21 ஜூலை 2011

தேர்தல் விதிமுறைகளை அப்பட்டமாக மீறியுள்ளார் மகிந்த ராஜபக்ச.

தேர்தல் விதிமுறைகளை ஜனாதிபதியே அப்பட்டமாக மீறியுள்ளார். ஜனாதிபதியும் அமைச்சர்களும் அதிகாரிகளும் ஆட்திரட்டல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் ஆணையாளரோ நலத்திட்டங்கள், வேலைத்திட்டங்கள், வேலைவாய்ப்புக்கள் நிதிஒதுக்கீடுகள் என்பவை தேர்தல் விதிமுறைகளை மீறுபவை என அறிவித்துள்ளார். ஆனால் அவை அனைத்தையும் ஜனாதிபதியே மீறியுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி இவ்வாறான சிறிய தேர்தல் விதிமுறையை மீறுவது மக்களை அச்சமூட்டுவதாக இருக்கிறது. இதை நாங்கள் கண்டிக்கிறோம். இங்கு நீதியான தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என கபே உள்ளிட்ட கண்காணிப்பு அமைப்பினரும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரம சிங்கவும் கூறிவருகின்றனர். அதனையே நாமும் கூறிவருகின்றோம்.
வாக்காளர் அட்டைகள் ஒழுங்காக விநியோகிக்கப்படவில்லை, கிளிநொச்சியில் விநியோகிக்கப்பட்ட வாக்காளர் அட்டைகளை படையினர் வீடுவீடாகச் சென்று பெற்று வருகின்றனர். தீவகத்தில் உள்ள தபாலகத்தில் வாக்காளர் அட்டைகளை இனந்தெரியாதவர்கள் எடுத்துச் சென்றுள்ளார்கள்.அரச தரப்பினரும் அதன் அதிகாரிகளும் இராணுவத்தினரும் முறைகேடாக தேர்தலை நடாத்தி வெற்றியீட்ட முற்படுகின்றனர். தீவகப்பகுதிகளுக்கு அரசாங்கத்தின் பங்கு கட்சி தவிர்ந்த எவரும் பிரச்சாரத்திற்கு செல்லமுடியாது உள்ளது. மக்களை நாங்கள் நேரடியாக சந்திக்க சென்றால் பழிவாங்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது.
கடந்த காலங்களில் கூட்டமைப்பு மட்டுமன்றி முன்னாள் அமைச்சரான அமரர் மகேஸ்வரன் கூட தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த வகையில் தீவக வாக்காளர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் நிலைப்பாட்டை பற்றி மாற்றுவழிகள் ஊடாக தெரியப்படுத்தியுள்ளோம். தீவகத்தில் எமது கட்சி வேட்பாளர்களினதும் வாக்காளர்களினதும் பாதுகாப்பு தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கு தெரியப்படுத்தி கூடியளவு கண்காணிப்பாளர்களை நியமிக்குமாறும் கோரியுள்ளோம்.
ஜனாதிபதி மீதும் அரசினர் மீதும் ஐ.நா. போர்க்குற்றம் சுமத்தப்பட்டநிலையில் இனப்பிரச்சினை தொடர்பில் சர்வதேசம் பேசி வருகின்ற நிலையில் கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிடாது தமிழ்தேசியகூட்டமைப்பிற்கு வாக்களிக்குமாறு அரசியல் தீர்வை பெறுவதற்கு ஒரேயணியில் பொதுமக்கள் திரள வேண்டும் எனவும் கோருகின்றோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக