05 ஜூலை 2011

தமிழர்களை அடக்க நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்திய அரசு தீர்வுக்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைப்பது ஏன்?

கடந்த காலங்களில் தமிழர்களை அடக்குவதற்கு தன்னுடைய நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்திய ஜனாதிபதி தமிழர்களுக்கான அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு மட்டும் தெரிவுக் குழுவை அமைத்து காலத்தை இழுத்தடிக்க முனைவது ஏன்? என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கேள்வி எழுப்பினார்.
இன்றைய தினம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் இனப்பிரச்சினைக்கான தெரிவுக்குழு அமைக்கப்படவுள்ளது குறித்து எமது செய்தியாளர் கேட்டபோதே மேற்படி தெரிவித்தார்.அவர் தொடர்ந்து கூறுகையில், இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான 31பேர் கொண்ட தெரிவுக்குழு அமைக்கப்படவுள்ளதாக அறிகின்றோம்.மேற்படி தெரிவுக்குழு காலத்தை இழுத்தடிக்கும் நடவடிக்கையாகும் இது போன்ற தெரிவுக் குழுக்களை கடந்த 61வருடங்களாக தமிழர்கள் பார்த்திருக்கிறார்கள், பேசியிருக்கிறார்கள், ஆனால் இதுவரை நடந்தது ஒன்றுமில்லை.
இதுபோன்ற எத்தனை குழுக்களை அமைத்தாலும் தமிழர்களின் உரிமைகளை இலங்கை அரசு தரப்போவதில்லை மாறாக காலத்தை இழுத்தடித்து சர்வதேசத்தையும் தமிழர்களையும் ஏமாற்றுவதற்கே இந்த தெரிவுக் குழு அமைக்கப்படுகின்றது.தமிழர்களை அடக்கி ஆட்சி செய்வதற்கு நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்திய ஜனாதிபதி தமிழர்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு மட்டும் ஏன் தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்த முடியாது. இந்தியாவின் அழுத்தத்தையும் மீறி தெரிவுக்குழு அமைக்கும் ஜனாதிபதியின் முடிவு தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதிக்கு விருப்பம் இல்லை என்பதையே காட்டுகின்றது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக