02 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரம், தமிழக சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி என்பனவற்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் குடும்ப உறுப்பினர்கள்மத்தியில் பிளவு ஏற்பட்டிருப்பதுடன், தி.மு.க.வை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மற்றும் நிர்வகிப்பது தொடர்பாக கட்சியின் தலைவர் கருணாநிதி தனது வழிமுறையை மாற்றிக் கொள்ளவேண்டிய அழுத்தங்கள் தீவிரமாக அதிகரித்து வருகின்றன.
இந்த வார இறுதியில் கருணாநிதியின் குடும்பத்தினர் மத்தியில் ஏற்பட்டிருந்த கடுமையான முரண்பாடுகளையடுத்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடற்கரையோரமிருந்த வீடு ஒன்றிக்கு சடுதியாக புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
தி.மு.க.வின் அடுத்த தலைவர் என கருத்தப்பட்ட முன்னாள் துணை முதல்வர் எம்.கே.ஸ்டாலினுக்கும் தகப்பனாருக்கும் இடையே கடுமையாக தர்க்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்தே கருணாநிதி வெளியேறிச் சென்றதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை நேற்று தெரிவித்திருக்கிறது.
ஆலோசகர்கள், உதவியாளர்கள் என்று பெரும் பரிவாரத்துடன் கருணாநிதி பயணம் மேற்கொள்வது வழமையாகும். ஆனால், தனது தனிப்பட்ட செயலாளர் கே.சண்முகநாதனுடன் அன்றைய தினம் கருணாநிதி மகாபரிபுரத்துக்குச் சென்றுள்ளார். 40 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கடற்கரை வீட்டுக்கு அவர் சென்றதையிட்டு பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. கருணாநிதியின் மற்றொரு மகனும் மத்திய அமைச்சருமான அழகிரி, இளைய மகளான கனிமொழி தொடர்பாக தந்தையுடன் ஸ்டாலின் அரைமணிநேரம் வாக்குவாதப்பட்டதாகவும் அதனையடுத்தே கருணாநிதி வெளியேறியதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறியுள்ளன. கட்சி அரசியலில் அழகிரியின் பங்களிப்பு 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் கனிமொழியின் சம்பந்தம் என்பன தொடர்பாகவே ஸ்டாலின் வாக்குவாதப்பட்டதாகக் கூறப்படுகிறது. நகரத்திலுள்ள தி.மு.க.தலைமையகமான அறிவாலயத்தை விட்டு அவர் வெளியேறியுள்ளார். கோயம்புத்தூரில் ஜூலை 23 இல் தி.மு.க.வின் பொதுச் சபைக் கூட்டம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த முரண்பாடுகள் தி.மு.க.வின் முதல் குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் 87 வயதுடையவரும் சக்கர நாற்காலியில் சென்று வருபவரான கருணாநிதி அன்றையதினம் மாலை சென்னைக்கு திரும்பிவிட்டார்.
தி.மு.க.பெண்கள் அணியில் உறுப்பினர்கள் தெரிவித்திருந்த முறைப்பாடு குறித்து கலந்துரையாட கட்சித் தலைமையகத்துக்கு ஸ்டாலினை கருணாநிதி அழைத்திருந்தார். கடந்த ஒரு வாரமாக தனது தந்தையை ஸ்டாலின் சந்திக்காமல் விலகியிருந்ததாக வட்டாரங்கள் கூறின. தி.மு.க.வை மறுசீரமைத்தல் மற்றும் தலைமைப்பதவிக்கு தன்னை நியமித்தல் போன்ற விடயங்களில் தந்தை மறுத்துவருவதையிட்டு ஸ்டாலின் கவலையடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தி.மு.க. பெண்கள் அணியினர் கடந்த வியாழக்கிழமை கருணாநிதியிடம் ஸ்டாலின் தொடர்பாக முறைப்பாடு தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக விளக்கம் கேட்க ஸ்டாலினை கருணாநிதி அழைத்திருந்தார். தனது சகோதரி கனிமொழியுடன் பெண்கள் அணியினர் நெருக்கமாக இருப்பதாக ஸ்டாலின் குற்றச்சாட்டுத் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. அத்துடன் அழகிரி மோதலை உருவாக்க முயற்சிப்பதாக ஸ்டாலின் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை தி.மு.க.வின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
தனது மகளை கருணாநிதி நியாயப்படுத்தியுள்ளார். அதேசமயம் தனது நிலைப்பாட்டை ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதனால் இருவரும் விசனத்துடன் கட்சித் தலைமையகத்தை விட்டு வெளியேறியுள்ளனர். பின்னர் கருணாநிதியின் கோபாலபுர வாசஸ்தலத்தில் அவரின் மூத்த மகளான செல்வி, அழகிரி மீது குற்றம்சாட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடும்பத்திற்கும் குழப்பத்தை ஏற்படுத்த அழகிரி முயற்சிப்பதாக செல்வி குற்றம்சாட்டு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கடந்த காலத்தில் தனது தகப்பனுக்கு எதிராக ஸ்டாலின் ஒருபோதும் கதைப்பதில்லை. ஆனால் இந்தத் தடவை அவர் உறுதியாக நின்றதுடன் அடுத்த தலைமைப்பதவி யாருக்கு என்பதை தனது தந்தை விரைவில் தீர்மானிக்க வேண்டுமென்று கூறியதாக முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
வாரிசு போட்டி விவகாரம் குடும்பத்தின் இயக்கவியலில் ஓர் அங்கமாக இருந்து வருகிறது. தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்தமை, அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதிகாரத்தில் இருக்க முடியாத தன்மை என்பன கட்சிக்குள் முரண்பாடுகளை அதிகரிக்கச் செய்துள்ளது. கட்சி விவகாரங்களில் பல்வேறு பிரிவினர் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைக்குமாறு அவரின் அணியினர் கருணாநிதியை வலியுறுத்துவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளை, கருணாநிதியே தொடர்ந்தும் தலைமைப்பதவியிலிருக்க வேண்டுமென்பதில் அழகிரியின் ஆதரவாளர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். கட்சியை தற்போதைய தருணத்தில் மறுசீரமைப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் கூறுகின்றனர்.
தி.மு.க.வின் பொதுச் சபைக் கூட்டத்தில் முக்கிய பதவிகளை பெற்றுக் கொள்ள ஸ்டாலின் முகாம் உபாயத்தை வகுத்து வருவதாகக் கூறப்படுகிறது. கட்சி விவகாரங்களில் குடும்ப உறுப்பினர்களின் தலையீடு இருப்பது தொடர்பான விவகாரம் பற்றி பொதுச் சபைக் கூட்டத்தில் எழுப்பப்படவுள்ளதாக அறியவருகின்றது. இந்த விடயம் குறித்து தகப்பனாரிடம் அழகிரி கதைத்ததாகவும் அத்துடன் 2 முக்கியமான மாவட்டங்களின் செயலாளர்களை இராஜிநாமாச் செய்யக் கோரியதாகவும் இந்த விடயம் கருணாநிதிக்கு கவலையை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. தலைமை வாரிசு போட்டியால் குடும்ப உறுப்பினர்கள் பிளவு பட்டிருக்கும் நிலையில் இந்த விடயம் கட்சித் தொண்டர்கள் மத்தியிலும் பிளவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் தி.மு.க.வின் பொதுச் சபைக் கூட்டம் சூடானதாக இருப்பதை பார்க்கக் கூடியதாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக