய தகவல்கள் நேற்று கனடாவின் நெசனல் போஸ்ட் நாளிதழில், வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கை பாதுகாப்பு அமைச்சு இன்று (01) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையிலேயே, கெப்டன் வடுதுர பண்டாரகே ஒரு மோசடியான நபர் என்றும், தனது புகலிடக் கோரிக்கையை கனடிய அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதற்காக பொய் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தற்காப்புக்கலைஞரான இவர் உள்ளூரிலும் அனைத்துலக அளவிலும் நடைபெறும் போட்டிகளில் இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, 1993ம் ஆண்டில் ஒரு 2வது லெப். அதிகாரியாக சேர்த்துக் கொள்ளப்பட்டதாகவும் சர்ச்சைக்குரிய ஒரு அதிகாரியாகவே இருந்து வந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மனிதாபிமானப் போரின்போது அவர் போர் நடந்த பிரதேசங்களுக்கு அண்மையில் எங்குமே சென்று பணியாற்றவில்லை எனவும் 2006 தொடக்கம் அவர் தப்பிச்செல்லும் வரை, கொழும்பைச் சுற்றிய பகுதிகளிலேயே பணியாற்றியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் குண்டுவைக்குமாறு தனக்கு ஒரு கேணல் உத்தரவிட்டதாக இவர் கூறியுள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அப்படி எதுவும் நடக்கவேயில்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கெப்டன் ரவீந்திர வடுதுர பண்டாரகே என்ற 38 வயதுடைய இந்த இலங்கை படை அதிகாரி 2009 ஒக்ரோபரில், இராணுவத்தில் இருந்து ரொரன்டோவுக்குத் தப்பிச்சென்றார்.
சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசுப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள், குற்றச்செயல்கள் குறித்து தனக்குத் தெரியும் என்று கனேடிய குடிவரவு அதிகாரிகளிடம் இவர் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வீட்டில் குண்டுஒன்றை வைக்குமாறு தனக்கு கேணல் தர அதிகாரி ஒருவர் உத்தரவிட்டதாகவும் தனது புகலிடக் கோரிக்கை தொடர்பான விசாரணையின் போது, இவர் கூறியுள்ளார்.
தான் அதற்கு மறுத்ததால், கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், அங்கு தமிழர்களைச் சுற்றிவளைக்கும் தேடுதல்களுக்கு உதவியதாகவும் கெப்டன் ரவீந்திர வடுதுர பண்டாரகே தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தினர் பொதுமக்களை சித்திரவதை செய்தது, தாக்கியது, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியது குறித்து தனக்குத் தெரியும் என்றும் அவர் சாட்சியமளித்துள்ளார்.
“மக்களுக்கு இழைக்கப்பட்டது கொடுமை என்பதை ஒத்துக் கொள்கிறேன். நான் அதை ஒப்புக் கொள்கிறேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்துக் கருத்து வெளியிட்ட சர்வதேச மன்னிப்புச்சபையின் இலங்கைக்கான கனேடிய ஒருங்கிணைப்பாளர் ஜோன் ஆர்கியூ “இது முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். ஆயுதமோதலின் இறுதிக்கட்டத்தில் என்ன நடந்தது என்றும், பொறுப்புக்கூறுதல் குறித்தும் இது பகிரங்க விவாதங்களை ஏற்படுத்தும் என்றும் நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக