08 ஜூலை 2011

தமிழர்களுக்கு எதிரான அடாவடித்தனங்களை நிறுத்தாவிட்டால் மக்கள் போராட்டம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு எதிராக அரங்கேற்றப்படுகின்ற அனைத்து நடவடிக்கைகளையும் அரசு நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தாவிட்டால் எனது தலைமையில் தமிழ் மக்களை ஒன்றுதிரட்டி அரச எதிர்ப்பு பிரசாரங்களை ஆரம்பிப்போம். அரசும் தோற்கடிக்கப்படும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நாடாளுமன்றில் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போதைய நிலைவரம் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை நேற்று நாடாளுமன்றில் முன்வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு சூளுரைத்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கை 1947இல் சுதந்திரமடைந்து, சிறிது காலத்திலிருந்தே 1956, 1958, 1977, 1980, 1983 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற இனக்கலவரம் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்களைப் பெரிதும் பாதித்து கொடுமைக்கு உள்ளாக்கி வருகிறது.
இலங்கைப் பிரஜைகள் என்ற வகையில் நியாயமாகவும் சமமாகவும் நடத்தப்படுவதற்கும், தமது நியாயமான அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார அபிலாஷைகளைப் பூர்த்தி செய்தவாறு பாதுகாப்பாகவும் கெளரவத்துடனும் வாழ்வதற்கான அடிப்படை உரிமைக்கான தமிழ் மக்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளே இவ்வாறான வன்முறைக்கான அடிப்படைக் காரணமாகும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்களினால் அவர்தம் ஜனநாயகத் தீர்ப்பு மூலம் 1956 முதல் நடைபெற்ற சகல நாடாளுமன்ற மற்றும் மாகாண, மாவட்ட மற்றும் உள்ளூராட்சி மட்டத் தேர்தல்களிலும் இந்தக் கோரிக்கை தொடர்ச்சியாக அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளது.
தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசுகள் தமிழ் மக்களின் இந்த ஜனநாயகத் தீர்ப்பை அங்கீகரிப்பதற்குத் தவறியமையும் இலங்கைப் பிரஜைகளாக நியாயமாகவும் சமமாகவும் நடத்தப்படல் வேண்டும் எனத் தமிழ் மக்கள் விடுத்த தொடர்ச்சியான கோரிக்கைகளுமே தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இவ்வாறான இனக் கலவரங்களுக்கான மூல காரணம்.
இலங்கைப் பிரஜைகளாக நியாயமாகவும், சமமாகவும் நடத்தப்படல் வேண்டும் எனக் கோரி தமிழ் மக்கள் சுதந்திரம் கிடைத்த காலம் முதற்கொண்டு 1970களின் நடுப் பகுதி வரை நடத்திய அரசியல் போராட்டங்கள் சமாதானமானவையாகவும் அஹிம்சை வழியிலானதாகவும் இருந்துவந்துள்ளது.
தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட தொடர்ச்சியான வன்முறைகள், தமிழ் மக்களின் நியாயமான அரசியல் மற்றும் ஏனைய அபிலாஷைகளை அரசியல் ரீதியாக நிறைவேற்றத் தவறியமை மற்றும் நாடு எந்த அரசமைப்பின் கீழ் சுதந்திரம் அடைந்ததோ அந்த அரசமைப்பை நீக்கிவிட்டு தமிழ் மக்களின் கருத்தொருமிப்பின்றிப் புதிய அரசமைப்பை இயற்றியமை ஆகியவையே சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கைக்கும் சுமார் மூன்று தசாப்தகாலம் நீடித்த தமிழ் இளைஞர்களின் ஆயுதப் பேராVட்டங்களுக்கும் இட்டுச்சென்றது.
இந்த ஆயுதப் போராட்டமானது இந்த நாட்டிலுள்ள சகல இனங்களையும் சார்ந்த பொதுமக்களுக்குப் பெருமளவு தீங்கு ஏற்படுத்தி கட்டுக்கடங்காத வன்செயல்களுக்கும், உள்ளூர் மற்றும் பிராந்தியத் தலைவர்களின் படுகொலைகளுக்கும் வழிவகுத்ததோடு, இந்தக் கட்டுக்கடங்காத வன்செயல்களினால் இலங்கைப் பிரஜைகள் என்ற வகையில் நீதிக்கும் சமத்துவத்துக்குமான தமிழ் மக்களது போராட்டத்தின் நியாயத்தன்மை மழுங்கடிக்கப்பட்டது.
இந்த ஆயுதப் போராட்டமானது 2009 மே மாதத்தில் தோற்கடிக்கப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது.இந்த ஆயுதப் போராட்டம் முடிவுற்று இப்போது இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. பிரிவுபடாத ஐக்கிய இலங்கையில் சம பிரஜைகளாக வாழ்வதற்கான தங்கள் விருப்பத்தைத் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பிணக்கு சம்பந்தப்பட்ட பிரதான விடயங்களைக் கையாளுவதற்கும் நீண்ட காலமாகப் புரையோடிப் போயுள்ள இந்தப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை உருவாக்குவதற்கும் பல நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையானது இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது.
இலங்கை வாழ் பல்வேறு சமூகங்களுக்கும் மக்களுக்கும் மத்தியில் உண்மையான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தும் வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை உருவாக்குவதற்கும் இந்தப் பிணக்கு சம்பந்தப்பட்ட பிரதான விடயங்களை கையாள்வதற்குமான அவசரத் தேவை மீது இந்தச் சபையினதும், அரசினதும், நாட்டினதும் கவனத்தை ஈர்ப்பதே இந்தப் பிரேரணையின் நோக்கமுமாகும்.
1956ஆம் ஆண்டு கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த வன்செயல் மற்றும் அதன் பின்னைய தொடர்ச்சி ஆகியவை காரணமாகப் பெருமளவில் இலங்கைத் தமிழ் மக்கள் இலங்கையிலிருந்து வெளியேறி உலகம் பூராகவுமுள்ள ஏனைய நாடுகளில் புலம்பெயர்ந்தவர்களாகி அல்லது தஞ்சம் தேடுபவர்களாகி இருக்கின்றனர்.
இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்தி, இந்த நாட்டைச் சேர்ந்தவர்களான, உண்மையில் இந்த நாட்டுக்கு சட்டபூர்வமாக உரித்துடையவர்களான இலங்கைத் தமிழ் மக்கள் இலங்கையில் தொடர்ந்து வாழக்கூடியதாகச் செய்வது அவசியமானதாகும்.
அந்த மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதும் அவர்களது கெளரவத்தை மீள ஏற்படுத்துவதும், ஆள்வதற்கான வாய்ப்பைக் கொண்டிருப்பதன் மூலம் தமது சட்டபூர்வ அரசியல், சமூக, பொருளாதார, காலாசார அபிலாஷைகளை அவர்கள் பூர்த்தி செய்யக்கூடியதுமான ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்று இருந்தால் மாத்திரமே இது சாத்தியமாகும்.
ஆயுதப் போர் நடைபெற்ற காலம் முழுவதும் குறிப்பாக அதன் இறுதி வருடங்களிலும், இறுதிக் கட்டங்களிலும் அதிக எண்ணிக்கையான தமிழ்மக்கள் கொல்லப்பட்டு அல்லது அங்கவீனமாக்கப்பட்டு பல இலட்சக்கணக்கான தமிழ்மக்கள் இடப்பெயர்வுக்கு உட்பட்டு, அவர்களுடைய வீடுகளும், ஏனைய சொத்துகளும் அழிக்கப்பட்டு, அவர்கள் நிர்க்கதிக்குள்ளாக்கப்பட்டு அடிப்படை வசதிகளுடன் தமது வாழ்வை மீளத் தொடங்க முடியாது உள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் தம்மைத் தாமே காத்துக்கொள்ள முடியாதுள்ள இந்தளவு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தமது வாழ்க்கையை மீளக் கட்டியயழுப்பக்கூடிய வகையில் அவர்களது அவசர தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய எந்தவொரு வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சிநிரலும் இல்லாதுள்ளது. இந்த மக்கள் வரலாற்றுக் காலந்தொட்டு வாழ்ந்துவரும் பகுதிகளில் அரசாலும், அதன் முகவர்கள் மற்றும் அரசியல் செல்வாக்குடையவர்களாலும் காணி, சமய வழிபாட்டிடங்கள், கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு துறைகள் தொடர்பான, அம்மக்கள் மீது அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியாகப் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்துகின்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவற்றுக்குப் பரிகாரம் காணாதவிடத்து அது நீண்டகாலத்தில் அவர்களின் எதிர்கால வாழ்வில் பெரும் தீங்கேற்படுத்தும். இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அரசின் கடமை.
1. முரண்பாட்டுக்குக் காரணமான அடிப்படை விடயங்களைத் தீர்ப்பதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடியதொரு அரசியல் தீர்வொன்றை துரிதமாகக் காணவேண்டும்.
2. இடம்பெயர்ந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்கையை மீளக் கட்டியயழுப்பவும் மீள ஆரம்பிக்கவும் உதவும் பொருட்டு வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலொன்றைத் துரிதகதியில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
3. தமிழ் மக்கள் மீது பாதகமான அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார தாக்கங்களை ஏற்படுத்துகின்ற பல்வேறு நடவடிக்கைகளை மாற்றியமைப்பதற்கும் சீர்செய்யவும் மற்றும் நிவர்த்திசெய்யவும் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக