20 ஜூலை 2011

சிறீலங்காவை கலங்க வைக்கும் வகையில் மலேசியாவில் நடந்த மாபெரும் நிகழ்வு!

மலேசியாவில் ஈழத் தமிழர்களுக்காக நடைபெற்ற கூட்டத்தில் 1 மில்லியன் ரிங்கிட் நன்கொடை ! கடந்த 16ம் திகதி மலேசியாவில் ஈழத் தமிழர்களுக்கு உதவும் அறக்கட்டளை அமைப்பு ஒன்று மலேசிய தமிழர் பேரவையோடு இணைந்து நன்கொடை திரட்டும் நிகழ்வு ஒன்றை நடாத்தியிருந்தது.
இந் நிகழ்வில் சுமார் 1 மில்லியன் மலேசிய ரிங்கிட்டுகள் பணம் நன்கொடையாகப் பெறப்பட்டதாகவும், அவை அனைத்தும் ஈழத்தில் பாதிப்படைந்த சிறுவர்களுக்காகச் செலவிடப்படும் என உலகத் தமிழர் பேரவையும்(GTF) மற்றும் மலேசிய தமிழர் பேரவையும்(TFM) இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந் நிகழ்வுகளில் பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் அவர்கள் அதில் கலந்துகொள்ளமாட்டார்கள் என இலங்கை அரசு கருதி வந்தது. ஆனால் 16ம் திகதி இரவு நிலை தலைகீளாக மாறியது. பிரபல கோல்ஃப் கிளப்பில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தமிழ் எதிலிச் சிறுமிகள் முதலில் நாட்டிய நிகழ்வு ஒன்றை நடத்தினர்.
மலேசியாவின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான, மற்றும் 20 வருடங்களுக்கு மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மாண்புமிகு டாக்டர்.சாமி வேலு அவர்கள் இக் கூட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். தொழிலதிபர்கள், துறைசார் வல்லுனர்கள், புத்திஜீவிகள், ராஜதந்திரிகள், ஆளும் மற்றும் எதிர்கட்சி எம்.பீக்கள் என அந் நிகழ்வு ஏகோபித்த ஆதரவுடன் நடைபெற்றது.ஐரோப்பாவுக்கு வெளியே பிறிதொரு நாட்டில் ஈழத் தமிழர்களால் எதுவும் செய்துவிட முடியாது என இறுமாப்போடு இருந்த இலங்கை அரசுக்கு ஈழத் தமிழர்களின் பலம் இந் நிகழ்வூடாக மீண்டும் ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. மலேசியாவின் எதிர்கட்சி மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஈழத் தமிழர்களுக்காக ஒன்றுசேர்ந்து இந் நிகழ்வில் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
உலகத் தமிழர் பேரவை சார்பில் வணக்கத்துக்குரிய இமானுவேல் அடிகளார் இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நிகழ்சி ஆரம்பமாகி சிறிது நேரத்தில் அங்கே கலந்துகொண்டவர்கள் தமது நன்கொடைகளை வழங்கி இருந்தனர். இவை ஈழத்தில் அல்லலுறும் தமிழ் எதிலிச் சிறுமிகளுக்கு சென்றடையும் என உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் திரு.சுரேன் சுரேந்திரன் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக