13 ஜூலை 2011

தாம் நினைத்தவாறெல்லாம் நடக்க முடியாதென்பதை சர்வதேசம் அரசுக்கு உணர்த்தியுள்ளது.

தமிழ் மக்கள் தங்களின் பின்னால் நிற்கின்றார்கள் என்று உண்மைக்குப் புறம்பாக அரசாங்கம் கூறிவருகின்றது. அரசாங்கம் ஒருபோதும் உண்மை பேசுவது இல்லை என்பது சர்வதேச சமூகத்திற்கு நன்றாகத் தெரிந்த ஒன்றாகும். நடந்து முடிந்த தேர்தல்களில் காட்டியது போன்று எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால்தான் ஓரணியாகத் திரண்டு நிற்கின்றோம் என்பதை தமிழ் மக்கள் உலகுக்கு மீண்டும் எடுத்துக்காட்ட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
குச்சவெளிப் பிரதேசசபைத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து பிரசாரக் கூட்டங்கள் மதுரங்குளி,கல்லம்பத்தை, திரியாய் ஆகிய கிராமங்களில் நடைபெற்றன. அவற்றில் இரா.சம்பந்தன் பேசினார்.
சம்பந்தன் மேலும் பேசும்போது,
அரசியலில் ஜனநாயகம் மதிக்கப்பட வேண்டும். மக்களின் இறைமையைக் கருத்திற்கொள்ள வேண்டும். இலங்கை அரசாங்கம் இவற்றை எல்லாம் உதாசீனப்படுத்தி ஆட்சி நடத்துகின்றது. தங்களுடைய ஆட்சியில் நினைத்தபடி செயல்படலாம் என்று அரசாங்கம் நடந்து வருகிறது. ஆனால், சர்வதேச சட்டங்கள் எல்லாம் தலையிட ஆரம்பித்த பின்னர்தான் தாம் நினைத்தவாறெல்லாம் நடக்க முடியாது என்பதை அரசாங்கம் உணர ஆரம்பித்துள்ளது என்று தெரிவித்தார். நான் புத்தர் பெருமானை மதிக்கிறேன்.
அதற்காக திரியாய் பௌத்த விகாரைக்கு திரியாய் பிரதேசத்தின் மண்ணில் மூவாயிரம் ஏக்கரை தாரைவார்ப்பதற்கு அனுமதிக்க முடியுமா? அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அபிவிருத்தி என்ற பெயரில் பாலம் கட்டுவார்கள். மின்கம்பம் நடுவார்கள். பின்னர் அருகிலே புத்தர் சிலையும் வைப்பார்கள்.
இதனை அபிவிருத்தி என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்கென சர்வதேச சமூகம் வழங்கும் நிதியில் ஒரு சிறு பகுதிதான் தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்கு இன்று அரசாங்கத்தினால் செலவழிக்கப்படுகிறது. எம்மண்ணை நாம் பாதுகாக்க வேண்டும். பின்சந்ததிக்காக தமிழ் மக்கள் பாரம்பரிய வாழ்விடத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் உறுதியுடன் செயல்பட வேண்டும் என்றும் சம்பந்தன் கூறினார்.
சர்வதேச நீதிமன்ற விசாரணைக்குப் போவதா, இல்லையா என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும். விசாரணைக்குப் போகும்படி நாம் கூறவில்லை. போகவேண்டாம் என்றும் நாம் அவருக்குக் கூறவில்லை. ஆனால், ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் நாம் வற்புறுத்துவது ஒன்றை மாத்திரமே.
அது தமிழ் மக்களின் பிரச்சினைக்குச் சரியான அரசியல் தீர்வு ஒன்றைக் காண வேண்டும் என்பதையே அவரிடம் வற்புறுத்தி வருகின்றோம்.பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் பிறநாடுகள் உள்விவகாரங்களில் தலையிடுகின்றன. அது வேண்டாம் என்று கூறும் அரசாங்கத்தின் வாதம் உலக அரங்கில் இனி எடுபடாது என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் பேசும்போது, தமிழ் மக்கள் தங்கள் ஒற்றுமையை சர்வதேச சமூகத்திற்கு மீண்டும் எடுத்துக் காட்டுவதற்குக் கிடைத்த சந்தர்ப்பமே எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலாகும்.
இவ்வாய்ப்பைச் சரிவரப் பயன்படுத்துவதன் மூலமே தமிழ் மக்கள் தங்களுக்கென்று தனித்துவமான அரசியல் தீர்வொன்றைப் பெற முடியும் என்று கூறினார். திருகோணமலை மாவட்ட முன்னாள் எம்.பி. க.துரைரெட்ணசிங்கமும் கூட்டத்தில் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக