19 ஜூலை 2011

யாழ்,பிரதேச செயலர் ஒருவரை செருப்பால் அடிப்பேன் என மிரட்டிய முஸ்லீம் அமைச்சர்.

குடாநாட்டிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர்களால் என்றுமில்லாதவாறு அரச அதிகாரிகள் நெருக்குவாரங்களையும் அவலங்களையும் சந்திப்பதாக குற்றச்சாட்டுக்களும் சீற்றங்களும் எழத்தொடங்கியுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு தனது தனிப்பட்ட விஜயம் தொடர்பாக சென்றிருந்த முஸ்லீம் அமைச்சர் ஒருவர் பிரதேச செயலாளர் ஒருவரை செருப்பால் அடிப்பேன் எனக் எச்சரித்தாக அச்சமூட்டும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த தனது குடும்ப அங்கத்தவரை பார்வையிடுவதற்காக மன்னாரில் அண்மையில் சர்ச்சைகளை ஏற்படுத்திய குறித்த அமைச்சர் சென்றுள்ளார். இந்நிலையில் அந்த உறவினர்களுடன் பள்ளி வாசலுக்கும் அவர் சென்றிருந்தார். அவ்வேளையில் யாழ்ப்பாணத்தில் மீளக் குடியமர்ந்த முஸ்லீம் மக்களுக்கான உதவிகள் உரிய வகையில் வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து உடனடியாக தொலைபேசியூடாக அரச அதிபரைத் தொடர்புகொண்டபோது அரச அதிபர் இந்த விடயங்களுக்கு தான் பொறுப்பல்ல எனவும் யாழ்ப்பாண பிரதேச செயலரே இதற்குப் பொறுப்பெனக் கூறி காய் வெட்டியுள்ளார்.
உடனே யாழ் பிரதேச செயலருக்கு தொலைபேசியூடாக அழைப்பை எடுத்த அமைச்சர் தாறுமாறாகப் பேசத்தொடங்கியுள்ளார். ஒரு பெண் என்று கூடப் பாராது செருப்பால் எடுத்து அடிப்பேன் எனவும் அரசிடம் இருந்து கிடைக்கும் சலுகைத் திட்டங்களை நீங்கள் முடக்கி வைத்திருப்பதாகவும் வீடுகளுக்குக் கொண்டு செல்வதாகவும் கூட அமைச்சர் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.
அண்மைக் காலமாக பிரச்சார நடவடிக்கைக்கு என யாழ்ப்பாணத்திற்கு பெருமளவு அமைச்சர்கள் படையெடுத்து செல்லுகின்ற நிலையில் அரச அதிகாரிகள்பாடு திண்டாட்டமாக இருக்கின்றது. அரச அதிகாரிகள் தாங்கள் சாதாரண கூலித் தொழிலாளிகள் போன்று அமைச்சர்களால் நடத்தப்படுவதாக அச்சஞ்கொள்கின்றனர். பெரும்பாலான அரச உயர்மட்ட அதிகாரிகள் தமது பதவி இருப்பிற்றகாக இடைநிலை அதிகாரிகளை பலிக்கடா ஆக்குவதாக அவர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக அரச சாதனைகள் தொடர்பான விளம்பரங்களை உள்ளுர் நாளிதழ்களில் பிரசுரிக்க வேண்டுமென நிர்ப்பந்திக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோப்பாய் பிரதேச செயலராகவும் ஏற்கனவே யாழ் செயலகத்தில் திட்டப் பணிப்பாளராகவும் இருந்த பிரதீபனை அடிப்பதற்கு கையோங்கிய சர்ச்சைகளும் உள்ளன. இந்நிலையில் அரச அமைச்சர்களின் உச்சகட்ட கெடுபிடிகளால் யாழ்ப்பாண அரச அதிகாரிகளும் திண்டாடிப்போயுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக