பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பது தொடர்பில் எமது எதிர்ப்பினை நாம் ஏற்கனவே தெரிவித்து விட்டோம். இனப்பிரச்சினை தீர்வுக்கு தெரிவுக்குழு அமைக்கப்படுவதானது ஏமாற்று வித்தையென நாம் தெரிவித்துள்ளோம். இந்த நிலையில் அரசாங்கம் பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான பிரேரணையினை பாராளுமன்றத்தில் முன்வைக்குமானால் அது தொடர்பில் நாம் தீர்க்கமான முடிவுக்கு வருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இனப்பிரச்சினை தீர்வுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான பிரேரணையினை எதிர்வரும் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவில் 31 உறுப்பினர்களை உள்ளடக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?, இந்தத் தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு இடம்பெறுமா என்று கேட்டபோதே மாவை சேனாதிராஜா எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
இனப்பிரச்சினை தீர்வுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்படுவதானது ஏமாற்று வித்தையாகும். இதனை நாம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். இதனையும் மீறி அரசாங்கம் தெரிவுக்குழுவை அமைப்பதற்கான பிரேரணையினை முன்வைக்குமானால் அதுகுறித்து நாம் ஆராய்வோம்.
பிரேரணை பாராளுமன்றத்தில் வரும்முன்னர் கட்சித் தலைவர் கூட்டத்தில் இதுகுறித்து ஆராயப்படும். அவ்வேளையில் நாம் எமது கருத்தை அறிவிப்போம். தற்போது அவசரப்பட்டு கருத்துக் கூறுவதில் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.
எனவே கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் ஆராய்ந்து உரிய முடிவினை நாம் எடுப்போம் என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக