14 ஜூலை 2011

தென்சூடான் சுதந்திர விழாவில் நாடு கடந்த தமிழீழ அரசு.

தென் சூடானின் சுதந்திர விழாவில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தென் சூடான் அரசின் விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவாகாரத்துறை துணை அமைச்சர் கனகாந்திரம் மாணிக்கவாசகர், பிரதமர் அலுவலக பேச்சாளர் ஜெயப்பிரகாஷ் ஜெயலிங்கம் ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை தென் சூடானின் சுதந்திர நிகழ்வுகளில் உத்தியோகபூர்வமாக பிரதிநிதித்துவப் படுத்தியிருந்தனர்.
புதியதொரு நாட்டின் பிறப்பிற்கு ஏனைய அரச பிரதிநிதிகளுடன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் சாட்சிகளாக இணைந்திருந்தனர். தென் சூடான் சட்ட சபையின் சபாநாயகர் ஜேம்ஸ் வானி இக்கா அவர்களின் சுதந்திரப் பிரகடன உரையுடன் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து குழலிசையில் தேசியகீதம் ஒலிக்க, சூடானின் தேசியக்கொடி இறக்கப்பட்டு புதிய தென் சூடான் குடியரசின் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
குடியரசு தலைவர் சலிவா கீர் அரசியல் சாசனத்தில் கையெழுத்திட்டு சத்தியப்பிரமாணத்தை செய்து தென் சூடான் குடியரசின் தலைவராக பதவியேற்று பேசுகையில் ‘எமது மாவீரர்கள் வீணாக தமது இன்னுயிர்களை அர்ப்பணிக்கவில்லை இந்த நாளுக்காக நாம் 56 ஆண்டுகளுக்கு மேலாக பொறுத்திருக்க வேண்டியிருந்து. இந்த நாள் நிரந்தரமாக என்றைக்கும் எமது மனங்களிலும் நினைவுகளிலும் பொறிக்கப்பட்டிருக்கும்’ என்று கூறினார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்களின் வாழ்த்துச் செய்தியில் ‘தென் சூடான் மக்கள் சுதந்திரமான மக்களாகி அடையும் மகிழ்ச்சியை, தமிழீழ மக்களும் தெளிவாக புரிந்துகொண்டு அந்த மகிழ்வில் பங்குகொள்கிறார்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், தமிழீழ மக்களும் தென் சூடான் மக்களுக்கு, அவர்களின் விடுதலைக்காக தமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறார்கள். அவர்களின் தியாகத்துக்கு தலை வணங்கி அவர்களது உறுதியையும், வீரத்தையும் தமிழீழ மக்கள் பாராட்டுகிறார்கள்.’ என்று தெரிவித்துள்ளார்.
தென் சூடான் வானொலி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடனான நேர்காணலை ஒலிபரப்பியது. தென் சூடானின் சுதந்திரதின விழாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் பங்குபற்றியது மட்டுமன்றி, அங்கு தொடர்ந்து தங்கிநின்று தென் சூடானின் அபிவிருத்திக்கு குறித்த துறைகளில் புலம்பெயர்ந்த தமிழீழ மக்களின் துறைசார் வல்லுனர்கள், உதவக்கூடிய சந்தர்ப்பங்கள் பற்றி தென் சூடான் அரசாங்கத்துடன் கலந்துரையாடினர்.
மேலும், நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் சுதந்திரதின விழாவில் பங்குகொள்ள வந்திருந்த பல வெளிநாட்டு அரசாங்க பிரதிநிதிகளை சந்தித்து, ஈழத்தமிழரின் நிலைக்கும், தென் சூடானின் கடந்தகாலத்துக்கும் இடையேயான பொதுவான தன்மைகளை விளக்கினர். மேலும் அவர்கள் சிறிலங்கா அரசு புரிந்துவரும் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விபரங்களையும் வழங்கினர்.
சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்குமான உறவு புதியதல்ல. மே 2009ல் பிலடெல்பியாவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வில் உரையாற்றுவதற்காக, ஐக்கிய அமெரிக்காவிற்கான தமது செயலாளர் நாயகம் திரு டோமாக் வால் றுயாக் அவர்களை, சூடான் மக்கள் விடுதலை இயக்கம் அனுப்பி வைத்திருந்தது. தென்சூடானின் விடுதலைப் போராட்டத்துக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் உள்ள ஒற்றுமைகள் பற்றி அவர் பேசினார். மேலும் விடுதலைப் போராட்டங்கள் சந்திக்கும் சவால்கள் பற்றியும் ஈழமக்களுடனான தமது உறுதிப்பாட்டை குறிப்பிட்டும் அவர் உரையாற்றியிருந்தார்.
தென் சூடானில் இடம்பெற்றது போல ஈழத்திலும் சர்வதேச கண்காணிப்புடனான சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பை நடத்துமாறு சர்வதேச சமுகத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. 2009 இறுதிப்போரின் போது இடம்பெற்ற தமிழின படுகொலையால் தமிழர்களுக்கு தனியான நாடு ஒன்றே அவர்கள் உயிருடன் வாழ்வதற்கான ஒரே தீர்வு என்ற வகையில் தமிழரின் தனிநாட்டு கோரிக்கை மேலும் நியாயமானது என்பது இங்கு குறிப்பிட்டு காட்டப்படுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக