19 ஜூலை 2011

யாழ்ப்பாண நாய்களுக்கும் தமிழுணர்வுண்டு,அவை சிங்களம் போடும் எலும்புகளை கெளவுவதில்லை.

நாய் நன்றி உள்ள மிருகம் அதிலும் சிறப்பாக யாழ்ப்பாணத்திலுள்ள நாய்கள் தமிழ் உணர்வு மிக்கவை. காரணம் அரசாங்கம் அதன் அமைச்சர்களும் போடுகின்ற எலும்புத் துண்டுகளைக் கூட கௌவிச் செல்வதில்லை. இதன் காரணமாக இன்று நாய்களின் தலைகளை வெட்டி இனவெறியை காண்பிக்கும் அளவுக்கு யாழ்ப்பாணத்தில் நாய்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இவ்வாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குறிப்பிட்டார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மேலும் பேசுகையில், யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வீட்டு வாசல்களில் சிலர் மலர்வளையம் சாத்திவிட்டும் கழிவு நீரை ஊற்றிவிட்டும் செல்கின்றனர். இத்தகை யோருக்கு நாம் கூறுவது இதுதான், இன்று தமிழினம் ஒன்றுபட்ட சக்தியாக விழிப்படைந்து விட்டது. சோரம் போகும் இனமல்ல மானமுள்ள மறவர் குலம். எதிர்வரும் 23ஆம் திகதி எமது வேட்பாளர்களின் முற்றத்தில் சாத்தப்பட்ட மலர் வளையங்கள் வரலாறு காணாத வெற்றியினைப் பெறும்.
எமது வேட்பாளர்களின் கழுத்தில் நறுமண மலர்களாக விழவுள்ளன. கழிவு நீர்களின் துர்நாற்றம் அகன்று பன்னீர் வாசம் பரவவுள்ளது. வடக்கு கிழக்கில் மட்டுமன்றி சர்வ தேச நாடுகளிலும் தமிழினம் உணர்வுடன் தயாரித்துள்ள பன்னீர்வாசம் பரவவுள்ளது. அபிவிருத்தி அபிவிருத்தி என்று வடக்குக்கும் கிழக்குக்கும் படையெடுக்கும் அமைச்சர்களும் அவர்களின் எடுபிடிகளாக உள்ளவர்களும் கடந்த பன்னிரெண்டு வருட காலமாக சிறையில் வாடும் தமிழ் இளைஞர், யுவதிகளை விடுதலை செய்து விட்டு அபிவிருத்தி பற்றி பேசட்டும் பார்க்கலாம்.
வடக்கு கிழக்கில் வகை தொகையின்றி இடம்பெற்ற கைதுகள், ஆட்கடத்தல்கள், படுகொலைகள் என்பன பற்றி இந்த அபிவிருத்தி அரசியலாளர்கள் மௌனமாக இருப்பது ஏன்? அப்பாவி தமிழ் இளைஞர், யுவதிகளை சிறையில் அடைத்து வைத்திருப்பது சிறைக்கூடங்களை அழகுபார்க்கும் அபிவிருத்தியா?
வடக்கில் ஒரு கதையும் கிழக்கில் ஒரு கதையும் தெற்கில் ஒரு கதையும் என ஒரே நாவால் பேசும் அரசியல் எமக்குத் தெரியாது. அன்று தொட்டு இன்றுவரை எல்லா இடங்களிலும் நாம் ஒரே பேச்சுத் தான் பேசுகின்றோம். நாம் இடத்திற்கிடம் மாறுபட்ட விதத்தில் பேசி அரசியல் நடத்தும் வங்கு ரோத்துக்காரர்கள் அல்ல.
தமிழினத்தின் வாக்கு வங்கியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே உள்ளது.இந்த வங்கியை சூறையாட முனையும் கூட்டத்திற்கு சுட்டெரிக்கும் சூரியன் போன்று சூட்டுக்கோல் வைக்க தமிழினம் தயார் நிலையில் விழிப்புடன் உள்ளது யூலை 23 ஆம் திகதி.
தமிழ் நாட்டிலுள்ள தமிழர்கள் அன்றைய ஆட்சியாளர்கள் வழங்கிய நிவாரணங்களை யெல்லாம் பெற்ற கையோடு எதுவுமே கொடுக்காமல் இலங்கைத் தமிழர்களுக்காக பரிந்து பேசியதற்காக ஜெயலலிதாவை முதலமைச்சராக்கிய வரலாற்றை மறந்து போல் நேரடியாக வெந்து போயுள்ள மக்களுக்கு நிவாரணங்களை காட்டி வாக்கு கேட்க முனைவது வேடிக்கையாக உள்ளது. அற்ப சொற்ப சலுகைகளுக்காகவும் சுயலாபங்களுக்காகவும் அரசியல் செய்பவர்களை துரோகிகள் என்று பொதுப் பெயர் சூடி அழைக்கும் இனம் தமிழினம்.
கடந்த 62 வருட காலமாக அஹிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடிய தமிழினத்திற்கு கௌரவமான அரசியல் உரிமை வழங்கப்படாது போனால் மீண்டும் வடக்கு கிழக்கில் உள்ள மக்களை அணிதிரட்டி போராடவுள்ளதாக சம்பந்தன் ஐயா பாராளுமன்றத்தில் சூளுரைத்துள்ளார். அவ்வாறான போராட்டம் மக்கள் சக்தியுடன் இலங்கையில் மட்டும் இடம் பெறாது தமிழினம் புலம்பெயர்ந்து வாழும் நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளிலும் ஒரே நேரத்தில் இடம்பெறும்.
இது சர்வதேச மயமான போராட்டமாக வெடிக்கும். ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் கௌரவமான அரசியல் தீர்வை எமக்கு அளிக்க வேண்டும். இந்தியாவினதும் சர்வதேச சமூகத்தினதும் அழுத்தம் காரணமாக நாம் இதுவரை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இந்த பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்ட எந்தவொரு விடயம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இருப்பினும் நாம் பொறுமை காப்பதன் நோக்கத்தை மக்கள் புரிந்து கொள்வர். பதின்மூன்றாவது அரசியலமைப்பு காலாவதியாகி விட்டதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த கூறுகின்றார். அப்படியாயின் பதின் மூன்றாவது அரசியலமைப்பின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைகளை கலைத்துவிட்டு அவற்றின் முதலமைச்சர்களை வீட்டுக்கு அனுப்ப அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவுக்கு முடியுமா?
வாய்க்கு வந்தபடி பேசுகின்றவர்களுக்கு எமது தமிழ் மக்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி சரியான பதிலை அளிக்கவுள்ளனர். அப்போது உண்மை புலனாகும் உலகறியும் தமிழினத்தின் தன்மான உணர்வை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக